
வெள்ளை சர்க்கரை உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால் பலரும் சர்க்கரைக்கு மாற்று வழிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்றுதான் தேன். தேன் இன்று பலரும் வீட்டில் பயன்படுத்தி வரும் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தேனை அதிகம் உணவுகளில், பானங்களில் கலந்து சாப்பிடுகின்றனர். ஆனால் அதிலும் கலப்படம், ஆரோக்கியமற்ற விஷயங்களை ஊக்குவித்தல் என்பது ஆரோக்கிய உணவுகளின் மீது சந்தேகத்தை உண்டாக்குகிறது. எனவே நீங்கள் கலப்படங்களைக் கண்டு ஏமாறாமல் இருக்க இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்கள்.
சுத்தமான தேன் என்பது ஊட்டச்சத்து மிக்கதாகவும், கொழுப்பு நீக்கப்பட்டதாகவும் இருக்கும். குறிப்பாக ஆண்டி ஆக்ஸிடண்ட், ஆண்டிபாக்டீரியல் பண்புகள் நிறைவாக இருக்கும். ஆனால் கலப்படம் செய்யப்பட்ட தேன் வகைகள் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தால் உடல் நலத்திற்குக் கேடு என்று கூறப்படுகிறது. அதில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடும். அதேபோல் உடல் பருமன் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எனவே அடுத்த முறை தேன் வாங்கும்போது அது கலப்படமற்ற தூய தேன் தானா என கண்டறிந்து வாங்குங்கள் அல்லது வீட்டில் தற்போது பயன்படுத்தி வரும் தேன் ஒரிஜினல்தானா என கண்டறியுங்கள். அதற்கு இந்த டெஸ்ட் செய்து பாருங்கள்.
இந்த டெஸ்டானது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டது. சுத்தமான தண்ணீரை ஒரு கிளாஸில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 சொட்டு தேனை விடுங்கள். தேன் அப்படியே தண்ணீருக்குள் கெட்டிப்பதத்திலேயே கீழே சென்று விழுந்தால் அது சுத்தமான கலப்படமற்ற தேன்.
ஒருவேளை அந்த தேன் ஊற்றிய உடனேயே தண்ணீரோடு தண்ணீராகக் கலந்து நீரில் நிறம் மாறினால் அது கலப்படம் நிறைந்த தேன். எனவே அடுத்தமுறை இந்த சோதனையை செய்து பார்த்து தேன் வாங்குங்கள்.
0 Comments