
தனது மேசை மீதிருந்த தொலைபேசியின் ரிசீவரை தூக்கிய இர்வின், தனது குறிப்பிலிருந்து எடுத்த சில இலக்கங்களை, சுழற்றினான்! பலமுறை சுழற்றிய போதிலும், தொடர்பு வாடிக்கையாளரை அடைவதாயில்லை.
தொலைபேசி பரிமாற்ற நிலையத்திலிருந்து,
“தங்களது வாடிக்கையாரை அடைய முடிய வில்லை” என்பதாகவே பதில் வந்து கொண்டிருந்தது.
இர்வின் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஐந்தாவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. இனிமேல் முயற்சிப்பதில் பயனில்லை என்று நினைத்தவன், இறுதியாக ஒரு முறை... ஒரே ஒரு முறை முயற்சித்துப் பார்த்து விடலாமென்று நினைத்த வனாக எண்களைச் சுழற்றலானான்.
அழைப்பு மணி தொடர்பாகி, அடுத்த முனையில் மணியடித்த போதிலும், எவரும் ரிசீவரை எடுப்பதாக இல்லை.
தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்த மணி திடீரென நின்றதும், அங்கிருந்து “ஹலோ” என்ற வசீகரமான குரல் அவனது காதுக்குள் நாதமெழுப்பியது!
அதே குரல்.... சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு அநாமேதயமாகத் தகவல் தந்த அந்தக் குரல்...
“ஹலோ... நான் இர்வின்... அமேசனிலிருந்து பேசுகிறேன்”
என்றான் அவன்.
“இது நுண்ணுயிர் மையம்; உங்களுக்கு எம்மால் என்ன ஆக வேண்டும்?” என்று மிகவும் பணிவாக அந்தக் குரலுக்குரியவள் கேட்டாள்.
“சில வாரங்களுக்கு முன் அமேசான் சஞ்சிகையில் பிரசுரமாயிருந்த அட்டைப்படச் செய்தி பற்றி உங்களிட மிருந்து அழைப்பு வந்து, திடீரென இணைப்பு அறுந்து விட்டது.நீங்கள் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும். உங்களது தொலைபேசி இலக்கத்தை எமது இணைப்பு மையத்திலிருந்து பெற்றுக் கொண்டேன். அந்த நபர்கள் மூவரில் யாராவது ஒருவரிடம் பேசலாமா..?” இர்வின் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்.
“அவர்கள் பயிற்சி முடிந்து தமது நாட்டுக்கே போய் விட்டனர். அங்குள்ள ஆய்வு மையத்துடன் தொடர்பு கொண்டால் அவர்களை அணுகலாம்” என்று கூறிய அவள், அவர்கள் எந்த நாட்டவர்கள் என்று குறிப்பிட்டுவிட்டு, தொலைபேசியைத் துண்டித்து விட்டாள்.
அந்தக் குள்ளர்கள் திருடிச் சென்ற புராதன நூலின் நான்கு பக்கங்களையும் எப்படியாவது திரும்பப் பெறவேண்டும் என்ற திடமான நம்பிக்கையைத் தனக்குள் கொண்ட இர்வின், அடுத்த கட்ட செயற் திட்டத்தை மேற்கொள்ள ஓர் எண்ணத்தைத் தனக்குள் கொண்டவனாக, அலுவலகத்திலிருந்து வெளியேற ஆயத்தமானான்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments