பதட்டத்தோடு வீட்டுக்குள் வந்த வித்யா..பார்வதி அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சடாரென சோபாவில் சாய்ந்தாள்.
"என்னடி ஒண்ணுமே பேசாம இருக்கே?"பார்வதி அம்மா கேட்டாள்.
"என்னதான் பிரச்சின. எதாச்சும் பிரசினன்னா .வாயைத் திறந்து சொல்லு..சும்மா மூஞ்ச தூக்கிட்டு. இருக்காம.அண்ணன் இப்ப வருவான். அவன்கிட்டேயே சொல்லு"என்றவள் சமயலறைக்குச் சென்றாள்.
எப்படிப்பட்ட பிரச்சினை என்றாலும் மூத்தவன் எடுக்கிற முடிவுதான் பார்வதி அம்மாவின் முடிவும்.
"பிரச்சினையே அவன்தான்..." கடுப்புடன் சொன்னாள் வித்தியா.
"என்ன டி சொல்றே.?."அம்மா ஆச்சரியத்தோடு கேட்டாள்.
வித்யா பதில் சொல்லவில்லை
"சொல்லித் தொலையேண்டி!" மீண்டும் அம்மாவின் அதட்டல்.
"அம்மா அண்ணியக் கூப்பிடு. அவதான் அண்ணன சமாளிக்கணும்" பயம் கலந்த குரலில் கெஞ்சினாள் வித்யா.
அண்ணன் வீடு பக்கத்து வீடுதான். எதோ தப்பு நடந்திருக்கு அதனால் தான் வித்யா பயப்படுகின்றாள் என்று மட்டும் பார்வதி அம்மாவுக் குப்புரிந்தது.
அண்ணனுக்கு வித்யா என்றால் தன் உயிரை விடவும் மேலான பாசம்.வித்யாவை மிகவும் பாசத்தோடும் கட்டுப்பாடோடும் வளர்ப்பவன்.
வித்யாவின் அப்பா இறக்கும் போது அவளுக்கு 7வயதுதான் இருக்கும் அப்பாவின் கடைசி ஆசைப்படி வித்யாவை வளர்த்து, படிக்க வைத்து இன்று தொழில் செய்கின்றாள் என்றால் அது அந்த அண்ணனின் தியாகத்தின் பிரதிபலிப்புத்தான்.
அண்ணனுக்கேற்ற அண்ணி. வித்யாவை வளர்த்து ஆளாக்கி நல்லதொரு துணையை தேடிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு குழந்தைக்கு மேல் நிறுத்தியவள்தான் அண்ணி.
வித்யாவுக்காகவே வாழுகின்ற அண்ணனும் அண்ணியும்.
வித்யாவும் அண்ணனிடமும் அண்ணியிடமும் உயிரையே வைத்திருந்தாள்.
அண்ணனிடம் கேட்காமல் எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டாள் வித்யா .
அண்ணி வந்தாள்
"வித்யா என்னடி.என்ன பிரச்சினை?"
"அண்ணி நான் வேலை பார்க்கிற இடத்தில் சுரேஷ் என்கிறவறோட ஹோட்டல்ல டீ குடிசிட்டிருந்தேன் அதஅண்ணன் பார்த்துட்டான் ."தயக்கத்துடன் சொன்னாள் வித்யா
"எதாவது சொன்னாரா?"அண்ணி கேட்டாள்.
“இல்ல ஒன்னும் சொல்லல்ல முறைச்சான்.நான் உடனே கிளம்பிட்டேன் அதுதான் பயமாயிருக்கு"என்றாள் வித்யா.
"சரி நீ போய் சாப்பிடு.நான் பார்த்துக்கிறேன் "என்றாள் அண்ணி
"இல்ல அண்ணி அண்ணன் வரட்டும் அப்புறம் சாப்பிட்றேன்" என்றால் வித்யா.
அண்ணனும் வந்தான்.வித்யா. பயத்தில் அண்ணியின் கையைப் பற்றிக்கொண்டாள்.
"என்ன விசேஷம்? ரெண்டு மேடமும் எதோ ரகசியம் பேசுராப்ப்ள"என்றான் அண்ணன்.
"ஒண்ணுமில்ல சும்மாதான்" என்றாள் அண்ணி.
'வித்யாவுக்கு எதோ பிரச்சினையாம். என்கிட்ட சொல்ல மாட்டேங்றா. என்னெண்டு கேளுப்பா'என்றபடியே சமையரையிளிலிருந்து வெளிப்பட்டாள் பார்வதி அம்மா
"அம்மா அவளோட பிரச்சினை என்னண்டு எனக்குத் தெரியும் அது முடிஞ்சிருச்சி. நம்ம புள்ள அவளாகவே மாப்பிள்ளைய தேடிக்கிட்டா"என்றான் அண்ணன் இப்ராஹிம் கிண்டலாக.
"இல்லண்ணே சுரேஷ் என்ன லவ் பண்றதா சொன்னப்ப அண்ணனோட சம்மதமில்லாம இந்த வீட்ல எதுவும் நடக்காதென்று சுரேஷ் கிட்ட சொல்லியிருக்கேன். அண்ணன் விருப்பமில்லாமல் எதுவும் நடக்காது அண்ணன் கிட்டேயே பேசுன்னு சொல்லறதுக்குத்தான் அவரோட ஹோட்டல்ல உட்கார்ந்திருந்தேன் அவ்வளவுதான்."என்றவள் அழுதுகொண்டே கதீஜாவின் கையைஇருகப்பற்றிக் கொண்டாள் வித்யா .
"சரி அழாத அந்தப் பையனோட எல்லாம் பேசிட்டேன்.அவன் உன்ன விரும்புறதா சொன்னான் நல்ல பையன்தான் அவனோட அப்பா அம்மாவோட பேசிட்டுத்தான் வந்தேன்.தெரிஞ்சவங்க, ஊர்க்காரங்க .நல்ல குடும்பம்.அவங்களும் சொல்லிட்டாங்க நீதான் அவங்க வீட்டு மறுமகளாம்அடுத்த வாரம் பெண் பார்க்க வர்றாங்களாம்"" சொல்லி முடிப்பதற்குள் அண்ணியை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள் வித்யா.
"அடிப்பாவி இதற்குத்தானா இவ்வளவு நடிப்பு?'என்றாள் பார்வதி அம்மா
அதே நேரம் பக்கத்துத் தெரு மஸ்ஜிதில் மஹ்ரிப் தொழுகைக்காக "அதான்" ஒலித்துக் கொண்டிருந்தது.
"இப்ராஹீம் போய் நமாஸ் முடிச்சிட்டு வா சாப்பிடுவோம்" என்றாள் பார்வதி அம்மா
பார்வதி அம்மாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
கடந்தகால நினைவுகள் அவளை ஆட்கொண்டது,
ஹமீத் ஹாஜியார் என்றால் அந்த ஊரில் தெரியாதவர்கள் யாரும் இல்லை . ஜாதி மதங்களைத் தாண்டிய பொதுச்சேவைகளை செய்பவர் என்பதால் ஹமீத் ஹாஜியாரை ஊர் மக்கள் மிகவும் நேசித்தார்கள். மனைவி சுபைதாவும் அப்படித்தான்.
சாதாரண வசதியுள்ள குடும்பம். ஒரேபிள்ளை இப்ராஹீம்.
நெருங்கிய சொந்தங்கள் என்று சொல்ல எவரும் இல்லை.தூரத்து சொந்தங்கள் எப்போதாவது வந்து போவார்கள்.
பக்கத்து வீடு என்பதால் முருகன் ஐயாவின் குடும்பத்தோடு மிகவும் நெருங்கிய சொந்தங்கலாகப் பழகினார்கள்.
முருகன் ஐயா "என்றும் அவருடைய மனைவி பார்வதியை "பார்வதி அம்மா" என்றும் ஊர் மக்கள் செல்லமாக அழைப்பார்கள்.
அவர்களுக்கும் ஒரே பெண் பிள்ளைவித்யா..
வசதியான குடும்பம். முருகன் ஐயா வியாபாரமும் பார்வதியம்மா ஊர் பாடசாலையில் ஆசிரியையாகவும் வசதியோடு இருந்தார்கள்
இரண்டு குடும்பங்களும் ஒரே இரத்த சொந்தங்களாக இருந்தது ஊர் மக்களுக்கும் தெரியும்.
.ஒரு சிலருக்கு அந்த உன்னதமான உறவு பொறாமைப்பட வைத்தாலும் வெளிக்காட்டிக்கொள்வதில்லை .
இப்ராஹீமிடம் மிகவும் பாசமாயிருந்தார்கள் முருகன் ஐயாவும், பார்வதி அம்மாவும்.
இப்ராஹீமை விட நான்கு வயது இளையவளான வித்யாவிடம் சொந்த மகளைப்போல் அன்பு காட்டினார்கள், ஹமீத் ஹாஜியாரும் அவர் மனைவியும்.
வித்யாவிற்கும் இப்ராஹீமுக்கும் இடையிலான அண்ணன் தங்கை உறவு மிக,மிக ஆழமாக ஆலமர வேர்போல் வளர்ந்து கொண்டிருந்தது.
அந்த உறவு தெளிந்த நீரோடையாக இருந்தது. ஜாதி மதங்களைக்கடந்த ஒரு புனிதமான உறவாயிருந்தது.
இப்ராஹிமுக்கு ஆறு வயதாயிருக்கும் போது ஒரு விபத்தில் அம்மாவும் அப்பாவும் இறந்துவிட தனிமைப்பட்ட இப்ராஹீமை தன் சொந்தப் பிள்ளைபோல் வளர்த்தார்கள் முருகன் ஐயாவும் , பார்வதி அம்மாவும்.
.இப்ராஹீமை தத்தெடுக்க எத்தனையோ பேர் முயன்றும் முடியவில்லை முருகன் ஐய்யா குடும்பத்தோடு இருப்பதாக அடம்பிடித்து அவர்களோடே வாழ்ந்தான் இப்ராஹிம்.
இப்ராஹீமை ஒரு இஸ்லாமியனாகவே வளர்த்தார் முருகன் ஐயா.
ஊர் பள்ளி நிர்வாகத்தினரிடம் கதைத்து வீட்டில் அவனுக்குரிய வசதிகளை செய்து கொடுத்து படிப்புக்குரிய அத்தனை ஒழுங்குகளையும் கனகச்சிதமாய் செய்தார் முருகன் ஐயா.
பார்வதி அம்மாவிடம் அடிக்கொருதரம்சொல்வார் "பார்வதி. இப்ராஹீம் நம்ம புள்ள. நான் இல்லாத காலத்திலேயும் அவன ஒரு இஸ்லாமியனாகத்தான் வளர்க்கணும் என்பார்..
"நீங்க அதப்பத்தி யோசிக்காதீங்க. அவன என் புள்ளயா வளர்ப்பேன்"என்பாள் பார்வதி அம்மா.
வித்தியாவுக்கு ஏழு வயதாகும் போது முருகன் ஐயா நெஞ்சு வழியென்று படுத்தவர் எழும்பவேயில்லை. பிள்ளைகளை கவனிக்கும் பொறுப்பு பார்வதி அம்மாவுக்கு மாறியது. -
இப்ராஹீமை மூத்த பிள்ளையாக இஸ்லாமியனாகவே வளர்கெடுத்து , என்ஜினியராக உயர்த்திய பெருமை பார்வதி அம்மாவுக்குத்தான்.
தனியார் கம்பனியில் வேலை, கைநிறைய சம்பளம் அப்பாவின் சொத்துக்கள்.முருகன் ஐயாவின் சொத்துக்கள் என்று அத்தனையும் அவன் பெயரில் இருந்தாலும் அவனுக்கு எல்லாமே அம்மாவும் தங்கையும்தான்.
அம்மாவையும் தங்கையையும் கவனிக்கும் பொறுப்பை இப்ராஹீம் ஏற்றுக் கொண்டு. வித்யாவை வளர்த்து ஆளாக்கி இன்று வித்யாவும் ஒரு தனியார் கம்பனியில் வேலைபார்க்கின்றாள்.
அப்படியிருந்தாலும் அண்ணனிடம் கேட்காமல் எந்த ஒரு முடிவையும் வித்யா எடுப்பதில்லை .
அம்மாவையும் அண்ணியையும் எதிர்த்துப் பேசுவாள்.அண்ணனை எதிர்த்து ஒருவார்த்தையேனும் பேசியதில்லை.
ஊர்மக்களே பெருமைப்படும் அளவுக்கு அந்த உறவு இருந்தது.
.இப்ராஹீமுக்கு வரன் தேடும் போது இப்ராஹீம் சில நிபந்தனைகளை வைப்பான்.
"என் அம்மா ஒரு இந்து. எனக்கு ஒரே தங்கை வித்யாவும் இந்து. இவர்களை நான் இல்லாத காலத்திலும் அன்பாகப் பார்க்க வேண்டும்". என்று தரகர்களிடம் சொல்லி விருப்பப்பட்டு வந்ததுணைதான் கதீஜா.
இப்ராஹீமின் திருமணத்தை பள்ளி நிர்வாகத்தவரிடம் சொல்லி இஸ்லாமிய முறைப்படியே நடத்தினாள் பார்வதி அம்மா.
கணவனின் ஆசைப்படியே கதீஜாவும் அன்பாக இருந்தாள்.
"அம்மா பசிக்குது சாப்பாடு ரெடியா?".தொழுகை முடிந்து திரும்பிய இப்ராஹீமின் குரல் கேட்டு நினைவு திரும்பிய பார்வதி அம்மா
'ஆமா.வந்து சாப்பிடுப்பா" என்றாள்.
"அண்ணே !என்னோட கோபமா ?"கண்கள் குளமாக தயங்கித், தயங்கிக் கேட்டாள் வித்யா.
"இல்லம்மா --கல்யாணம் முடிஞ்சி எங்களையெல்லாம் விட்டுட்டுப் போயிடுவியோன்னு கவலையாயிருக்கு"என்றான் கண்கள் கலங்க.
முதன் முதலாக அண்ணனின் கண்கள் கலங்கியதைக் கண்ட வித்யாவின் நெஞ்சு வெடித்து விடும்போளிருந்தது.
கதீஜா அண்ணியை கட்டியணைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.
"அண்ணி எனக்கு கல்யாணமே வேணாம் உங்களோடே இருக்கிறேன்."
'வித்யா அப்படியெல்லாம் சொல்லக்கூடாது உங்க அண்ணன் கவலையில் உணர்ச்சி வசப்பட்டுட்டார்.அவருடைய கடமை இது...இந்த கடமைய நீ நிறை வேற்றினால்தான் அவருக்கு திருப்தியாயிருக்கும்" என்று வித்யாவை ஆறுதல் படுத்தினாள் கதீஜா.
ஜாதி மதங்களைக் கடந்த பாசப்போராட்டம் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.
0 Comments