2027ஆம் ஆண்டுக்குள் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை | ரூ.1.656 பில்லியன் பெறுமதியான சொத்துகள் அரசுடைமை

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலின் கீழ் தேடப்பட்டு வரும் 112 சந்தேகநபர்கள் 13 நாடுகளில் வசித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். குறித்த நபர்களை 2027ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்குத் திருப்பி அழைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘நாடு ஒன்றிணைந்தது’ என்ற தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை (29) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
”இலங்கைக்குத் திரும்ப அழைக்கப்படும் சந்தேகநபர்களுக்கு எதிராக நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும். தலைமறைவாக உள்ளவர்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் வருமானம் ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சொத்துகளைக் கண்டறிந்து அரசுடைமையாக்குவதற்கான விசாரணைகள் இரு விசேட பொலிஸ் பிரிவுகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, அரசுடைமையாக்குவதற்காக அடையாளம் காணப்பட்ட சொத்துகளின் பெறுமதி 2024ஆம் ஆண்டில் ரூ.1.49 பில்லியனாகவும், 2025ஆம் ஆண்டில் ரூ.1.549 பில்லியனாகவும் பதிவாகியுள்ளது. 2026ஆம் ஆண்டில் நேற்றுமுன்தினம் ஒக்டோபர் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ.1.656 பில்லியனாக அதிகரித்துள்ளது. தங்க நகைகள், காணிகள், வாகனங்கள் மற்றும் பணம் உள்ளிட்ட சொத்துகள் இதில் அடங்குகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளிலும் 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி, 4,483 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி ரூ.107.942 பில்லியனாகும். 7,129 கிலோகிராம் படிக மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி ரூ.121.64 பில்லியனாகும்.
33,277 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி ரூ.5.293 பில்லியனாகும். 333 கிலோகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி ரூ.14.306 பில்லியனாகும்.
2025ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட ‘நாடு ஒன்றிணைந்தது’ தேசிய நடவடிக்கை தனது முதலாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் 2,835 கிலோகிராம் ஹெரோயின், 3,550 கிலோகிராம் ஐஸ், 297 கிலோகிராம் கொக்கெய்ன் மற்றும் 11,167 கிலோகிராம் கஞ்சா ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன்.
மேலும், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 5,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 450 பேருடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சொத்துகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐந்து கிராமுக்கு மேற்பட்ட ஐஸ், ஹெரோயின் அல்லது கொக்கெய்ன் போதைப்பொருட்களை வைத்திருத்தல், கடத்தல், விற்பனை செய்தல் அல்லது உற்பத்தி செய்தல் போன்ற குற்றங்களில் உயர்நீதிமன்ற விசாரணையின் பின்னர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படுவோருக்கு நடைமுறையிலுள்ள சட்டங்களின் கீழ் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நடவடிக்கைகளுக்கு முப்படையினரின் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கிறது என்றார்.
thinakaran

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments