தூக்கத்திலேயே 160 கி.மீ தொலைவு சென்ற 11 வயது சிறுவன் – கின்னஸ் அமைப்பு பகிர்ந்து கொண்ட தகவல்

தூக்கத்திலேயே 160 கி.மீ தொலைவு சென்ற 11 வயது சிறுவன் – கின்னஸ் அமைப்பு பகிர்ந்து கொண்ட தகவல்


தூக்கத்தில் நடக்கின்ற நோய் அரிதிலும் அரிதாக சிலருக்கு இருக்கிறது. இப்படி நடப்பவர்களை நம்மில் பலர் நேரில் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்றாலும் கூட, திரைப்படங்களில் இத்தகைய காட்சிகளை நாம் பார்த்திருக்க முடியும்.

 
அந்த வகையில், 11 வயது சிறுவன் தூக்கத்திலேயே 160 கிலோமீட்டர் தொலைவு வரையிலும் நடந்து சென்றது குறித்த தகவலை கின்னஸ் சாதனை அமைப்பு பகிர்ந்துள்ளது. ஆனால் இந்த நிகழ்வு இன்று, நேற்று நடந்தது அல்ல. சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வு என்பதை கின்னஸ் அமைப்பு பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் இந்தியானா மாகாணம், பெரு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் டிக்சன் என்ற நபர் தனது இளம் வயதில் இவ்வளவு தொலை தூரம் தூக்கத்திலேயே நடந்து சென்றுள்ளார். வெறுமனே பைஜாமா உடைமட்டும் அணிந்திருந்த இவர், காலில் காலணிகள் கூட இல்லாமல் ரயில் தடத்தில் வெறுமனே நடந்து சென்று இருக்கிறார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது. அதிகாலை 2.45 மணி அளவில் ரயில் தடத்தின் மீது இளம் வயது சிறுவன் தடுமாறியபடி நடந்து வருவதை பார்த்த ரயில்வே ஊழியர்கள், உடனடியாக அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 160 கிலோமீட்டர் தொலைவு சிறுவன் நேரடியாக நடந்து வந்துவிடவில்லை. வீட்டிற்கு அருகாமையில் உள்ள சரக்கு ரயிலில் ஏறி வெகு தொலைவுக்கு அப்பால் இறங்கி ரயில் தடத்தில் நடந்து சென்றுள்ளார். ஆனால் ரயிலில் ஏறியதோ, இறங்கியதோ சிறுவனுக்கு நினைவில் இல்லை. அந்த வகையில் சிறுவனின் மொத்த பயணத்தையும் தூக்கத்தில் நடந்த பயணமாகவே குறிப்பிடுகின்றனர். ரயில் தடத்தில் வெறும் கால்களுடன் நடந்து வந்ததால் சிறுவனின் கால்களில் லேசான காயங்கள் இருந்துள்ளன. ஆனால் அதைக் கடந்து பெரிய அளவுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

இந்த விஷயம் குறித்து சிறுவனின் தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், விரைந்து வந்து மகனை மீட்டுக் கொண்டார். சம்பவம் நடந்த முதல் நாள் இரவு 10 மணி முதல் தனது மகனை காணவில்லை என்று தேடி வந்ததாகவும் அவர் கூறினார். தன் மகனுக்கு தூக்கத்தில் நடக்கின்ற வியாதி இருக்கிறது என்று தெரியும் என்றாலும், வீட்டை விட்டு வெளியே செல்லும் அளவுக்கு மோசமான நிலையில் இருப்பான் என்று அறிந்திருக்கவில்லை என்று அந்த தாயார் குறிப்பிட்டார்.

இது குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில், இளம் வயதில் தூக்கத்தில் நடக்கின்ற வியாதி இருந்தாலும், குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அந்த வியாதி தாமாகவே மறைந்துவிடும் என்று தெரிவித்தனர். அளவு கடந்து தூங்குபவர்கள், தூக்கமின்மையால் தவிப்பவர்கள், குறட்டை பிரச்சினை, கோமா நிலை என்று தூக்கம் சார்ந்து எண்ணற்ற பிரச்சினைகளை மனிதர்கள் எதிர்கொண்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Source:news18


 



Post a Comment

Previous Post Next Post