நலம் தருமே ! வளம் தருமே ! ஆற்றல் தருமே ! வளம் தருமே ! நன்மைகள் எல்லாம் தருமே ! உண்மை இருப்பின் உள்ளொளி மிகுந்து மிளிருமே ! நம் உயிர் பலம் பெருமே !... என்ன ஏகப்பட்ட மே வருகிறதே! என்று பார்க்கின்றீர்களா?
மே மாதத்தின் முதல் நாள் உழைப்பாளர் தினம். உழைப்பை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு நாள். உழைப்பும், உறுதியும், உண்மையும், முயற்சியும், பயிற்சியும் உன்னிடம் இருந்தால்... உலகில் உன்னை வெல்வது கடினம்! என்பது நிஜமாகும்.
மேற்கண்டவை நிஜமாக, எண்ணத்தால் பிறக்கும் சொல் நலமானதாக, உண்மையானதாக, உறுதியானதாக, பயனுள்ளதாக அமைதல் வேண்டும். வாய் இருக்கிறது ! நாக்கு இருக்கின்றது என்பதற்காகக் கண்டதை எல்லாம் பேசி விடக்கூடாது என்னும் கருத்து மிளிரும் குறள்மணி இன்று விரிவடைகிறது.
இதோ அக்குறள் பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனில் மக்கட் பதடி எனல். (குறள் - 196)
இதன் நேரடிப் பொருள் : பயனற்ற பேச்சுக்களைப் பேசித் திரிபவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, “பதர்" என்று கூற வேண்டும். என்பதே சரி! சரி நாம் மனிதர்களா? இல்லை மனிதரில் பிதர்களா? சிந்திக்க வேண்டிய குறள் இது அதாவது
பிறர் மனங்களைக் காயம் செய்பவன் ; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவன். தான் தோன்றித் தனமாகப் பேசுபவன் மனிதனாகவே மதிக்கப்பட மாட்டான். அவனை வள்ளுவப் பெருமகன், அரிசி நீங்கிய நெல்லின் தவிடு கழிவாகப் பதராகப் பார்க்கின்றார். அந்நிலையில் அவன் தரம் தாழ்ந்து உயர்திணையில் இருந்த அஃறிணை நிலைக்குச் சென்று விடுகின்றான். இதைக் கூறும்போது ஒரு கதை நினைவுக்கு வருகின்றது... ஒரு ஊரில் மதிவாணன், வீரய்யன் என்ற இரு நண்பர்கள் இருந்தனர். மதிவாணன். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசிடும் பண்பாளன். பிறர் மதிப்பிற்கும் உரியவன். இது ஏனோ வீரப்பனுக்குப் பிடிக்கவில்லை . பிறர் அவனைப் பாராட்டுவது பிடிக்காமல் பொறாமை கொண்டான். தானும் அவனைப் போல் பேசி, பிறர்மதிப்பைக் கவர எண்ணினான்.
ஒரு சமயம் ஒரு வயதான பெண்மணி இறந்துவிடுகிறாள். துக்கம் விசாரிக்கச் சென்ற மதிவாணன் இறந்த பெண்மணியின் மகனிடம், வருந்தாதீர்கள் | மரணம் என்பது இயற்கையானதே | எல்லோருக்கும் சம்பவிக்கும்... ஆனாலும், இச்செய்தி வருத்தமாகத்தான் உள்ளது. உங்கள் தாய் உங்களுக்கு மட்டுமா தாயாக இருந்தார் ? இந்த ஊருக்கே தாயாக இருந்தவர் அல்லவா? என்றெல்லாம் பேசி ஆறுதல் மொழி கூறினான்.
அங்கு இருந்து இதைக்கேட்ட வீரய்யன் இங்கும் இவனே பேசி மதிப்பைப் பெற்றதைக் கண்டு புளுங்கினான். சில நாள்களில் அதே ஊரில் மீண்டும் ஒரு இளவயது பெண்மணி இறக்கின்றாள்.
இந்தமுறை இச்செய்தியைக் கேள்விப்பட்ட வீரய்யன் மதிவாணன் வருவதற்கு முன் அவ்வீட்டிற்கு விரைந்து சென்றான். அங்கு கூட்டமாகப் பலரும் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அதில் முண்டியடித்து
உள்ளே சென்ற வீரப்பன். இறந்தவளின் கணவரிடம், கலங்காதே நண்பனே ! என்ன செய்வது ? மரணம் இயற்கையானது தான்... உன் மனைவி உனக்கு மட்டுமா மனைவியாக இருந்தாள்! இந்த ஊருக்கே மனைவியாக இருந்தவர் அல்லவா? என்று பேசத் தொடங்கினான்.
அவ்வளவு தான், இறந்தவள் கணவர் மட்டுமல்ல, ஊராரும் சேர்ந்த அவனை நையப்புடைத்து எடுத்துவிட்டார்கள். இது கதை....
பார்த்தீர்களா? நண்பர்களே ! பேசுவது ஒரு கலை ! இதை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையே நமக்குத் துன்பம் தான் சரி! எப்படிப் பேச வேண்டும் என்று கேட்கிறீர்களா? இதோ!அன்புடன் பேச வேண்டியது -தாயிடம் பண்புடன் பேச வேண்டியது-ஆசிரியரிடம் அடக்கத்துடன் பேசவேண்டியது- சகோதரியிடம் உண்மையாகப் பேச வேண்டியது - மனைவியிடம் ஆர்வமுடன் பேச வேண்டியது - குழந்தையிடம் பரிவோடு பேச வேண்டியது - உறவினர்களிடம் பணிவாகப் பேச வேண்யடிது- அதிகாரிகளிடம் நேர்மையாகப் பேசவேண்டியது- வாடிக்கையாளரிடம் மனிதநேயத்துடன் பேச வேண்டியது - தொழிலாளர்களிடம் ஜாக்கிரதையாகப் பேச வேண்டியது - அரசியல்வாதிகளிடம்
இடம் பொருள் ஏவலறிந்து பேச வேண்டியது - எல்லோரிடம் இதை உணர்ந்து இடமறிந்து, காலமறிந்து நல்லன சொல்லி, அல்லன தவிர்த்து பிறர்மகிழ இன்சொல் பேசி வாழ்வில் சிறந்து நலமுடன் வாழ்வோம்.(தொடரும்)
0 Comments