Ticker

6/recent/ticker-posts

" மிடறு ".


நீரால் மறைக்க முயன்றார்கள்
முடியவில்லை
புதிய வேட்டி சட்டைக்குள் நுழைத்து
கோடித்துணியான
வெண்ணிறப் போர்வையால்
நீளமாக பொட்டலம் கட்டி
அளவெடுத்து செய்த
மரப்பெட்டிக்குள் அடைத்து
ஆறடி ஆழமான குழிக்குள்
கயிறுகள் கட்டி இறக்கி
மண்ணுக்குள் ஒளித்து வைத்தார்கள்
ஆனாலும் மறையாமல்
கண்முன்னே நின்று 
கலங்க வைக்கிறது
உயிர் நண்பனின் கடைசி நிர்வாணம்
கூடவே ஒன்றன்பின் ஒன்றாக
நினைவுக்கு வந்து காயப்படுத்துகிறது
அப்பா போகும் இடம் புரியாத
ஒரே பிஞ்சு மகளின் 
ஆழ்ந்த மௌனமும்
" என் மலை சரிஞ்சுப்போச்சே" 
என்று நிர்க்கதியாக நின்று 
கதறிய மனைவியின் 
கண்ணீர்த்துளிகளும்
நண்பனை மிடறுமிடறாகக் 
குடித்துவிட்டு வீட்டின் 
கொல்லைப் புறத்தில்
இருளில் பதுங்கி இருந்த 
அந்த மதுக்கிண்ணமும்...

Post a Comment

0 Comments