Ticker

6/recent/ticker-posts

தமிழ் அகராதிகள் உருவானதெப்படி?


தமிழ் என்ற சொல் குறிப்பாக இரு பொருள்களைக் கொண்டுள்ளன. அவை இனிமை, தனிமை என்பனவாம். ஆதிகாலம் தொட்டு எண்ணற்ற ஏட்டுச் சுவடிகள் தமிழ் மொழியில் இயற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு  வந்துள்ளன.  பின்னர் அவை நூலுருப் பெற்றன.

ஏட்டுச்சுவடிகள் அன்றைய மக்களுக்கு நல்வழிகாட்டும் நீதி நெறிமுறைகளை எடுத்தியம்பின. அன்றைய அரசர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் முறையிலும் ஏட்டுச் சுவடிகள் இயற்றப்பட்டன. இலக்கிய - இலக்கண வடிவில் அமைந்திருந்த அவற்றை அன்றைய சாதாரண மக்களால் புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது.

முனிவர்களால்  "நிகண்டு" என்ற பெயரில் பிரத்தியேகமாக இயற்றப்பட்ட நூல்கள்  தமிழ்மொழிக்குப் பொருள் காட்டும் நூல்களாகக் கொள்ளப்பட்டன. திவாகர, பிங்கல, சூடாமணி போன்ற  நிகண்டுகள் அக்காலத்தில் தமிழ் இலக்கிய - இலக்கண ஏடுகளைப் புரிந்து கொள்வதற்காக இயற்றப்பட்டவைகளாகும். திவாகர முனிவரால் இயற்றப்பட்டது "திவாகரநிகண்டு" ஆகும். பிங்கல முனிவரால் இயற்றப்பட்டது "பிங்கலநிகண்டு"வாகும்.  முற்காலத்தில் மக்கள் இலக்கிய இலக்கணங்களைக் கற்பதற்கு முன்னர்,  நிகண்டுகளை மனப்பாடம் செய்ய வேண்டுமென்ற நியதி இருந்து வந்துள்ளது.

இம்மூன்று நிகண்டுகளின் அடியொட்டித் தோன்றியதே தமிழ் அகராதிகளாகும். அகரம், ஆதி என்ற சொற்களின் சேர்வு "அகராதி"யாகும். "அ" முதற்கொண்டு தமிழ் அரிச்சுவடி எழுத்துக்களின் முறைக்கேற்ப தமிழ்ச் சொற்களுக்கு சரியான கருத்தைத் தரும் நூற்றொகுப்பு அகராதியாக் கொள்ளப்படுகின்றது.
 
அகத்திய முனிவர் தமிழ் மொழியின் முதற்தோற்றப்பாடகக் கருதப்படுகின்றார்.  இவர் இமய மலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட "ஆரியாவர்த்தம்" என்னும் பிரதேசத்தில் வாழ்ந்தவர். அகத்திய முனிவர் இயற்றிய அகத்தியம், முத்தமிழ் இலக்கணமும் அடங்கப்பெற்றதாகும். வடமொழியிலும் பாண்டித்தியம் பெற்றுள்ள அகத்திய முனிவர், வைத்திய சாஸ்திரங்களும் இயற்றியுள்ளார். அவை இல்லாதொழிந்து போயுள்ளமை வருந்தற்குரியது.

எள்ளில்லையெனில் எண்ணெய்யும் இல்லை என்பதுபோல, இலக்கியம் இல்லையெனில் இலக்கணமுமில்லை என்ற பொருள்பட அகத்திய முனிவர் பாடிச்சென்றுள்ளார்.  வடமொழியில் வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தில் இராம - இராவண யுத்தத்திற்கு முன்னரே அகத்திய முனிவர் தமிழ் நாட்டில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இராமாயணம் ஆதிகாவியமாகக் கருதப்பட்டு வருகின்றது. அகத்திய முனிவரிடம்  இலக்கணம் கற்ற பன்னிரெண்டு மாணவர்களில் ஒருவரான தொல்காப்பியர் இயற்றியதே "தொல்காப்பியமா"கும்.

அகத்திய முனிவருக்கும் அவர் தம் மாணவர் தொல்காப்பியருக்குமிடையில் நிகழ்ந்த பிணக்கொன்றே அகத்திய முனிவரின் இலக்கண நூல்கள் அழிந்துபோகக் காரணமாக அமைந்ததெனவும் ஊகம் கூறப்படுகின்றது.

தமிழ் நாட்டில் அகராதிக்கு வழிகோலியவர் வீரமாமுனிவராவார். அவர் தன் அகராதியை நான்கு வகையாகத் தொகுத்து "சதுரகராதி" என்று பெயரிட்டுப் பதிப்பித்தார். அதனை அடியொட்டி உருவானதே ஏனைய தமிழ் அகராதிகளாகும்.  யாழ்ப்பாண அகராதி, கதிரவேற்பிள்ளை தமிழ்மொழியகராதி, தமிழ் சங்க அகராதி, சென்னைப் பல்கலைக்கழக அகராதி என்பன அதன் பின்னர் தொகுக்கப்பட்டவைகளே!
 
1911ம் ஆண்டு டில்லி மாநகரில் நடைபெற்ற ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவின்போது,  கதிரவேற்பிள்ளை அவர்களின் தமிழ் அகராதி வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.  இது "காரனேசன் டிக்சனரி" என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.  இக்காலப் பகுதியிலேயே இராமநாதன் என்பவரால் அகராதியொன்றும் பதிப்பிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

திவான் பகதூர் பவானந்தம் பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்ட அகராதியொன்று 1925ல் வெளியிடப்பட்டுள்ளது. திவான் பகதூர் அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் உயர் பதவி வகுத்தவரும், காவல் துறையில் மிக உயர்ந்த அதிகாரியுமாகவும்  கருதப்படுகின்றார். 1940ல் கழகத் தமிழ் கையகராதி என்ற பெயரில் தமிழ் அகராதியொன்றும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அகராதிகள் அனைத்தும் அக்காலத்து இலக்கிய - இலக்கண நூல்களில் வரும் அருஞ்சொற்களைத் தொகுத்தே பதிப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் அகராதிகளில் தமிழ் வழக்காற்றுச் சொற்களுக்கான பொருள்கள் பெரும்பாலாகக் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2500 ஆண்டுகளாக இலங்கை நாட்டின் வரலாற்றைக் கட்டியெழுப்பியவர்கள் இந்தியாவின் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் குடிபெயர்ந்தோர் எனக் கூறப்படுகின்றது. தொல்பொருள் ஆய்வுகளும் வரலாற்றுத் தரவுகளும் இதற்குச் சான்று பகிர்கின்றன. அதனால் இலங்கையில் இரு மொழிகளைப் புழக்கத்தில் கொண்டுள்ள மக்கள் உருவாகினர். இவ்வீரின மக்களினதும்  மதவழிபாடுகள், கலாசாரங்கள் இலக்கிய ரசனைகள், சம்பிரதாயங்கள், பண்பாடுகள் அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன.  அத்துடன் சிங்கள- தமிழ் மொழிகளும் ஒன்றோடொன்று போசணை செய்யப்பட்டு வந்துள்ளன.

கோட்டை இராஜ்யக் காலத்திலும் அதனைத் தொடர்ந்து வந்த காலங்களிலும் சிங்கள இலக்கியத்துடன்  தமிழ் இலக்கிய ஆதிக்கம் பரவலாக ஏற்பட்டுள்ளமைக்கான சான்றுகள் காணப்பட்டன. ஆங்கிலேயர்  ஆங்கில மொழியை அரசமொழியாகவும், கல்விமொழியாகவும்  உயர்த்தினார்கள்.  இதனால் ஒன்றரை நூற்றாண்டுகளாக சிங்களம்- தமிழ் மொழிகளின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சுதந்திரத்தின் பின்னர் சுதேச மொழிகள் இரண்டினதும் வளர்ச்சி மேம்பாடடையத் தொடங்கியதெனலாம். இலங்கையில் கல்வி, தொழில்துறைகளின் மேம்பாட்டிற்காக  சிங்களத்-தமிழ் அகராதியொன்று அரச கரும மொழித்திணைக்களத்தாலும், தமிழ் சிங்கள அகராதியொன்று "சிடா" நிறுவனத்தின் அனுசரணையுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை நாடானது சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் கல்வி, அரசகருமம், தொழில்துறை ஆகிய சகலவற்றிலும் பயன்படுத்திவருவதனால், மும்மொழிகளினதும் அகராதியின் தேவை உணரப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திருமதி டப்ளிவ்.ஜே. பர்னாண்டோ அவர்களால் 1992ம் ஆண்டில் சிறிய மும்மொழி அகராதியொன்று, பொது அறிவு மஞ்சரியுடன் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் காலங்களில் மும்மொழி அகராதியின் தேவை மிக மிக அவசியமானதாகக் கருதப்படுகின்றது!   

இம்முயற்சியில் கரிசனை கொண்டுள்ளவர்கள் கொரோனா முடக்க காலத்தைப் பயன்படுத்தி, மும்மொழி அகராதிகள் உருவாகளில் ஈடுபடலாம் என்று "வேட்டை" மூலமாக ஆலோசனை தருகின்றோம்!


Post a Comment

0 Comments