Ticker

6/recent/ticker-posts

நீரிழிவு நிவாரணி...

(உலக நீரிழிவு தினத்தையொட்டி எழுதப்பட்டது )


மனிதா
நீரிழிவை 
நீ இழிவென்று நினைக்கிறாயா
நோயென்று எண்ணி
நொந்து கொண்டிருக்கிறாயா

நீரிழிவு என்பது
நிச்சயமாய் நோயல்ல
சர்க்கரை நிறைந்த
சகல உணவோடும்
அக்கரையைக் குறைத்தால் போதும்
ஆயுள் உனக்கு கெட்டிதான்
நோய் உன்னை
பார்க்கவும் மாட்டாது எட்டித்தான்

குளிசை மருந்தென்று
கொள்ளை கொட்டத் தேவையில்லை
வழிகள் பல உண்டு
வாழ்வில் எடுத்துப்பார்

பசித்தால் உண்
பட்டினி கிடக்காதே
பசியாமல் உண்டு
பாதகத்தைத் தேடாதே

பறவைகளைப் பார்த்தாயா
ஒரு நாளின் உணவுதனை
ஒரேயடியாய் உண்கிறதா
சிறுகச் சிறுக உண்டுதானே
ஜீரணிக்கச் செய்கின்றன
ஆம்
ஜீரணத் தொகுதியின்
சீர் பேணப்படுவதால்தான்
சீனி வியாதிக்குள்
சிக்குவதே இல்லை அவை

சதையச் சுரப்பி என்ன
சிதையாத  இரும்புத் துண்டா
இயலளவை மீறி
இயங்கிக் கொண்டிருப்பதற்கு

உன் கால் கைக்கு மட்டும்
ஓய்வு கொடுத்தால் போதாது
ஊண் கால்வாய்களும்
ஓய்வெடுக்க வேண்டும் தானே

இன்னும் நீ
இனிப்போடிருக்கும்
பிடிப்பைக் குறைத்துக் கொள்
இரவுச் சாப்பாட்டை
எளிமையாய் அமைத்துக் கொள்
அரிசிச் சோற்றை
அளவோடு எடுத்துக் கொள்
கிழங்கைக் குறைத்து
கீரைகளைக் கூட்டிக் கொள்

இன்னும்
ஓடு நட
உடல் வியர்க்க வேலை செய்

உணவில் ஒவ்வாமையா
உடனடியாய் மாற்று
இரைப்பையையும் சதையத்தையும்
இடையிடையே இளைப்பாற்று

இன்னும் நீ
கஞ்சத்தனத்தை
காசில் காட்டினாலும்
சீனியில் காட்டி
சேமிக்க நினைத்திடாதே
சிறுநீரகத்தை இழந்திடாதே
ஆம்
சில்லறையைச் சேமித்தால்
சிக்கனப் பேராளி
சீனியைச் சேமித்தால்
சீக்கிரமாய் நோயாளி

நீரிழிவு என்பதெல்லாம்
ஓர் இழிவு நோயல்ல
ஆக
உணவை அளவொன்றியும்
உடற்பயிற்சியைக் களவின்றியும்
நிரையாய் முறைப்படுத்து
நீரிழிவு என்ன
ஓரழிவு நோயும்
உன்னை அணுகாது.


Post a Comment

0 Comments