பாத்ததும்பற தோ;தல் தொகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய குடியிருப்புக்கள் வரிசையில் உடத்தலவின்னை பிரதான இடத்தை வகிக்கின்றது. கடல் மட்டத்திலிருந்த 1700 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இக்குடியிருப்பு புராதன சிங்கள மன்னர்களது கால வரலாற்றோடு தொடர்புடையதாகப் பேசப்படுகின்றது. சுமார் 500 முதல் 700 வருட காலத்துக்கு உரிமை கோரும் உடத்தலவின்னைக் குடியிருப்பு, கட்டுகஸ்தொட்டை - மடவலைப் பிராதான பாதையின் மேற்குத் திசையாக பொல்கொல்லைச் சந்தியிலிருந்து தொரகமுவ பாதையில் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கின்றது. வரலாற்றுக் காலத்திலிருந்து பொல்கொல்லை ஓர் ஆற்றங்கரை இறங்குதுறையாக விளங்கியதோடு, அவ்விறங்குதுறை அளுத்கம்தொட்ட என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. அக்காலை பாலங்கள் இல்லாததன் காரணமாக ஆற்றின் இறங்குதுறைகளே முக்கியத்துவம் பெற்றிருந்தன.
ஆங்கிலேயர் வருகையைத் தொடர்ந்து மகாவலி நெடுகிலும் அமைக்கப்பட்ட பாலங்களில் முதலாவது பாலம் பேராதனையில் அமைக்கப்பட்ட மரப்பாலமாகும். அதனை அடுத்து அளுத்கம்தொட்டைக்கு சமீபமாக கட்டுகஸ்தொட்டைப் பாலம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையில் பாலங்கள் அமைக்கும் பணியில் பெரும் பங்கு வகித்தவர் மேஜர் தோமஸ் ஸ்கினர் (1841-1867) ஆவார். அவரது காலத்தில் 43 பாலங்கள் அமைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுவதுண்டு. இவர் ஆங்கிலேய கவர்னர்கள் காலத்தில் பணிபுரிந்தவராவார்.
அவரின் அரிய முயற்சியாலேயே பேராதனை மரப்பாலம் 1833ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. முதிரை மரப்பலகைகளாலான அப்பாலம் மரஆணிகள், முறிச்சிகள் (இணைப்பு) கொண்டு பொருத்தப்பட்டிருந்தன. அப்பாலத்தின் மாதிரிப்படம் தற்போதும் இங்கிலாந்து தென் கென்ஸிஸ்டன் நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. பேராதனையில் அமைந்துள்ள தற்போதைய கொங்கிரீட் பாலம் 1906ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாகும்.
ஆங்கிலேய அதிகாரி சேர் ஜோன் டொய்லியின் குறிப்புகளிலிருந்து அளுத்கம்தொட்ட, லேவெல்ல இறங்கு துறைகள் முன்னர் பள்ளேகம்பஹ நிருவாகப் பிரிவுக்குட்பட்டதாக விளங்கியிருக்கியதாகும். இந்நிருவாகப் பிரிவுக்குள் அம்பிட்டிய உட்பட ஐந்து பிரதான பகுதிகள் இணைக்கப்பட்டிருந்ததோடு, உடகம்பஹ பிரிவில் ஹல்லொழுவ, பேராதனை உட்பட ஐந்து பகுதிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. ஸ்ரீவிக்ரமராசசிங்கனது ஆட்சியின்போது இப்பகுதிகளை நிருவகிக்கும் பிரதானியாக மொல்லிகொட அதிகாரம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
உடத்தலவின்னையிலிருந்து மாத்தளையை அடையும் பிரதான பாதை பற்றி ஈ போல் பீரிஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
”There have been two main routes Mahanuwara to Matale during the olden days. One route was from Kandy through Srimalwatte across Lewelletota and through the following villages. (In order) Amunugam, Gunnepane, Nepana, Madawala medige, Pitiyegedera, Wattegama, Wattegama town, Yatawara, Welegala, Ukuwela, to Matale, which was than known as Gongawela..... the other route ran as thus starting from Mahanuwara via Watapuluwa through Polgolla the aproach to Polgolla being the Aluthgamthotta (ferry) and through Doragamuwa, Udurawana, MataleThis route was known and even now called as the Aluthganthotta - Atgala Para...” “Sinhale and the Patriotes 1815-1818” (Pole Peiris)
மன்னன் நரேந்திர சிங்கனது காலத்தோடு (1707-1758) இப்பாதை பற்றிப் பேசப்பட்டபோதும் அவருக்கு முன்பிருந்தே பாதை பிரதான போக்குவரத்துப் பாதையாக விளங்கியிருக்க வேண்டும் எனக்கருத முடிகின்றது. தொன்று தொட்டு பொருளாதார ரீதியாக மலைநாட்டையும் திருகோணமலையையும் இணைக்கும் முகவாயிலில் மாத்தளை விளங்கியதால், ஆளுனர் பிரடரிக் நோர்த்தை (1798-1805) சீதாவாக்கையில் சந்தித்த மகா பிரதானி பிலிமதலாவ நிலமே கொழும்பிலிருந்து மலைநாடூடாக திருகோணமலையை அடைவதற்கான ஒரு பாதையை அமைக்கும் படி விடுத்த வேண்டுகோள் உடனடியாக நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. ஆங்கிலேய அதிகாரி மெக்டுவலின் ஒப்பந்தப் பத்திரத்திலும் இப்பாதை பற்றி குறிப்பிடப் பட்டிருந்தபோதிலும், அவ்வொப்பந்தம் கண்டிய இராச சபையில் அங்கீகரிக்கப்படவில்லையெனக் குறிப்பிடப்படுவதுண்டு. இவ்வேண்டுகோள்களிலிருந்து கண்டி மாத்தளை- திருகோணமலைப் பாதையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
உடத்தலவின்னைக் குடியிருப்பின் எல்லையில் காணப்படும் அத்கால என்ற கிராமம் அரசர்களுக்குச் சொந்தமான யானைகளைப் பராமரிக்கும் யானைப்பந்தியாக விளங்கியிருக்கின்றது. அதன் நிருவாக அதிகாரி கஜநாயக்க என அழைக்கப்படுவார். கம்பளை - நாவலப்பிட்டி பிரதான பாதையிலும் "அக்தால" என ஒரு கிராமம் இருப்பதை அறியலாம்.
உடத்தலவின்னையின் எல்லையில் அமைந்திருக்கும் புராதன பௌத்த விகாரை தலகுண விகாரை என அழைக்கப்படுகின்றது. விகாரை நிர்மாணிக்கப்பட்ட காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறாதபோதும் தொன்று தொட்டு சிங்கள அரசர்களது வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக அவ்விகாரை விளங்கியதாகக் கூறப்படுவதுண்டு.
எல்லாளனுக்கு எதிராக தெற்கிலிருந்து படையெடுத்துச் சென்ற துட்டகைமுனு (கி.மு. 161-137) வடக்கு நோக்கி ஆயிரக்கணக்கான படைவீரர்களுடன் மகாவலிக்கரை நெடுகிலும் கட்டுகஸ்தொட்ட, தலவின்ன, மீகம்மன, வேடறுவ ஊடாகப் பயணஞ்செய்ததாகக் கதைகள் பேசப்படுவதுண்டு. குத்தா என்ற இயற்பெயரைக் கொண்ட அரசன் துட்டகைமுனு தனது இளமைக் காலத்தில் தந்தையுடன் பகைமை பூண்டு பன்னிரண்டு வருடங்களாக மாறுவேடம் தரித்து கொத்மலை - கொடகேபிட்டியில் மறைந்து வாழ்ந்த பின் மேற்கொண்ட வடக்கு நோக்கிய அவனது படையெடுப்பை நினைவு கூரும் வகையில் துட்டகைமுனு தலகுண விகாரையை நிர்மாணித்ததாகப் பத்திரிகைக்குறிப்பு கூறுகின்றது. (லங்காதீப - 2011 ஓகஸ்ட் 4)
அக்காலை உடத்தலவின்னைப் பிரதேசமெங்கும் பெருமளவு எள்ளுத் தானியம் சாகுபடி செய்யப்பட்டதன் காரணமாக கிராமத்தின் பெயர் தலவின்ன எனவும், அல்லது தலப்பத்து மரங்கள் பிரதேசத்தில் அதிகளவு காணப்பட்டதால் தலவின்ன என்றும் பெயர் பிறந்ததாகக் கூறப்படும் கதைகள் உண்டு. தல என்பது எள்ளையும், இன்ன என்பது அமைவிடம் என்பதையும் குறிக்கும் சிங்கள மொழிச் சொற்களாகும். “இன்ன” என்ற சொல்லோடிணைந்ததாக கல்ஹின்ன, கொஸ்ஸின்ன, கணஹின்ன, மல்வானஹின்ன எனப் பல கிராமங்கள் மத்திய பிரதேசமெங்கும் காணப்படுகின்றன. பூர்வீக காலமுதல் “தலப்பத்து” இலங்கையில் பொருளாதார முக்கியத்துவம் பெற்ற மரமாகவும் கலாசார பெறுமானமிக்க மரமாகவும் விளங்கியிருக்கின்றது. எழுத்தாளர் போல் பீரிஸ் ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்தில் தலப்பத்து மரத்தை அதிகமாகப் பயிரிடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விசாலமான தலவின்னை நிலப்பரப்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதி உடத்தலவின்னை மெடிகே எனவும் சிங்களக் குடிகள் நிறைந்து வாழும் பகுதி பள்ளேதலவின்னை எனவும் அழைக்கப்படுகின்றது. உடத்தலவின்னை மெடிகே முஸ்லிம் குடியிருப்பு, மாத்தளையை அடையும் பிரதான பாதையின் மையத்தில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். 1881ம் ஆண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சனத்தொகைக் கணக்கெடுப்பின்போது உடத்தலவின்னையில் 461 முஸ்லிம்கள் வாழ்ந்ததாக அறிக்ககைகள் கூறுகின்றன. இத்தொகை நூறு சதவீத முஸ்லிம்களைக் கொண்ட எண்ணிக்கையாகும். 1881ம் ஆண்டைய சனத்தொகை மதிப்பீட்டில் மத்திய பிரதேசத்தில் பின்வரும் எண்ணிக்கையினராக முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கின்றனர்.
ஹாரிஸ்பத்துவ 4917
தும்பர 3814
உடுநுவரை 1694
ஹேவாஹெட்ட 1371
யட்டிநுவரை 832
இவ்வட்டவணையிலிருந்து தும்பறைப் பிரதேசத்தில் கணிசமான எண்ணிக்கையினராக முஸ்லிம்கள் வாழ்ந்ததை அறியலாம். உடத்தலவின்னை தொன்று தொட்டு தும்பறை நிருவாகப் பிரிவோடு சேர்ந்க்கப்பட்டிருந்தது. முதலிலிருந்து தும்பறைப் பிரதேசத்திலேயே மடவலை மெடிகே, வத்தேகெதர மெடிகே, குண்ணேபான மெடிகே எனப் பல மெடிகேக்குடியிருப்புக்கள் காணப்பட்டதோடு, அவற்றில் முஸ்லிம்களே செறிவாக வாழ்ந்திருக்கின்றனர். முஸ்லிம்களது வர்த்தகச் செல்வாக்கையும், வர்த்தக ஆதிபத்தியத்தையும் உறுதி செய்வதாக இக்குடியிருப்புக்கள் காணப்பட்டன. பிரபல வரலாற்றாசியர் கலாநிதி லோனா தேவராஜா மெடிகேக் குடியிருப்புக்கள் பற்றி பின் வருமாறு எழுதியுள்ளார்.
“People whos duty was to trade for the king. Only six villages in Kanda-uda had the madige title”.
(தொடரும்)
0 Comments