Ticker

6/recent/ticker-posts

ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை தொடர்ந்து புறக்கணிக்கிறார்!


முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையாவதைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை மூன்று சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு முன்னிலையாகவில்லை.

தேசிய அதிர்ஷ்டலாப சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட முறைமைக்கு புறம்பாக 5 அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொண்டு, அவர்களைத் தனது தனிப்பட்ட ஊழியர்களாகப் பணியில் அமர்த்தியமை தொடர்பான விசாரணைக்கே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கடந்த ஜூலை 16 ஆம் திகதி முதன்முறையாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்திருந்த போதிலும், அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 30 ஆம் திகதி மீண்டும் அவர் அழைக்கப்படிருந்த போதிலும், தனது மகளின் திருமண நிகழ்வு இருப்பதாகக் கூறி ஆணைக்குழுவில் முன்னிலையாவதைத் தவிர்த்திருந்தார்.

இதன் பின்னர், நேற்று (28) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தனது சட்டத்தரணியால் அன்றைய தினம் வருகை தர முடியாது எனத் தெரிவித்து அவர் மீண்டும் தவிர்க்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து, இன்றைய தினமும் (29) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினமும் அவர் முன்னிலையாகத் தவறினால் அவருக்கு எதிராக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தேசிய அதிர்ஷ்டலாப சபையின் முன்னாள் தலைவியான ஷர்மிலா பெரேரா கைது செய்யப்பட்டு, கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரமை முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

lankatruth


 


Post a Comment

0 Comments