Ticker

6/recent/ticker-posts

Ad Code



நானும் அவளும் -23

“குவைத்தில் இருந்து முகவர்களான அரபிகளுக்கு மொழி பெயர்ப்பு செய்வது, அவர்கள் அனுப்பும் விசாவுகளுக்கு டிக்கட் எடுத்து பயணப் படுவோர்களை அனுப்பி வைப்பது என்று மிகவும் பிஸியானேன்.”

“வீட்டில் என்னென்ன காணாமல் போனதோ அத்தனையும் கொண்டு வந்து சேர்த்தேன்.  இரவு பகல் பாராமல் ஏர்போர்ட், ஆபிஸ் என்று அலைந்தேன்”.

“ஒருநாள் எனக்குப் ட்யூஷன் சொல்லித் தந்த ஆசிரியர் தன்னை வந்து காணும்படி அழைப்பு விடுத்து இருந்தார்.  சென்று சந்தித்தேன். அவர் கேட்ட முதல் கேள்வி “என்ன அத்தை மகனுக்கு இப்போது உன் வருமானத்தில் எதுவும் கொடுப்பதில்லையா?’ என்பதே. 

“நான் அவரை குழப்பத்துடன் பார்க்க, அவர் ‘ஒன்றும் இல்லை உன் அத்தை மகனை நேற்று கண்டு பேசிக்கொண்டு இருந்தேன்.  என்றும் உன்னைப் பற்றி உயர்வாக பேசும் அவர் திடீரென்று “நீ மோசமான நடத்தை உள்ளவள் என்றும், அதனால் உன் கையில் நன்றாகவே காசு புழங்குகின்றது’ என்றும் சொன்னார்.”

“ஏன்? இப்போது அவர்களுக்கு நீ எதுவும் அனுப்புவதில்லையா?’ என்று கேட்டார்.,  நான் நடந்தவற்றை சுருக்கமாக சொன்னேன்.”

“ஒ... அதுதானே பார்த்தேன்.  நேற்று வரை தேவையாக இருந்த நீ ஒரே நாளில் எப்படி ராட்சசி ஆனாய் என்று.  பரவாயில்லை. கொஞ்சம் பார்த்து நடந்துக் கொள்” என்றார்.

“விடை பெற்று வீடு வந்த பின்னும் அவர் சொன்ன வார்த்தைகள் என்னை வதைத்த வண்ணமே இருந்தன. இதில் அக்காவின் புருஷன் வேறு “இனியும் உன் தங்கை இரவில் லேட்டாக வந்தால் கதவைத் திறக்காதே.  எக்கேடோ கெட்டு போகட்டும். நான் சொன்னதை மீறினால் நான் உன்னை விட்டும் விலகி போய் விடுவேன்” என்று சொன்னதாக வீடு வருமுன்னமேயே எனக்குத் தெரிய வந்தது,

“வீட்டுக்கு வந்ததுமே அக்காவை அழைத்தேன்.  அவள் புருஷனின் பெயர் சொல்லி உனக்கும் அவருக்கும் என்ன உறவு? என்றேன்.  அதற்கவள் அவர் என் புருஷன் என்றாள்.”

“ஆம்.  அவர் உனக்குத் தான் புருஷன், எனக்கில்லை.  அதனால் அவரின் எந்த உத்தரவையும் உன்னுடன் வைத்துக் கொள்ள சொல்.  எனக்கு சட்டம் போடுவதாக இருந்தால் ஒன்று என்னையும் கட்டிக் கொள்ள சொல்.  அத்துடன் வீட்டின் அத்தனை பொறுப்பையும் எடுத்துக் கொள்ள சொல்.  இல்லையென்றால் என் விசயத்தில் தலையிடாமல் இருக்கச் சொல்” என்றேன் கடுமையாக.

“அதன் பிறகு அவர் என் விசயத்தில் தலையிடவே இல்லை.”

“ஒன்றாக இருந்தவரையில் நன்றாக இருந்த அத்தை மகன் தனியாக சென்றபின் வில்லனாக மாறத் தொடங்கினார்.  முதன் முதலாக அவர் கிளப்பிய பிரச்சினை வீட்டுக்கு மின்சாரம் தரும் மீட்டரில் எதோ வயர்களை சொருகி மின்சாரம் திருடுவது.  வீட்டில் ஓடும் வாசிங் மெஷின் அந்நேரம் தான் வேலை செய்யும்.  தான்  செய்த அந்தக் காரியத்தை மறைத்து இப்போது நாங்கள் மின்சாரம் திருடுவதாக மின்சார சபைக்கு அறிவித்தார்”

“யார் செய்த புண்ணியமோ, அந்நேரம் நான் ஊரில் இருந்தேன்.  தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே மின்சாரத்துடன் இணைத்திருந்த வயர்களை  எடுத்து விட்டேன்.  அதிகாரிகள் வந்து பொய்த்தகவல் என்று சொல்லி சென்றனர்.”

”அதுபோலவே தண்ணீரிலும் எக்ஸ்ட்ரா கனக்கஷன் கொடுத்து இருந்தார்.  அதையும் நாம் பண்ணியதாக அனுப்பிய பெட்டிஷனில் மீண்டும் அதிகாரிகள் வீட்டுக்கு வந்தனர்.  நல்ல வேலை தகவல் முன்னதாகவே தெரிந்ததால் அடையாளம் இன்றி எல்லாவற்றையும் அழித்து  விட்டிருந்தேன்.”

“அது போதாதென்று அக்காவுக்கு எழுதிக் கொடுத்த வீட்டின் ஒருபகுதியையும் திரும்ப பெற்றுக் கொள்ள முயல்கின்றார் என்ற தகவல் கிடைக்க, ‘உன் இடத்தை பின்னர் உனக்கே தருகின்றேன்’ என்ற உறுதி மொழியுடன் அவள் பெயரில் இருந்த இடத்தை அவள் எனக்கு பரிசாய் தந்தாக எழுதி எடுத்துக் கொண்டேன்.”

‘தன்னுடைய இடத்தில் நாம் அத்துமீறி இருப்பதாக அத்தையின் மகன் போலீசில் கொடுத்த புகாரில், போலிஸ் நிலையம் வரை போக நேரிட்டது. அக்காவின் வீட்டின் பத்திரம் அவளிடம்  இருந்து என் பெயருக்கு  வந்த பத்திரங்களை காட்டி, அந்த பிரச்சினையில் இருந்தும் பிழைத்துக்கொண்டேன்.”

“ஒவ்வொருமுறையும் ஏவி விடும் கணைகளில் இருந்து விடுபடுவதே பெரும் துன்பம் என்றானது. ஒவ்வொரு பிரச்சினையையும் சமாளிக்க ஏகப்பட்ட செலவும் ஆனது.”

“எல்லா பிரச்சினைகளும் முடிய மீண்டும் என் வாழ்க்கை மத்திய கிழக்கு என்றானது.  முதிர்கன்னியாகியும் என் எதிர்காலத்தை கண்டுகொள்ள யாரும் இல்லாததால் கொஞ்சம் நெருங்கியவர்கள்  ‘நீயே ஒரு துணையை  தேடிக் கொள்வதுதானே’ என்று அறிவுறுத்தத் தொடங்கினர்”

“எப்படியோ என்னுடன் நெருக்கமாக பழகிய ஓர் அரபி தன்னை மனம் முடிக்கும் படி வேண்டினார்.  எனக்கு விருப்பம் இல்லையெனினும் என் பாதுகாவலுக்காக திருமணம் செய்யலாமோ என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.”

“தான் அரசாங்க வேலையில் இருப்பதாயும், அப்படி அரசாங்கத்தில் பணி புரிபவர்கள் வெளிநாட்டவரை மணக்க தன் நாட்டின் சட்டம் இடம் கொடாது என்றும், நாம் இலங்கை சென்றே பதிவு திருமணம் செய்யலாம் என்றும் கேட்டார்.”

“நானும் மறுப்பேதும் சொல்லாமல் அவருடன் இலங்கையை நோக்கி பயணப் பட்டேன்.  உடன் வந்தவரை விடுதியில் தங்கவிட்டு நான் மட்டும் வீடு சென்றேன்.  என் எண்ணத்துக்கு தடை விதிக்க யாரும் இருக்கவில்லை. இருவரும் பதிவுத்திருமணம் செய்தபின் திரும்பி வந்தோம்.”(தொடரும்)

Post a Comment

0 Comments