Ticker

6/recent/ticker-posts

Ad Code



எதிரிகளை துன்புறுத்த பாஜகவின் கிளைகளாக செயல்படும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு: சிவசேனா தாக்கு

அரசியலில் உள்ள எதிரிகளை துன்புறுத்தவே மத்திய விசாரணை அமைப்புகளாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, ஆகியவை பாஜகவின் கிளைகளாகப் பயன்படுகின்றன, இதில் பாஜக எந்தமாநிலத்தில் ஆட்சியில் இல்லாமல் இருக்கிறதோ அங்கு அமலாக்கப்பிரிவு வேகமாகச் செயல்படுகிறது என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’வில் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது

மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை செயல்பாடு குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. அரசின் கூண்டுக்குள் அடைபட்ட கிளி சிபிஐ அமைப்பு என்றும், அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை செயல்பாடு குறித்து சந்தேகங்களையும் நீதிமன்றம் எழுப்பியுள்ளது. மத்திய விசாரணை அமைப்புகள் அனைத்தும் பாஜகவின் கிளைகளாகச் செயல்பட்டு அரசியல் எதிரிகளை துன்புறுத்தவே பயன்படுகின்றன.

மத்திய அமைச்சர் நாராயண் ரானே விவகாரத்தில் அவருக்குஎதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை நீதிமன்றம் நியாயப்படுத்தியுள்ளது. ஆனால், அந்த வழக்கில் சிபிஐ விசாரணையும் கோரப்படுகிறது, இதன்மூலம் சிபிஐ முக்கியத்துவம் அழிவது தொடங்கிவிட்டது.

கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்னும் சில வழக்குகள் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவால் விசாரிக்கப்படவில்லை. அதில் குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை, அமலாக்கப்பிரிவு எந்த சொத்தையும் பறிமுதல் செய்யாமல் இருக்கிறது என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது.

மத்திய விசாரணை அமைப்புகள் செயல்பாடுகள் பாரபட்சமானது,நியாயமற்றது என்று உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது. பல கோப்புகள் தயாரிக்கப்பட்டு, அரசியல் தலைவர்களின் உத்தரவுக்கு ஏற்றார்போல் செயல்படுத்தப்படுகிறது. சில கோப்புகள் சிலர் மீது அழுத்தம் தரப் பயன்படுத்தப்படுகிறது. எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கட்சிமாற்றப்படவும் இந்த கோப்புகளைப் பயன்படுத்தப்படுகிறது.

அமலாக்கப்பிரிவின் துரத்தல், மிரட்டலைத் தவிர்க்க பல அரசியல் தலைவர்கள் பாஜகவில் சேர்ந்துவிட்டார்கள், சிலர் அமைச்சர்களாகிவிட்டார்கள். பாஜகவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு எதிரான வழக்குகள் மூடப்பட்டுவிட்டன. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அமலாக்கப்பிரிவு மிகவும்தீவிரமாகச் செயல்படுகிறது.

பாஜகவின் புதிய கிளைகள் போன்று அமலாக்கப்பிரிவும், சிபிஐ அமைப்பும் செயல்படுகின்றன. அமலாக்கப்பிரிவின் மூத்த இணை இயக்குநர் கூட விரைவில் பாஜகவில் இணைய உள்ளார். பல்வேறு வழக்கு விசாரணைகளை அந்த அதிகாரி கையாண்டுள்ளார்.

இப்போது, உ.பி. தேர்தலில் அந்த அதிகாரி போட்டியிட்டு எம்எல்ஏ அல்லது எம்.பி.கூட ஆகலாம். அமலாக்கப்பிரிவின் இந்த அரசியல் தொடர்பு எதைக் குறிப்பிடுகிறது. நீதிபதிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் பலர் பாஜகவில் சேர்ந்துள்ளனர். அவர்கள் கடந்த காலங்களில் பாஜகவுக்கு சாதகமாக சிறப்பாகச் செயல்பட்டதற்காக வெகுமதிகளும் தரப்படுகின்றன.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:https://www.hindutamil.in/

Post a Comment

0 Comments