Ticker

6/recent/ticker-posts

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-27 (வரலாறு-பாகம்-2)

பன்வில  27
தும்பறைப் பள்ளத்ததாக்கில் அமைந்துள்ள மலைத்தொடர்கள் நிறைந்த பிரதேசங்களுள் ஒன்றாக பன்வில பிரதேச செயலகப் பிரிவு அமைந்திருக்கின்றது. வத்தேகம, கபரகல பாதையோடு அமைந்திருக்கும  பன்விலைப் பட்டினம் வத்தேகமையைப் போன்று  பெருந்தோட்டத்துறை சார்ந்த ஓர் சந்தைக் குடியிருப்பு என்பது குறிப்பிடத்தக்கது. பாத்ததும்பறைத் தேர்தல் தொகுதியில் 37.7 சதுர கிலோ மீற்றர் பரப்பில் அமைந்துள்ள பன்விலை செயலகப்பிரிவில் 2009ம் ஆண்டைய சனத்தொகை மதிப்பீட்டின்போது 29,968 பேர் வாழ்ந்ததாக அரச ஆவணங்கள் உறுதி செய்கின்றன.
தமிழர்: 17478
சிங்களவர்: 11211
முஸ்லிம்கள்: 1237
வேறும்:  42

தமிழ்க் குடியாளர்களுள் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் கணிசமான தொகையினராவர். மூவினத்தவர்களும் செறிவாக வாழும் பன்விலைப் பட்டினம் 1850களைத் தொடர்ந்து ஒரு சந்தைப் பட்டினமாக உருவாகியிருக்கின்றது. ஆரம்பத்தில் நகரில் தென்னிந்திய தமிழ், முஸ்லிம் வியாபாரிகள் பெரும் செல்வாக்குடன் விளங்கியிருக்கின்றனர். பட்டினத்தைச் சூழ ராக்சாவ, ஹாதல, கல்பீலி, பிட்டகந்த எனப் பல பெருந்தோட்டங்கள் காணப்படுகின்றன.  அப்பெருந்தோட்டங்களுடாக  ஊற்றெடுத்துப் பாயும் நீரோடை,  இறுதியில் "குகுல் ஓயா"வுடன் சங்கமமாகின்றது.  

பட்டினத்தில் செல்வாக்குடன் விளங்கிய பல முஸ்லிம் வார்த்தகச் செல்வர்களுள் செ.மூ.க. முதலாளி குறிப்பிடத்தக்கவர்.  தற்போது அதிகமாக உள்ளுர்க்குடிகள் வாழும் பன்விலையில் சுமார் நூற்றுக்கும் அதிகமான  முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருவதோடு, நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக எட்டுக் கடைகள் காணப்படுகின்றன.

மஸ்ஜித்

பன்விலை நகர மஸ்ஜிதின் வரலாறு  1900களைத் தொடர்ந்துள்ள ஆரம்பத் தசாப்தங்களிலிருந்து பேசப்படுவதுண்டு.  முன்னாள் விவாகப் பதிவாளர் அப்துல் ரஹ்மான் லெப்பை அபுல் ஹஸன் (வயது 80) அவர்கள் வழங்கிய தகவல்களிலிருந்து அவரது தகப்பனார்  கதீப் அப்துர் ரஹ்மான் லெப்பையும் மஸ்ஜிதில் நீண்ட காலமாக கதீபாகப் பணிபுரிந்துள்ளார் என அறியமுடிந்தது.  அன்னார் மாவில்மடையைச் சேர்ந்த புகழ்வாய்ந்த மார்க்க மேதை ஹபீப் முஹம்மத் ஆலிம் ஸாஹிப்  அவர்களது ஒன்றுவிட்ட சகோதரராவார்.  கதீப் அப்துல் ரஹ்மான் லெப்பை நகரின்  வர்த்தகச் செல்வர் செ.மூ. கா முதலாளியின் புதல்வியைத் திருமணம் செய்திருந்தார். இத்தகவலின் மூலம் கதீப் அப்துர்ரஹ்மான் லெப்பை அவர்கள் 1910 - 1920 காலப் பகுதியில் கடமை புரிந்திருக்க  இடமுண்டு எனக்கருத முடிகின்றது.  அவர்களது இரு புதல்வர்களான முஹம்மது ஹனீபா லெப்பை, அபுல் ஹஸன் விவாகப் பதிவாளர் இருவரும் நீண்ட காலமாக  நகரில் சன்மார்க்க சேவை  புரிந்துவந்ததாகக் கூறப்படுகின்றது.

தற்போது நகரின் மத்தியில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பன்விலை மஸ்ஜிதின் தலைவராக முஹம்மது ரமீஸ் (அலி) பணிபுரிந்து வருகின்றார். குடியிருப்பைச் சேர்ந்த கனவான் சாஹுல் ஹமீத் என்பார் கிராமசபை அங்கத்தவராகவும் பணிபுரிந்துள்ளார். இஸ்லாமிய கலாசாரத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் பிரதி வருடமும் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரண்டாம் நாள் மௌலித் வைபவத்தை ராக்சாவ தோட்டத்தைச் சேர்ந்த ரஹ்னித்துரை என்னும் மலே சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் கனவான் நிறைவேற்றி வந்ததாகவும், மஜ்லிஸை அலங்காpப்பதற்காக  மேல்கட்டி அமைத்து அதனைத்  திராட்சைப் பழக்குலைகளைக்  கொண்டு அலங்கரித்ததாகவும் மக்கள் இன்றும் நினைவு கூர்கின்றனர்.(தொடரும்)

Post a Comment

0 Comments