
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், தனியார் பாடசாலை அதிபரை கொலை செய்ததாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையடிக்கும் நோக்கில் வீட்டுக்குள் நுழைந்த அவர்கள், தங்களை அடையாளம் கண்டுகொண்டதால் அதிபரை 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொண்டமல்லே பாடசாலையில் உள்ள நாகார்ஜுனா பப்ளிக் பாடசாலையின் அதிபரும் இயக்குநருமான கல்லு ரூபா ரெட்டி (48), கடந்த 12ஆம் திகதி தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் ஐந்து தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்திய பொலிஸார், பாடசாலைக்கு தொடர்ந்து வருகை தராத ஐந்து 10ஆம் வகுப்பு மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அவர்களில் இருவர் சமீபத்தில் அதிகளவில் பணம் செலவழித்து வந்ததுடன், நண்பர்களுக்கு விருந்துகளும் வழங்கியிருந்தது தெரியவந்தது.
அவர்களை கைது செய்து விசாரித்தபோது, ரூபா ரெட்டியை கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டித்ததால் ஏற்பட்ட கோபம்; பின்னர் கொள்ளைத் திட்டம்!
கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் முன்னர் ரூபா ரெட்டியால் கண்டிக்கப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களது விடுதி அறையில் ஆயிரக்கணக்கான ரூபாய் பணமும் கையடக்கத் தொலைபேசியும் இருப்பதை ரூபா ரெட்டி கண்டுபிடித்து, பெற்றோருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
இதையடுத்து இருவரும் விடுதியில் இருந்து நீக்கப்பட்டு, வீட்டிலிருந்து பாடசாலைக்கு வந்து செல்லும் மாணவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்த அவர்கள், ரூபா ரெட்டியின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு, ஐந்து நாட்கள் வீட்டை நோட்டமிட்டுள்ளனர். மேலும், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கையுறைகள், கத்தி மற்றும் முகமூடி ஆகியவற்றை வாங்கியுள்ளனர்.
சம்பவ தினத்தன்று, மாணவர்களில் ஒருவர் முகத்தை மறைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து 2.50 இலட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். தப்பிச் செல்லும்போது அவரது முகமூடி கீழே விழுந்ததால், ரூபா ரெட்டி அவரை அடையாளம் கண்டுகொண்டதாக கூறப்படுகிறது.
தங்களை அடையாளம் காட்டிவிடுவார் என்ற அச்சத்தில், இரு மாணவர்களும் இணைந்து ரூபா ரெட்டியை 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.
கொலைக்குப் பயன்படுத்திய பொருட்களை புதைத்துவிட்டு, இருவரும் கோவாவுக்கு சுற்றுலா சென்று திரும்பியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் கொண்டமல்லேபாடசாலை டோனியாலா சந்திப்பில் இடம்பெற்ற வாகனச் சோதனையின்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் சிக்கினர்.
அவர்களிடமிருந்து 1.54 இலட்சம் ரூபாய் பணம், ஐபோன் மற்றும் கொலை செய்யப்பட்ட ரூபா ரெட்டியின் கையடக்கத் தொலைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments