Ticker

6/recent/ticker-posts

நேர்வழி நோக்கிய வரலாற்றுப் பாதை! -6


அத்தியாயம் -6
நபி ஸாலிஹ் (அலை) அவர்களும் “ஸமூத்” கூட்டத்தினரும்
நபி நூஹ் (அலை) அவர்களின் அடுத்த மகன் இராமுக்கு ஒரே மகன் அத்ஸிம். அத்ஸிமுக்கு ஜுபைர், தமூத் என்ற இரு பிள்ளைகள். தமூத்தின் ஐந்தாவது வழித்தோன்றலில் பிறந்த நபி ஸாலிஹ் (அலை) அவர்கள், நபி நூஹ் (அலை), நபி ஹூத் (அலை)  ஆகியோர்களது பரம்பரையில் வந்தவர்கள்.

ஸாலிஹ் (அலை) அவர்களின் தந்தை  பெயர் காபூக் பின் உபைத், தாயார் ஜகூமு என்பதாகும். அழகே உருவான ஸாலிஹ் நபி அவர்களது தலைமயிர் பொன்னிறமானதாகும். ஸாலிஹ் (அலை) அவர்கள் விரிந்த மார்பும் உயர்ந்த தோற்றமும் கொண்டவர்கள். வாணிபம் செய்து வளமாக வாழ்ந்துவந்த அவர்கள், எப்போதும் வெறும் காலுடனேயே நடப்பார்களாம். அவர்களது நாற்பதாவது வயதில் ஸமூத் கூட்டத்தினரை  நல்வழிப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்

ஸமூத் கூட்டத்தினர் என்போர், நூஹ் நபியவர்களின் பரம்பரையில் வந்த ஸமூத் என்பவரின் வழித்தோன்றல்களே. இவர்கள் அரபு நாட்டின் வட மேற்குப் பகுதியில் “அல்ஹிஜ்ர்” என்ற மலைப் பகுதியில் மலைகளைக் குடைந்து வீடு கட்டி வாழ்ந்து வந்தனர்.

மதீனாவிற்கும் தபூக்கிற்கும் இடையில் “அல்ஹிஜ்ர்” என்ற ஊரில் 'மதாயின் ஸாலிஹ்' என்ற இடம் மிக அழகான வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்களையும் மலைகளைக் குடைந்து நிர்மாணிக்கப்பட்ட  வீடுகளையும், சிற்பக்கலைகள் நிறைந்த அமைப்புக்களையும் காண முடிந்தாலும், அது ‘இறைவனின் வேதனை இறங்கிய இடம்’ என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதால், சுற்றுலாத்தளம்போல் அதனைப் பார்க்க எவரும்  செல்வதில்லை.

'மதாயின் ஸாலிஹ்' என்றால் “நபி ஸாலிஹ் வசித்த ஊர்” என்பது  பொருள்.  மதீனாவிலிருந்து 405 கிலோமீட்டர் தொலைவிலும் மக்காவிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவிலும் இது அமைந்துள்ளது. இங்குள்ள “ஹிஜ்ர்” பள்ளத்தாக்குகளில் ஸமூத் கூட்டத்தினர் “ஆத் ” சமூகத்தைப் போன்று  மலைகளைக்  குடைந்து மாளிகைகள் அமைத்து, ஆடம்பர வாழ்க்கையில் ஆணவத்துடன் பெருமைகளைப் பறைச்சாற்றும் விதமாக  வாழ்ந்து வந்தார்கள்! அவர்களை நேர்வழிப்படுத்த அவர்களால் மிகவும் மதிக்கப்பட்ட அவர்களில் ஒருவரான  ஸாலிஹ் (அலை) அவர்களை, ஓரிறைக்கொள்கையை எத்திவைப்பதற்காக  இறைவன் தனது தூதராக்கினான்.

நபி ஸாலிஹ் (அலை) அவர்கள் ஸமூத் கூட்டத்தினரிடம், அல்லாஹ்வை மட்டும் வணங்குமாறும், அவனைத் தவிர வழிபாட்டுக்குரியவன் எவருமில்லை என்றும், அவன்தான் வானத்தையும், பூமியையும் விசாலமாக்கி அதில் நம்மையும் படைத்து இந்தத் தற்காலிக இடத்தில் வசதியாகத் வாழ வைத்திருக்கிறான். அவனிடம்  பாவ மன்னிப்புத் தேடுமாறும்  தமது பிரசாரத்தை ஆரம்பித்தார்கள்.

அதுவரை நபி ஸாலிஹ் அவர்களை  மதித்து வந்த கூட்டம் ஓரிறைக் கொள்கை பற்றி பேசத் தொடங்கியதும் அவரை விட்டும் விலகிச் செல்ல ஆரம்பித்தது!
ஸாலிஹ் தமது முன்னோர்கள் வணங்கி வந்ததை  வணங்கவிடாமல் தடுக்கிறார் என்று அவர்கள் நினைத்தார்களே தவிர, முன்னோர்கள் செய்துவந்த காரியம் சரியானதுதானா என்று அவர்கள் ஒருபோதும் யோசிக்கவில்லை.

நபி ஸாலிஹ் உண்மையான இறைத்தூதரென்றால் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவரக் கோரினார்கள். அவர்கள் அத்தாட்சியாகக் கேட்டது ஓர் கர்ப்பமான பெண் ஒட்டகத்தை! ஏனென்றால் அந்தப் பகுதியில் அப்படியான ஒட்டகத்தை அவர்கள் கண்டதில்லை. அதனை  ஸாலிஹ் நபியால் கொண்டுவர முடியாது என்று எண்ணி அதைக் கொண்டுவர  வேண்டினார்கள்.

இறைவனும் அவர்களை நேர்வழிப்படுத்த ஒரு வாய்ப்பினை வழங்கி, அவர்கள் கேட்டதற்கிணங்க எல்லா மக்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு பாறையைப்  பிளந்து கொண்டு சினையுற்ற வெள்ளை ஒட்டகம் ஒன்றை வெளியே வரச் செய்தான். அது வெளியே வந்ததும்  குட்டி போட்டது! அவ்வொட்டகத்திற்கு எந்தத் தீங்கும் செய்யாமலிருக்க இறைவனிடமிருந்து  கட்டளை ஒன்றும் வந்தது.

அங்குள்ள நீர்நிலைகளில் ஒருநாள் அந்த ஒட்டகம் தண்ணீர் அருந்தினால், மறுநாள்தான் அதில் மக்கள் தண்ணீர் அருந்த வேண்டும். ஒட்டகம் தண்ணீர் குடிக்கும் அதே நாள் மக்கள் அதில் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது கட்டளை!  நிறைய மக்கள் மனம் திருந்தி அத்தாட்சிக்கு மதிப்பளித்து வந்தார்கள். அந்த ஒட்டகம் ஊரில் உள்ள எல்லா மக்களுக்கும் பாலைத் தாராளமாக வழங்கியது.

ஸமூத் சமூகத்தில் இருந்த சில  கூட்டத்தினர் இதைக் கண்டு அதிருப்தி அடைந்தார்கள். அவர்கள் பல கடவுள் கொள்கையைக் கைவிட விரும்பவில்லை; கொள்ளை அடித்தல், அக்கிரமம் புரிதலில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தார்கள்.

அவர்கள் அந்த அதிசய ஒட்டகத்தை அழிக்க வேண்டுமென்று திட்டம் தீட்டி,  அவர்களுள் பலசாலியான ஒருவனை அனுப்பி அந்த ஒட்டகத்தின் கால் நரம்பை அறுத்து அதனைக் கொலை செய்ய வைத்தார்கள்!  இதை அறிந்த நபியவர்கள் இறை கட்டளைப்படி, "உங்களுடைய வீடுகளில் மூன்று நாட்கள் சுகமாக இருங்கள். அதன் பின்னர் உங்களுக்கு அழிவுதான்” என மொழிந்தார்கள்.

இதைக் கேட்ட ஸமூத் கூட்டத்தினர் சிரித்தார்கள்! அந்த மூன்று நாட்கெடுவிலும்  கூட ஸமூத் கூட்டத்தினர்  பாவமன்னிப்பு கேட்டு இறைவனிடம் திரும்பாமல், அகந்தையுடனிருந்தார்கள்.

மூன்றாவது நாள் பேரிடி முழங்கியது! அவர்கள் நிலைகுலைந்து போனார்கள்! பேரிடியால் அவர்கள் தம் வீடுகளுக்குள்ளேயே அழிந்து போனார்கள்! அந்தப் பிரதேசம் மனிதர்கள் வழ்ந்த அடையாளமே தெரியாதவாறு  சூனியமாயிற்று! ஸாலிஹ் நபியும் அவரோடு இருந்த நம்பிக்கையாளர்களும் இறைவனின் அருளால் நடக்கவிருந்த அழிவிலிருந்தும் காப்பாற்றப்பட்டார்கள்.
(திருக்குர்ஆன்: 11:50-60,100  15:80-84   26:124-140  46:21-26   69:6-8   89:6-8)
(தொடரும்) 

Post a Comment

0 Comments