இளைய தலைமுறையினரிடத்தில் வாசிப்புப் பழக்கத்தையும் படைப்பாக்கத்திறனையும் உருவாக்குவதெப்படி?

இளைய தலைமுறையினரிடத்தில் வாசிப்புப் பழக்கத்தையும் படைப்பாக்கத்திறனையும் உருவாக்குவதெப்படி?

முப்பது ஆண்டுகளுக்கு  முன்னர் இளைஞர்கள் ஏதாவதொரு பத்திரிகை, புத்தகம், நாவலைக் கையில் எடுத்துக் கொண்டு செல்வதைப் பெருமையாகக் கருதினர். அதுமட்டுமல்லாது அவற்றை வாசிப்பதிலும், வாசித்தவற்றிலிருந்து ஆக்கங்களை உருவாக்குவதிலும் அவர்கள் மிகவும் ஆர்வம் காட்டினர். அடிக்கடி நூலகங்கள் சென்று புத்தகங்களை இரவலாக வாங்கி இயன்றளவு கெதியில் வாசித்து விட்டுத் திருப்பிக் கொடுத்து மறுபடியும் வேறு புத்தகங்களை வாங்கி, இப்படியே வாசித்து வாசித்து புத்தகப் பூச்சிகளாக இளைஞர்கள் இருந்த காலமொன்றிருந்தது.

அக்காலத்தை  பின்நோக்கிப் பார்த்தால், படைப்பாளிகளும், சிந்தனையாளர்களும் தமிழ் எழுத்துலகை மிளிரச் செய்தமை அறிய முடிகின்றது.  இன்றும் கனிசமான அளவு ஆங்காங்கே பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிக் கொண்டிருப்போர் அக்காலத்துப்  படைப்பாளிகளேயல்லாமல் இக்காலத்தில் உருவான அல்லது உருவாக்கப் பட்ட படைப்பாளிகளல்லர். தாம் வாசித்தவற்றைக் கிரகித்து சிறுகதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் எழுதித் தள்ளிக்கொண்டிருக்கின்ற இளம் படைப்பாளிகள் அக்காலத்தில் நிறையவே உருவாக்கப்பட்டமை இதற்குக் காரணமாகும். அவர்களது படைப்புக்களை பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் போட்டிபோட்டுக் கொண்டு அக்காலத்தில் வெளியிட்டு வந்தமையும் அக்காலத்தில் படைப்பாளர்கள் உருவாகக் காரணமாக அமைந்ததெனலாம்.

சிலர் சினிமாத் துறையே  வாசிப்புப் பழக்கத்தையும், ஆக்கத்திறனையும் இல்லாமலாக்கச் செய்ததெனக் குறை கூற முற்படுகின்றனர். சினிமாத்துறை உருவாகி, வளர்ச்சியடைந்த காலட்டத்தில்தான் அநேகமான நல்ல படைப்பாளர்கள் உருவாகியிருக்கினர் என்பதை மறுக்க முடியாது.  சினிமா அந்தளவுக்கு வாசிப்புப் பழக்கத்தையோ, ஆக்கங்களை உருவாக்கும் தன்மையையோ இளைய தலைமுறையினரிடத்தில் இல்லாமாக்கவில்லை என்றே கூறலாம்.
 
ஆனால், 1980களுக்குப் பின்னர் தொலைக்காட்சி பாவனைக்கு வந்ததும், நிலைமை சிறிது சிறிதாக மாறத் தலைப்பட்டது. பின்னர் உட்புகுந்த சின்னத்திரை நாடகங்கள், மெகா செரீஸ் இளைய தலைமுறையினரின் வாசிப்புப் பழக்கத்தையும், ஆக்கும் திறனையும் இல்லாமாக்கியதென்பது தெளிவு. அதன் பின்னர் பாவனைக்கு வந்த  தொலை தொடர்பு சாதனங்கள் இளைய தலைமுறையினரை நூல்கதை தொடுவது கூடப் பாவம் என்ற நிலைக்கு ஆளாக்கி விட்டதெனலாம்.

இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கையடக்கத் தொலைபேசி, பேஸ்புக் என்பவற்றிற்கு அடிமையாகி விட்ட நிலை உருவாகிவிட்டமையால், இளைய தலைமுறையினர் ஒரு சிறு கடிதத்தைக்கூட சரியான முறையில் எழுதிக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டமை வருந்தற்குரியதே.

அப்படி என்னதால் கையடக்கத் தொலைபேசியில் இலயித்து விடுகின்றார்களோ தெரியவில்லை. பஸ்களில், புகையிரதங்களில், வாகனங்களில், பாதையைக் கடக்கும்போதும் கூட தொலைபேசியில் தொங்கிக் கொண்டிருப்பவர்களை நாம் இன்று பார்க்கின்றோம்.

இளைய தலைமுறையினரை இதிலிருந்து மீட்டெடுப்பது எப்படி என்பது பெரும்  புதிராகவே இருக்கின்றது. மாணவர்களையும் இளைய தலைமுறையினரையும், நூல்களை வாசிக்கின்ற மழக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை படைப்பாளிகளாக மாற்றச் செய்வது இன்றைய பத்திரிகைகளினதும், பதிப்பகங்களினதும் கடமையாகும்.

பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் வெறுமனே வர்த்தக நோக்காகக் கொண்டு துக்கனா துணுக்குகளையும், ஜோக்குகளையும், கேள்வி பதில்களையும், அரை நிர்வாணப் படங்களையும்  போட்டு அவற்றை நிரப்பாமல், இளைய தலைமுறையினருக்குத் தரமான ஆக்கங்களை உருவாக்க வழிகாட்டி,  அவற்றைப்  பிரசுரித்து அவர்களுக்கு எழுத்துத் துறையின் மீது அக்கறை காட்ட வைக்க வேண்டும். பதிப்பகங்கள் படைப்பாளிகளின் தரமான ஆக்கங்களை இனங்கண்டு வெளியிட்டு வைக்க வேண்டும். இன்று குழந்தை இலக்கியம், நாவல் எழுதும் படைப்பாளிகள்  அருகிவிட்டனர். அவர்களை உருவாக்க வேண்டியதும், அவ்வாறான படைப்புக்களை வெளியிட்டு வைக்க வேண்டியதும், பதிப்பகங்களின் கடமையாகும்.

பிரதேசங்கள் தோறும் எழுத்தாளர் ஒன்றியங்கள் உருவாக்கப்படல் வேண்டும். அவற்றின் ஒன்று கூடல்களின்போது ஆக்கங்களை உருவாக்குவது எப்படி  என்பதை மூத்த பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் பயிற்றுவிக்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post