Ticker

6/recent/ticker-posts

ஒரு போட்டோவிற்கு 1450 மடங்கு கூடுதல் மின்சாரம்.. 80s போட்டோகளுக்கு AI செலவு எவ்வளவு தெரியுமா?


சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை 80-களின் ஸ்டைல் AI புகைப்படங்களை பதிவேற்றம் செய்து கொண்டுள்ளன்ர்.. சமூக ஊடகங்களின் இந்த வசீகரக் கொண்டாட்டத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அசுரத்தனமான விலையைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்த தொகுப்பு...

அண்மை காலமாக சமூக ஊடகங்களை 'நாஸ்டால்ஜியா' அலை ஆட்கொண்டுள்ளது. '80-களின் ஸ்டைல் AI புகைப்படங்கள்' உருவாக்கும் டிரெண்ட் இப்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதற்கு முன் 'Ghiblify' டிரெண்ட் இன்ஸ்டாவிலும், பேஸ் புக்கிலும் கொடி கட்டிப் பறந்தது.

இது காண்பதற்கு மிக எளிமையானதாகத் தோன்றலாம். Chatgpt. Gemini போன்ற செயற்கை நுண்ணறிவு தளங்களில் புகைப்படத்தைப் பதிவேற்றி ஒரே ஒரு Prompt- டை கொடுத்தால் டிரெண்டுகளுக்கு ஏற்ப படம் தயாராகிவிடுகிறது. ஆனால், அந்த டிஜிட்டல் படத்திற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய இயற்பியல் உள்கட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது.

AI மூலம் புகைப்படங்களை உருவாக்க பிரம்மாண்டமான கணினி செயலாக்க சக்தி தேவைப்படுகிறது. இது பொதுவாகத் தரவு மையங்களில் வைக்கப்பட்டுள்ள பிரத்யேகச் Chip-கள் மூலம் வழங்கப்படுகிறது. அந்த இயந்திரங்கள் 24 மணி நேரமும் இயங்கும் போது, மிக அதிக அளவிலான மின்சாரத்தை நுகர்கின்றன. அதிதீவிர வெப்பத்தை வெளிப்படுத்துகின்றன.

இந்தச் சூட்டைத் தணிப்பதற்காகச் சர்வர்களைக் குளிரூட்டும் அமைப்புகள் தேவைப்படுகின்றன. தரவு மையம் எங்கு அமைந்துள்ளது, அது எந்த வகையான மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் எப்படிக் குளிரூட்டப்படுகிறது என்பதைப் பொறுத்து, நீர் மற்றும் மின்சார பயன்பாடு இருக்கும் . செயற்கை நுண்ணறிவு அமைப்புகளிடம் டைப் செய்து விளக்கம் பெறும் பணியை விட ஒரே ஒரு புகைப்படத்தை உருவாக்குவதற்கு 1,450 மடங்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது.

ஒரு AI புகைப்படத்தை உருவாக்கத் தேவைப்படும் மின்சாரத்தைக் கொண்டு, 10-வாட் LED பல்பை சுமார் 17 நிமிடங்கள் எரிய வைக்க முடியும். இதுவே ஒரு குறுகிய AI வீடியோ என்றால், 42 மணிநேரம் வரை எரிய வைக்கலாம். ஒரு AI புகைப்படத்தை உருவாக்குவதற்கான மின்சார உற்பத்திக்கு மட்டும் சுமார் 29 மில்லி லிட்டர் நீர் பயன்படுத்தப்படுகிறது.

AI மாதிரிகளுக்குப் பயிற்சியளிப்பதை விட, அன்றாடப் பயன்பாட்டில் பயனர்கள் Prompt கொடுத்து புகைப்படங்களை உருவாக்குவதன் மூலமே AI-ன் ஒட்டுமொத்த மின்சார நுகர்வில் 90 சதவிகிதம் வரை செலவாகிறது. 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் 1,500 கோடிக்கும் அதிகமான படங்கள் உருவாக்கப்பட்டதாகவும், 2023-இல் தினமும் சராசரியாக 3.4 கோடி படங்கள் உருவாக்கப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

தற்போது சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ள இந்த '1980s Retro Trend' மூலம் இதுவரை எத்தனை கோடி படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை கணக்கிட முடியவில்லை.. காரணம் இந்த Trend இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போதைய மின்சார மற்றும் நீர் பயன்பாட்டைத் தாண்டி, 2030-ஆம் ஆண்டிற்குள் AI தரவு மையங்களுக்கு மட்டும் ஆண்டிற்கு சுமார் 945 Terawatt மின்சாரம் தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சாரத்தின் அளவு, ஜப்பான், ஜெர்மனி போன்ற தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளின் ஓராண்டு மின்சார நுகர்வை விட அதிகமாகும்.. தரவு மையங்களின் நேரடி மற்றும் மறைமுகக் குளிரூட்டலுக்கு ஆண்டிற்குச் சுமார் 9.3 லட்சம் கோடி லிட்டர் நீர் தேவைப்படும். இது உலகளாவிய குடிநீர் ஆதாரங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும். இந்த அசுரத்தனமான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய அமைக்கப்படும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மட்டும் 14,500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு தேவைப்படும்.

மேலும், புகை படத்தை பதிவேற்றம் செய்வதால் முக அமைப்பு, கண்கள், மற்றும் தனித்துவமான அடையாளங்கள் துல்லியமாகத் தரவுகளாக மாற்றிச் சேமிக்கப்படும் அபாயமும் உள்ளன. இந்தத் தரவுகள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால், அனுமதி இன்றி போலி படங்கள், வீடியோக்கள் அல்லது ஆள்மாறாட்டச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படலாம்.

நாம் பதிவேற்றும் படங்கள் பயன்பாட்டிற்குப் பிறகும் அந்த நிறுவனங்களின் சர்வர்களில் நிரந்தரமாகச் சேமிக்கப்படவோ அல்லது மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்கப்படவோ வாய்ப்புள்ளது. பயனர்களின் வெளிப்படையான ஒப்புதல் இன்றியே, அவர்களின் புகைப்படங்கள் புதிய AI மாடல்களுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி, நாம் சாதாரணமாக உருவாக்கும் AI புகைப்படங்களும் வீடியோக்களும், நமது சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் தனிமனித உரிமைகளையும் மீறுகின்றன. எனவே வெறும் சமூக ஊடக டிரெண்டுகளைப் பார்த்துப் புகைப்படங்களைப் பதிவேற்றும் முன் நாம் ஒன்றுக்கு இருமுறை யோசிக்க வேண்டியது அவசியமாகிறது.

news18


 


Post a Comment

0 Comments