அத்தியாயம் -5
நபி நூஹ் (அலை) அவர்கள் தமது பிரதிநிதியாக ஷாமை நியமித்தார். ஷாமுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் அர்பக்ஷாஸ், மற்றவர் இராம். அர்பக்ஷாஸின் மகன் சியாலிக். சியாலிக்கிற்கு இரண்டு பிள்ளைகள். நூஹ் (அலை) அவர்களது மகனான ஷாமின் சந்ததியில் வந்தவர் நபி ஹூத் (அலை) அவர்கள் என்று கூறப்படுகின்றது.
யெமன் நாட்டில் மக்களை நேர்வழிப்படுத்துவதில் நபி ஹூத் (அலை) அவர்கள் ஈடுபட்டார்கள். ஹூத் (அலை) அறபு மொழியையே பேசினார்கள்.
“ஆத்“ சமூகத்தினர் ஓமானுக்கும் யெமனுக்கும் இடைப்பட்ட “உபார் அல்-அஹ்காப்” என்ற பிரதேசத்தில், பதின்மூன்று கோத்திரங்களாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களை நேர்வழிப்படுத்துவதிலேயே நபி ஹுத் (அலை) அவர்கள் அதிக கரிசனை கொண்டார்கள்.
“ஆத்“ சமூகத்தினர் விரிந்த மார்பும் உயர்ந்த தோற்றமும் கொண்டவர்கள். அதிக பலம் வாய்ந்தவர்களாகவும், விரைவில் கோபம் கொள்பவர்களாகவும் காணப்பட்டார்கள்.
உலகத்தின் உன்னத மனிதர்கள் தாமே என அவர்கள் இறுமாப்புக் கொண்டிருந்தனர். வெற்று நிலம் அல்லது உயர்ந்த நிலப்பரப்பைக் கண்டால் அதில் மாடமாளிகைகளையும், கோடகோபுரங்களையும் அமைத்துக் கொள்வதன் மூலம் அவர்கள் பெருமைப்பட்டார்கள்.
அவர்களுக்குக் கோபம் ஏற்பட்டால் மதம் பிடித்த யானைகள் போலாகி விடுவார்கள்.
எதிர்ப்பட்டதை அடித்து நொறுக்குவார்கள். மிருகங்களைக் கொல்வார்கள். இதனால் அங்கு வாழ்ந்த சாதாரண மக்கள் இவர்களைக் கண்டால் வெருண்டோடி விடுவதுண்டு! இப்படிப் பட்டவர்களை நல்வழிப்படுத்தவே ஹூத் (அலை) அவர்களை அல்லாஹ், நபியாகத் தேர்ந்தெடுத்தான்! அவரும் தன்னாலானவரை அச்சமூகத்தினரை நல்வழிப்படுத்த முயன்றார்.
ஆனால் ஹூத் (அலை) அவர்களை “ஆத்” சமூகத்தினர் நிராகரித்தனர். அதனால் அல்லாஹ்வின் சோதனை அவர்களை வந்தடைந்தது! நாட்டில் கடும் வரட்சி ஏற்படத் தொடங்கியது! நீரின்றி நிலங்கள் காய்ந்தன. பயிர்கள் செத்து மடிந்தன. மிருகங்களும் மனிதர்களும் நீர் தேடியலைந்தனர்!
நீண்ட நாட்களின் பின்னர் வானத்தில் ஒரு மேகம் தோன்றிற்று. அச்சமூகத்தினர் அதைக்கண்டு ஆரவாரம் செய்தனர். மகிழ்ச்சியில் அங்குமிங்கும் ஓடிய வண்ணம் மழையை எதிர்கொண்டு காத்து நின்ற மக்களிடம் - “அது மழை மேகமல்ல, பயங்கரப் புழுதிக்காற்றுடனான புயல்” என்றார்கள் ஹூத் (அலை) அவர்கள்.
எட்டுப் பகல்களும் ஏழு இரவுகளும் ஒருவரையொருவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக புழுதிப்புயல் வீசிற்று! எட்டாம் நாள் விடிந்தபோது “ஆத்” சமூகத்தினர் அழிந்து அலங்கோலமாய்க் கிடந்தார்கள்! பிணங்களைப் பறவைகள் கொத்தி உண்டன. அவர்களது மாடமாளிகைகளுக்குள் ஆந்தைகளும், வௌவால்களும் குடிகொள்ளத்தொடங்கின. இன்றும் கூட “உபார் அல்-அஹ்காப்” பிரதேசம் வெறும் பாலைவனமாகக் காட்சியளிக்கின்றது! (திருக்குர்ஆன் - 11:61-67, 89:9)
யெமன் நாட்டில் உள்ள ஒரு கோட்டையிலிருந்து "வெல்ஸஸ்டட் ஜேம்ஸ்" என்ற ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில், இச்சமூகம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, ஹூத் (அலை) அவர்களைப் பின்பற்றியவர்கள் நபிமார்களின் அற்புதங்களையும், மறுமையையும் நம்பி, நல்லபடி வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது!
(தொடரும்)
0 Comments