Ticker

6/recent/ticker-posts

Ad Code



எல்லாம் நன்மைக்கே !(கதை சொல்லும் கவிதை.....)


நடக்கின்ற அத்தனையும்
நலவென்று சொல்வதுவே
மந்திரி ஒருவனது
மாறாத வாசகமாம்

மன்னன் ஒருவனுக்கு
மகிழ்ச்சி வன வேட்டை என்றால்
மந்திரியின் உதவியுடன்
மகிழ்ந்திடுவான் வேட்டையாடி

வழமை போல் ஒருசமயம்
வனத்துக்குள் சென்று மன்னன்
வில்லெடுத்து மாட்டுகையில்
விரலில் ஒரு நகம் போச்சு

மன்னன் விரல் வலியால்
மனம் வெதும்பி துடிக்கையிலே
மந்திரியும் வழமை போல்
மன்னா இது நலவுக்கென்றான்

அரசனுக்கு கோபம்
அடக்க முடியவில்லை
மந்திரிக்குத் தண்டனையாய்
மாதம் ஆறு சிறை விதித்தான்

சிறை கிடைத்தும் மந்திரியார்
சிறிது கூடத்  தளரவில்லை
இதுவும் தான் ஒரு நலவு
என்றரசன் முகத்தில் சொன்னான்

மந்திரியின் வார்த்தை கேட்டு
மன்னனுக்கே ஆச்சரியம்
என்னவென்றே புரிந்திடாமல்
ஏகிவிட்டான் இடத்தைவிட்டு

வழக்கம் போல் மன்னவனும்
வனவேட்டை செல்வதற்கு
காவலாளி ஒருத்தனையும்
கையோடு கூட்டிச் சென்றான்

காட்டுக்குள் சென்று மன்னன்
கையில் அம்பை எடுக்கு முன்பே
கூட்டத்தோர் போடுகின்ற
கூச்சலை செவியில் ஏற்றான்

நரபலி உண்ணும் கோஸ்டி
நாயகனின் உணவுக்காக
ஒருபலி எடுப்பதற்கே
உறுமியது அந்தக் கூட்டம்

அரசனைப் பலி எடுக்க
ஆயத்தம் ஆகையிலே
அங்கத்து ஊனமதால்
ஆகாது எனக் கழித்தர்

அரசன் பிழைத்து விட்டான்
அடுத்தவன் கையாள்தான்
கூட்டத்தோர் கையாளை
கூட்டிக்குப் போனார்கள்

தக்க குறை அங்கத்தால்
தப்பித்த மன்னன் அவன்
மந்திரி முன் சொன்னவற்றை
மனதால் அசைபோட்டான்

விரலின் நகமுடைந்து
வேதனையில் துடித்த போது
நல்லதென்றான் மந்திரி - அது
ஞாபகத்தில் ஆடியது

சிறையில் அடை  பட்டபோது
சிரித்துக் கொண்டிருந்தானே
காரணத்தை அவனிடம்போய்
காதுதாழ்த்திக் கேட்டான் மன்னன்

நகமுடைந்து  துடிக்கிறப்போ
நலவென்று சொன்னாய் சரி
ஆறுமாதம் சிறையடைத்தேன்
அதையும்  ஏன் நீ  நலவு என்றாய்

உட்சிறைக்குள் இருந்ததால்தான்
உங்களுடன் வரவில்லை நான்
வந்திருப்பின் என்னைத் தான்
வளைந்திருப்பர் நரபலிக்கு

சிறைக்குள் இருந்ததால் தான்
சிறு சிராய்ப்பும் எனக்கு இல்லை
இதை மனதில் வைத்துத்தான்
எல்லாமே நலவு என்பேன்

மன்னன் உணர்ந்துவிட்டான்
மந்திரியைத் திறந்துவிட்டான்
என்னநிலை ஏற்படினும்
எடுப்பேன்  அதை நலவாய் என்றான்

 

Post a Comment

0 Comments