Ticker

6/recent/ticker-posts

இது விமர்சனமல்ல....!

என்னை ஈர்த்த கவிதைகள்....
நான் விரும்பி வியந்து படித்த கவிதைகளால் கவரப் பட்டு எனக்குள் எழுந்த எண்ணத் துளிகள்.

அது,
சென்ற வாரம் எனக்குக் கிடைக்கப் பெற்ற என் அன்புக்குரிய நண்பர் அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ் அவர்களது கவிதை நூல்கள் பற்றிய சில வரிகள்.

முதலில்....

நான் பெற்ற நான்கு நூல்களையும் நுனிப்புல் மேய்ந்தேன்.
பசியால் தவிக்கும் ஒருவனுக்கு ருசியான தீனி கிடைத்தால்,
எதை முதலில் ருசிப்பதென தெரிவதில்லை. இருப்பினும், 
எதையாவது ருசித்துத் தானாக வேண்டும் . 
எதை முந்திப் படிப்பதென்று சிந்திக்குமளவு  எனக்குள் இருந்த இலக்கிய வேட்கை எனக்கு இடம் தரவில்லை.

சிறகு முளைத்த சிந்துகளை என் கண்கள் முதலில்  கௌவிக் கொண்டன.
சிந்துகளில் பிடித்த ஒன்றையோ, சிலதையோ குறிப்பிட்டு விமர்சிக்க என் மனசாட்சி மறுத்தது. 

நல்ல கவிதைகளையும் நல்ல ஆக்கங்களையும்
இரசிப்பதுடன் நின்று விடாமல் எவர்  எழுதியிருந்தாலும் அதைப் பாராட்டாமல் என்னால் நகர முடிவதில்லை.


பிறரைப் பாராட்டும் நற்பண்பையும்
பொறாமையற்ற நற்குணத்தையும் தந்த அருளாளனுக்கே எல்லாப் புகழும்.

நான் ஒரு கவிஞன்.  கஞ்சனல்ல.
அதைவிட நான் ஒரு நல்ல ரசிகன்.

அருட்கவியின் ஒவ்வொரு கவிதைகளும் என்னை ஈர்த்தன. 
அவரது அழகான மொழிநடை,
பயன்படுத்தி இருக்கும் இலகுவான வார்த்தைகளும் வரிகளும் 
என் உணர்வுகளைத் தொட்டுச் சென்றன.

மற்றுமோர் மாபியாவையும் வரிவரியாக இரசித்தேன். 
அதில், "பாவிக்கக் கூடாத மை"
எனக்குள் எழுந்த எண்ணத்தை அப்படியே வடித்திருந்தது. 
எல்லாக் கவிதைகளும் பிரமாதம்.
வெற்றுக்கண், எதுவாயிருப்பினும்.
இவ்விரு நூல்களையும் முழுதாக இன்னும் படிக்கவில்லை.
இருந்தாலும் அவ்வப்போது
நொறுக்குத்தீனி போல் கொறித்துக் கொள்கிறேன்.

நான் இரசித்த கவிதைகளில் 
ஒன்றை மட்டும் குறித்துச் சொன்னால் மற்றவை...?

ஒன்றை விட ஒன்று சிறப்பு என்பதைவிட 
அத்தனை கவிதைகளும் அழகு. 
அத்தனை கவிதைகளும் தரமானவை.
இவற்றுள் என்னை ஈர்க்கவில்லை என்று சொல்லவோ,
சுமாரானது என்று சொல்லவோ ஒன்று கூட இல்லை. 
அத்தனையும் ஒரு சிற்பி செதுக்கிய சிறபங்கள் போல அழகாக செதுக்கப் பட்டிருக்கின்றன.
எல்லாக் கவிதைகளிலும் அருட்கவியின் முத்திரை பதிந்திருக்கிறது.

கொட்டும் தேனருவியில் தேவையில்லாத
தேன் சொட்டுக்கள் என்று ஏதும் உண்டா...?
தேனை விட எனக்கு சுவையூட்டியது அருட்கவியின் அருவியில் கொட்டிய தேன் வரிகள்.

அருட்கவியே...!

நீங்கள் ஆரோக்கியமாக வாழவேண்டும் .
உங்கள் கவிதைகளை என் வாழ்நாள் முழுதும் படித்து ரசிக்க வேண்டும் .
இது எனக்குள் இருக்கும் இலக்கியப் பசியின் சுயநல வார்த்தைகள் .
நான் வாழும் போதே நீங்களும் எனக்கு நெருங்கிய ஒரு நட்புறவாக, 
நான் மிகவும் நேசிக்கும் ஒரு கவிஞராக வாழ்ந்து கொண்டிருப்பதே நான் பெற்ற பெரும் தவம்.

உங்கள் சகவாசம் என் நட்புக்குக் கிடைத்த பெரு வரம்.
எழுதிக் கொண்டே இருங்கள். 
உங்கள் வரிகளை இரசிக்க இலக்கியப் பசியுடன் காத்திருக்கிறோம்.

Post a Comment

0 Comments