பலன் தரும் முயற்சியும் பயிற்சியும்
உழைப்பு உயர்வு தரும்! உழைப்பே உலகை உருவாக்கும்; உழைப்பும், முயற்சியும், உண்மையும், நேர்மையும் ஒருங்கிணைந்தால் விரும்பியதை விரும்பியபடி அடையலாம். இதுவே உலக நியதி... இதனை நம் குறள் பேராசான் கூற்றால் காண்போம்.
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் (குறள் 540) என்பதன்மூலம்
தான் விரும்பியதை நாளும் தொடர்ந்து முயற்சி செய்தால் நினைத்ததை நினைத்தப்படி எளிதாக அடையலாம் என்று கூறினார்.
இதனைக் கூறும் போது ஒரு கதை நினைவிற்கு வருகிறது... ஜப்பான் நாட்டில் ஓர் இளைஞன், ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவன் கனவு. ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது.
கையும், காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜுடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்? பல
பயிற்சியாளர்களிடம், மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு மட்டும் அவனுக்கு ஜூடோ கற்றுத்தர ஒப்புக் கொண்டார். பயிற்சி ஆரம்பானது. குருவானவர் அவனுக்கு ஒரு பயிற்சியை மட்டும் ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுத் தந்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுத் தருவதாகத் தெரியவில்லை . பையன் சோர்ந்து போனான்.
அவன் குருவிடம் “குருவே, ஜூடோசாம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்தால் போதாதே? வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?" என்றான். “இந்த ஒரே ஒரு தாக்குதலில் மட்டும் நீ வல்லவன் ஆனால் போதும்" என்றார் குரு. குருவின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டியும் ஆரம்பானது.
முதல் போட்டி, சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பானாது. எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் பையன் வெற்றி பெற்றான். இரண்டாவது போட்டியிலும் வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப்போட்டி வரை வந்து. மிகுந்த பிரயத்தனத்துடன் போராடிஅதிலும்வெற்றி பெற்றான்.
இப்போது இறுதிப்போட்டி எதிரே இருப்பவன் பலமுறை சாம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்குக் கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும், அலட்சியமும் கொண்டான். இளைஞனோ சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானதும் முதல் சுற்றில் இளைஞனை அடித்து வீழ்த்தினான் எதிராளி.
இவனது நிலை கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா? என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள் - வேண்டாம் பையன் சண்டையிடட்டும். போட்டி நடக்கட்டும்” என்கிறார் குரு. பதட்டமான சூழ்நிலை. இவனோடு போரிட இனிமேல் பாதுகாப்பு கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய்க் களமிறங்கினான்.
இளைஞனோ தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலைப் பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். இளைஞன் சாம்பியனானான். அனைவருக்கும் அதிர்ச்சி ! ஆச்சரியம் ! யாராலும் நம்ப முடியவில்லை .
அந்த இளைஞனாலேயே தன்வெற்றியை நம்பமுடியவில்லை.மாலையில் குருவிடம் ஆசி பெற்ற அவன், “குருவே நான் எப்படி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றேன்? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றுவிட்டேனே? என்றான். அதற்குச் சிரித்தப்படியே குரு, உன் வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஜூடோவிலுள்ள மிகக்கடுமையாக ஒரு தாக்குதலைக் கற்று நீ தேர்ந்துள்ளாய். இரண்டாவது, இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே வழிதான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கையை கிடையாதே! உனது பலவீனம் தான் உனக்குப் பலமாகி உன்னைச் சாம்பியன்ஆக மாற்றியது என்றார்.
நம் மனம் திறமைகளின் கடல் ஆகும். அதில் முத்தெடுப்பதும், நத்தை எடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. நம் திறமை அறிந்து உழைப்பால் முயற்சிசெய்து வாகை சூடுவோம். நலமுடன்நீடுவாழ்வோம்!
(தொடரும்)


0 Comments