
‘Volta-Autodoxer’ (VOLTA) எனப்படும் புதிய மால்வேர் இணைய பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டி ஏஐ (AI) மூலமாக அவர்களின் விரிவான சுயவிவரத்தை உருவாக்குகிறது.
அதாவது 'Volta-Autodoxer' (VOLTA) என்பது இணையப் பயனர்களின் கணினிகளில் இருந்து தகவல்களைத் திருடி, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் அவர்களின் விரிவான சுயவிவரத்தை (Dossier) உருவாக்கும் ஒரு புதிய ஆபத்தான விண்டோஸ் மால்வேர் (Infostealer) ஆகும்.
சமீபத்தில் Cisco Talos பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட இந்த மால்வேர், வழக்கமான வைரஸ்களை விட மிகவும் புத்திசாலித்தனமாகவும் ஆபத்தானதாகவும் செயல்படுகிறது.
வழக்கமான வைரஸ்கள் அல்லது மால்வேர்கள் பாதிக்கப்பட்ட கணினியிலிருந்து தரவை திருடுவதோடு தங்கள் வேலையை நிறுத்திக் கொள்ளும். ஆனால், இந்த புதிய தலைமுறை AI மால்வேர்கள் மனிதர்களின் தலையீடு இல்லாமல் தானாகவே சிந்தித்து செயல்படும் அளவுக்கு ஆபத்தானவை.
இத்தகைய AI மால்வேர்களைக் கண்டறிந்து கண்காணிப்பதற்காகவே சிஸ்கோ தலோஸ் ஆராய்ச்சியாளர்கள் CAIRN (Cognitive Artifact Intelligence Research Network) என்ற புதிய திறந்த மூல (Open-source) பாதுகாப்புக் கருவியை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் முக்கிய செயல்பாடுகள் மற்றும் இது எவ்வாறு இயங்குகிறது என்ற விவரங்கள் இதோ:
முதலில் இந்த மால்வேர் பயனரின் கணினியில் நுழைந்து கீழ்க்கண்ட முக்கியமான தகவல்களைத் திருடுகிறது:

* கடவுச்சொற்கள், வங்கி அட்டை விவரங்கள், அங்கீகார டோக்கன்களை திருடுகிறது.
* உலாவிகளில் (Browsers) சேமிக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டுகள் மற்றும் குக்கீகள் (Cookies).
* கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி வாலட் (Crypto wallet) சாவிகள்.
டிஸ்கார்ட் (Discord), டெலிகிராம் (Telegram), ஜிமெயில் (Gmail), ஸ்டீம் (Steam) மற்றும் ரோப்ளாக்ஸ் (Roblox) கணக்குகளின் லாகின் செஷன்கள்.
* கணினியில் சேமிக்கப்பட்டுள்ள வைஃபை (Wi-Fi) பாஸ்வேர்டுகள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்டுகள்.
திருடப்பட்ட ஜிமெயில் கணக்கைப் பயன்படுத்தி, பயனர் அமேசான் (Amazon), உபெர் ஈட்ஸ் (Uber Eats), டோர்டாஷ் (DoorDash), பேபால் (PayPal) போன்ற தளங்களில் வாங்கிய பில்கள் மற்றும் ரசீதுகளை இந்த மால்வேர் தேடுகிறது. இதன் மூலம் பயனரின் வீட்டு முகவரி, வசிக்கும் இடம், அவர்களின் உணவு மற்றும் பணப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைத் துல்லியமாகத் திரட்டுகிறது.
சேகரிக்கப்பட்ட அனைத்து விபரங்களையும் ஒன்றாக இணைத்து, OpenRouter என்ற தளம் வழியாக Claude Opus 4.6, Moonshot AI (Kimi K2) அல்லது Google Gemini 2.5 Flash போன்ற முன்னணி AI மொழி மாதிரிகளுக்கு (LLMs) அனுப்புகிறது. இதன் மூலம் அதிக மதிப்புள்ள இலக்குகளை ஹேக்கர்கள் விரைவாக அடையாளம் காண உதவுகிறது.
அந்த ஏஐ மாதிரியிடம் "நீ ஒரு புலனாய்வு ஆய்வாளர் (Forensic Analyst) போலச் செயல்பட்டு, இந்த நபரின் முழு விபரங்கள் மற்றும் அவரின் பொருளாதார மதிப்பு என்ன என்பதைத் தொகுத்து அறிக்கை தரச்சொல்லி” கட்டளையிடுகிறது.
இதன் மூலம் ஹேக்கர்கள், திருடப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் தரவுகளில் யார் அதிகப் பணக்காரர் அல்லது அவரிடம் எவ்வளவு பணம் பறிக்கலாம்? யாருடைய கணக்கு அதிக மதிப்புடையது (High-value targets) அல்லது என்பதை மனித உழைப்பின்றி ஏஐ மூலமாகவே எளிதில் தரம் பிரித்துவிடுகின்றனர்.
CLOSEDQUORUM போன்ற மால்வேர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, தாக்குதலை எப்படி நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய நான்கு வெவ்வேறு AI மாடல்களிடம் (DeepSeek, Qwen, Mistral, Gemini) "வாக்கெடுப்பு" (Voting) நடத்தி, அதனடிப்படையில் தன்னிச்சையாக செயல்படுகின்றன.
இந்த மால்வேர் தனது வேலையை முடித்துவிட்டு, ஏஐ தயாரித்த அறிக்கையை ஹேக்கர்களின் டெலிகிராம் கணக்கிற்கு அனுப்பியவுடன், பாதிக்கப்பட்ட கணினியிலிருந்து தன்னைத்தானே முழுமையாக அழித்துக் கொள்கிறது (Self-destruct). இதனால் கணினிப் பாதுகாப்பு மென்பொருள்களால் (Antivirus) இவற்றை எளிதில் கண்டறிய முடிவதில்லை.
‘Volta-Autodoxer’ மால்வேர் ஏற்கனவே தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் ‘Volta-Autodoxer’ போன்ற தகவல் திருடும் மால்வேர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
* இணையத்திலிருந்து திருட்டு மென்பொருள்கள் (Cracked software / Games) மற்றும் போலி ஆப்களைப் பதிவிறக்கம் செய்யக் கூடாது. அதாவது நம்பகமற்ற இணையதளங்களில் இருந்து மென்பொருள்களை பதிவிறக்க வேண்டாம்.
* கிராக் செய்யப்பட்ட மென்பொருள்கள், போலி செயலிகளை தவிர்க்கவும்.
* கணினி மற்றும் பாதுகாப்பு மென்பொருள்களை தொடர்ந்து புதுப்பிக்கவும். அதாவது, உலாவிகளில் (Chrome, Edge) பாஸ்வேர்டுகளைச் சேமிப்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான பிரத்யேக பாஸ்வேர்ட் மேனேஜர்களைப் பயன்படுத்தலாம்.
* ஒரே கடவுச்சொல்லை பல கணக்குகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.
* கிரிப்டோ வாலட்டின் ரகசிய குறியீடுகளை கணினியில் சேமிக்க வேண்டாம்.
* உங்களது ஜிமெயில், வங்கி மற்றும் சமூக ஊடகக் கணக்குகளுக்கு டூ-ஃபேக்டர் ஆதென்டிகேஷனை (Two-Factor Authentication - 2FA) எப்போதும் ஆன் செய்து வைக்கவும்.
மால்வேர் பாதிப்பு சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக இணை இணைப்பை துண்டித்து கணினியை பரிசோதிக்கவும். பாதுகாப்பான மற்றொரு சாதனத்தில் கடவுச்சொற்களை மாற்றவும்.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments