Ticker

6/recent/ticker-posts

வைத்தியர் சுகுணன் அவர்களுக்கு:பேருவளை ஹில்மியிடமிருந்து சிந்தனைக்கு ஒரு மடல்


எனது மதிப்பிற்குரிய வைத்தியர் அவர்களே!

இலங்கை வரலாற்றில் காலனித்துவ ஆட்சியின் கீழ் அடிமைகளாக வாழ்ந்த நாம், அந்த ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திர நாட்டின் பிரஜைகளாக வாழத் தொடங்கினோம். ஆனால், சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட உள்ளூர் அரசியல் போட்டிகள் காரணமாக வேறுவிதமான ஓர் அடிமைத்தனத்திற்கு உள்ளானோம்.

வெளிநாட்டு வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாம், உள்ளூர் அரசியல்வாதிகளின் கைகளில் 73 ஆண்டுகளாகச் சிக்கித் தவித்தோம்.

வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேறியதும், உள்ளூர் அரசியல்வாதிகள் நம்மைப் பிளவுபடுத்தி ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள்.

நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தாலும், அது நாட்டு மக்களுக்கான சுதந்திரமாக அமையவில்லை. கிடைத்த சுதந்திரம் அரசியல்வாதிகளுக்கான சுதந்திரமாகவே அமைந்தது.

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் நாட்டு மக்கள் நாதியற்றவர்களாக மாறினார்கள். இனவாத அரசியல்வாதிகளால் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன.

தாங்கள் ஒரு தமிழர் என்ற வகையில், இதை நான் உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை.

இலங்கை மக்களைக் கரையோரச் சிங்களவர்கள், மலையகச் சிங்களவர்கள் எனப் பிரித்ததுடன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற வேறுபாடுகளையும் உருவாக்கி ஆட்சி செய்த வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், இலங்கை நாட்டின் சுதந்திரப் பிரஜைகளாக வாழலாம் என்று கனவு கண்ட நம் நாட்டு மக்களுக்கு வேறுவிதமான பிரச்சினைகள் காத்திருந்தன.

நம்மை ஆள முனைந்த நம் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என ஒரே தாய்நாட்டின் மக்களைத் தங்களுடைய அரசியல் தேவைகளுக்காகப் பிரித்தாள ஆரம்பித்தார்கள்.

அன்று ஆரம்பித்த அந்த இனப்பிரச்சினை ஒவ்வொரு தேர்தலிலும் பல்வேறு வடிவங்களை எடுத்தது. அவ்வப்போது அரசியல்வாதிகளின் தேர்தல் தேவைகளுக்கேற்ப அது மாறுவேடம் பூண்டது.

கடந்த 70 ஆண்டுகளாக மக்களைச் சிந்திக்க விடாமல், அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து, அவர்களை ஏமாற்றி வந்த அரசியலுக்கு 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாவுமணி அடிக்கப்பட்டது. இனவாதச் சவப்பெட்டிக்கு இறுதி ஆணியும் அடிக்கப்பட்டதாக மக்கள் நம்பினார்கள்.

நீண்ட காலத்திற்குப் பிறகு, இலங்கை மக்கள் தமிழ், முஸ்லிம், பறங்கியர், பௌத்தர், இந்து எனப் பல்வேறு அடையாளங்களைக் கொண்டிருந்தாலும், அந்த வேறுபாடுகளைக் கடந்து ஒரு தாயின் பிள்ளைகளைப் போல வாழ ஆரம்பித்தார்கள். அந்த மாற்றம் ஏற்பட்டு வெகுகாலம் ஆகவில்லை.

73 ஆண்டுகளாக இனவாதத் தீயிலும் அரசியல் சூழ்ச்சிகளிலும் வெந்து, சித்திரவதைகளை அனுபவித்த மக்களுக்கு நிம்மதியாக வாழும் நம்பிக்கையை அளிக்கும் வகையில், நீண்ட காலமாக நிம்மதியிழந்திருந்த மக்களுக்கு நிம்மதியைத் தரக்கூடிய ஒரு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார். அவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதைப் போன்ற நம்பிக்கையுடன் மக்கள் அவரை வரவேற்றார்கள்.

இலங்கையில் இருந்து இனவாதம் துடைத்தெரியப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் கடும் பாடுபடுகின்றார். எது நடந்தாலும் சட்டம் சாலருக்கும் சமமே என்று நிலையான உறுதிப்பாட்டில்
நிலையாக அவர் உள்ளார்.
 
ஆனால், இரண்டு ஆண்டுகள்  மட்டுமே.முழுமையாக கடந்தது.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், மதம் மற்றும் இனம் சார்ந்து எழுந்த முதல் பிரச்சினை கல்முனையில் ஏற்பட்ட ஹிஜாப் பிரச்சினை என்று நான் நினைக்கின்றேன்.
பெண்கள் தங்களின் தலையை மறைப்பது இஸ்லாம் மார்க்கத்தில் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமையாகும்.

தங்களின் மத அடையாளங்களுடன், தங்களின் மார்க்கக் கடமையான இறைவனின் கட்டளையை நிறைவேற்றியவர்களாகத் தமது பணியைத் தொடங்க வந்த அந்த முஸ்லிம் சகோதரிகளுக்குப் பணி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.

அவர்களுக்குப் பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவர்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுச் சென்றார்கள்.

இந்தப் பிரச்சினை இலங்கையில் ஒரு பூதாகரமான பிரச்சினையாக மாறியது. சமூக வலைத்தளங்கள், வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் மற்றும் இந்த அரசாங்கத்திற்கு எதிரான சக்திகள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தப் பிரச்சினையைப் பல்வேறு கோணங்களில் பெரிதாக்க ஆரம்பித்தார்கள்.

எழுபத்து மூன்று ஆண்டுகளாக இனவாதத் தீயில் வெந்தோம். இந்த அரசாங்கத்திலும் நமக்கு இதுதானா மிச்சம் என்ற மனநிலைக்கு முஸ்லிம் மக்கள் தள்ளப்பட்டு, மனவிரக்தியுடன் சிந்திக்க ஆரம்பித்தனர்.

இந்தப் பிரச்சினைக்கு முதன்மைக் காரணம் யார் என்பதை உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்.

இவ்வாறான ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்து, ஒரு சமூகத்தைப் பழிவாங்கியதன் மூலம் நீங்கள் அடைந்த இலாபம்தான் என்ன ?

அந்தச் சகோதரிகள் தங்களுடைய தலையை மறைத்துக்கொண்டு வருவதால் உங்களுக்கு ஏற்பட்ட நட்டம் என்ன?

இதற்காக உங்கள் சம்பளத்தை அரசாங்கம் உயர்த்தித் தந்ததா ?

நீங்கள் ஓர் உத்தமர் என்று மக்கள் உங்களைப் புகழ்ந்தார்களா ?

இதன் மூலம் ஒரு சில இனவாதிகளைத் திருப்திப்படுத்தியதைத் தவிர வேறு என்ன சாதித்தீர்கள் ?

ஒரு சமூகத்தின் எதிரியாக உங்களை நீங்களே அடையாளப்படுத்திக் கொண்டீர்கள். 

ஒரு சமூகத்தின் மனதில் வெறுப்புக்குரிய நபராக உங்களை அடையாளப்படுத்திக் கொண்டதுதான் இறுதியில் எஞ்சியது.

பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன, 
இனவாதம் ஒழிந்துவிட்டது, இனியாவது இந்த நாட்டில் நிம்மதியாக வாழலாம் என்று கனவு கண்ட முஸ்லிம் சமூகத்தின் நிம்மதியைக் நிலை குலைக்கும் வகையில் கல்முனைப் பிரச்சினை உருவானது.

கல்முனைப் பிரச்சினை ஏதோ ஒரு வகையில் ஓய்ந்துபோன போதிலும்,  அந்த இனவாதத் தீப்பிழம்பிலிருந்து தெறித்த தீப்பொறிகள் இன்றும் ஆங்காங்கே புகையைக் கக்கிக்கொண்டிருக்கின்றன.

இந்தத் தீயை மூட்டியவர் யார்?

இன்றும் ஆங்காங்கே வைத்தியசாலைகளில் ஏற்படும் ஹிஜாப் பிரச்சினைக்கு வழி வகுத்தவர் யார் ?

ஒரு நிமிடமாவது எடுத்துக்கொண்டு, இதைப் பற்றி முதலில் சற்றுச் சிந்திக்குமாறு தங்களிடம் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

இந்த விடயத்தில் தாங்கள் கடுமையாக நடந்துகொண்ட போதிலும், அண்மையில் சவுதி அரேபியாவில் எமது தாய்நாட்டைச் சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்சினையில் மூன்று சமூகங்களும் இணைந்து எடுத்த முன்னேற்றகரமான நடவடிக்கைகளைத் தாங்கள் சற்றுச் சிந்தித்துப் பார்க்குமாறு தயவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

“எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் தனது தந்தையையும் தனது பிள்ளையையும் விட நான் அவருக்கு மிகவும் பிரியமானவராக ஆகும் வரை அவர் ஈமான் கொண்டவராக மாட்டார்.”

ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி, ஹதீஸ் எண் 14.

நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி இஸ்லாம் இவ்வாறு கூறுகின்றது. நபியவர்களைப் பற்றி அவதூறு கூறுவது மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் சட்டம் சவுதி அரேபியாவில் இருக்கும்போதும், இலங்கையில் எந்த முஸ்லிமும் அனோஜன் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்பவில்லை.

“அவன் தமிழன்; அவன் எமது நபி மீது அவதூறு கூறினான்; அவன் செத்தால் சாகட்டும்” என்ற நிலைப்பாட்டை எந்த முஸ்லிமும் எடுக்கவில்லை.

அனோஜன் எமது சகோதரிகளின் ஹிஜாபைக் கழற்றியவர்களின் இனத்தைச் சேர்ந்தவன் என்று முஸ்லிம் சமூகம் அவரைப் பார்க்கவில்லை.

அனோஜன் எனது தாய்நாட்டில் பிறந்த எமது சகோதரர்களில் ஒருவன் என்பதையே எமது முஸ்லிம் சமூகம் முதன்மையாகச் சிந்தித்தது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு இல்லாதவர் முஸ்லிமாக இருக்க முடியாது என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அதேவேளை, 

"ஷரீஆ சட்டப்படி அவர் தவறு செய்துள்ளார்" 

என்று சவுதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகக் கூறப்படும் நிலையிலும், எந்த முஸ்லிமும் அவர் மீது தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்பவில்லை.

அவரைத் தண்டனையிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளில் முதலில் செயல்பட்டவர்கள்  முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அனோஜன் என்ற சகோதரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தங்களுடைய சொந்தப் பணத்திலிருந்து அல்லி வீசினார்கள்.  தங்களுடைய நிம்மதியான தூக்கத்தைத் துறந்து, தங்களுடைய தொழில்களையும் ஒதுக்கிவிட்டு வெளிநாட்டுக்குப் பறந்தார்கள்.


இதுவே மனிதநேயம்!

எனது மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் உரிய வைத்தியர் அவர்களே!

வைத்தியத்துறை என்பது தூய மனதுடனும் மனிதநேயத்துடனும் செயல்பட வேண்டிய ஒரு துறையாகும்.

ஒருவர் நோயாளியாக உங்களிடம் வரும்போது, அவர் தமிழரா, சிங்களவரா, முஸ்லிமா என்று ஆராய்ந்த பின்னரா நீங்கள் மருத்துவம் செய்வீர்கள்? அவ்வாறு செய்ய மாட்டீர்கள். ஏனெனில், மருத்துவம் என்பது மனிதநேயத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டிய ஒரு புனிதமான தொழிலாகும்.

தொழில்துறையில் பல வழிகள் இருந்தாலும், நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆசிரியர் தொழிலும், மனித உயிர்களைக் காக்கும் மருத்துவத் தொழிலும் உன்னதமானவை.

வலி, வேதனை என்பவை ஒவ்வொரு இனத்தவருக்கும் வெவ்வேறு விதமாக ஏற்படுவதில்லை என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

அவ்வாறான உயர்வான தொழிலில் ஈடுபட்டுள்ள தாங்கள் இவ்வாறு நடந்துகொண்டது, அந்தத் தொழிலுக்கும் இழுக்கை ஏற்படுத்தியதாகும் என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

எந்தவிதமான நியாயமான காரணமும் இல்லாமல், எந்தவிதமான உண்மையான இலாபமும் இன்றி, ஒரு சமூகத்தின் மனதைப் புண்படுத்தினீர்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தங்களுடைய மகனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்ற செய்தியைக் கேட்டு, அந்தத் தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் எவ்வளவு துடித்திருப்பார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்துகொண்டது.

ஆனால், தொழிலுக்காக வந்தபோது தங்களால் விரட்டப்பட்ட அந்தச் சகோதரிகள் அனுபவித்த மனவேதனையைத் தங்களால் உணர்ந்துகொள்ள முடியாமல் போனதை நினைக்கும்போது மிகுந்த மனவருத்தம் அடைகிறேன்.

அல்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

1. ஞானத்தைப் பற்றிய வசனம்

يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ ۚ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا

தமிழ்ப் பொருள்:

“அவன் நாடியவர்களுக்கு ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டவர் நிச்சயமாகப் பெரும் நன்மையைப் பெற்றுவிட்டார்.”

ஆதாரம்: அல்குர்ஆன், ஸூரா அல்-பகரா 2:269.

2. கல்வியுடையவர்களின் அந்தஸ்தைப் பற்றிய வசனம்

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ

தமிழ்ப் பொருள்:

“உங்களில் ஈமான் கொண்டவர்களையும், கல்வி வழங்கப்பட்டவர்களையும் அல்லாஹ் பல படித்தரங்களால் உயர்த்துவான்.”

ஆதாரம்: அல்குர்ஆன், ஸூரா அல்-முஜாதிலா 58:11.

அல்குர்ஆன் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமாக அருளப்பட்ட நூல் அல்ல; அது முழு உலக மக்களுக்கும் வழிகாட்டும் ஓர் அருட்கொடையாகும். அந்த அருட்கொடையில் அறிவையும் ஞானத்தையும் பற்றிய உயர்ந்த கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் சிந்திக்கும்போது, அறிவைப் பெற்றவர்களாகிய நீங்கள் இறைவன் வழங்கிய அருட்கொடைகளைப் பெற்றவர்களில் ஒருவராக இருக்கின்றீர்கள்.

அறிவும் கல்வியும் பெற்றவர்களாகிய நீங்கள் இவ்வாறான ஒரு செயலில் ஈடுபட்டது சரிதானா என்பதை உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுப் பாருங்கள் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

எனது மதிப்பிற்குரிய வைத்தியர் அவர்களே!

நாம் வாழ்ந்து முடித்துவிட்டோம். இனிவரும் எமது சந்ததியினர் இந்த நாட்டில் நிம்மதியாக வாழட்டும் என்ற நிலைப்பாட்டை இன்றிலிருந்தாவது எடுப்போம்.

இந்த நாட்டின் இனவாதப் பிரச்சினைகளால் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள நாட்டைவிட்டு வெளியேறிய எமது இளம் சந்ததியினர், அது தமிழர்களாக இருக்கலாம், முஸ்லிம்களாக இருக்கலாம் அல்லது சிங்களவர்களாக இருக்கலாம்.
அவர்கள் அனைவரும் தமது தாய்நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும். ஆனால், வெளிநாடுகளில் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை நான் என் கண்களால் கண்டிருக்கின்றேன்.

எனவே, எமது இளம் தலைமுறையினரைப் பற்றிச் சிந்திப்போம்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் எமது கைகளால் நடைபெறக்கூடாது என்ற உறுதிப்பாட்டை எடுத்துக்கொள்வோம்.

இந்த இலங்கைத் திருநாட்டில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வருவோம்.

உமது மதம் உம்மிடம் இருக்கட்டும்; உமது இனம் உம்முடன் இருக்கட்டும். நாம் அனைவரும் ஒரே தாய்நாட்டின் மக்கள் என்ற உறுதிப்பாட்டைத் தேசிய கீதத்தில் பாடும் நாம், அதனை எமது வாழ்க்கையிலும் கடைப்பிடிப்போம்.

அன்புடன்,
பேருவளை ஹில்மி

நன்றி.


 


Post a Comment

0 Comments