Ticker

6/recent/ticker-posts

அப்துல் றகுமானுக்கு இன்று அகவை எண்பத்தி ரெண்டு !


கிரீடம் ஒன்று
கீழே விழுந்தது
கவி உலகிலிருந்து அது
கை தவறிப் போய் விட்டது
இருந்திருந்தால் இன்றதற்கு
எண்பத்திரண்டு

காலன் இடையில் வந்து
காலை வாருவான் என்று
கலை உலகம்  எண்ணியதா

புதுக்கவிதையின் பூட்டனே,
காலன் வந்துவிட்டான்
உனை
கையோடு கூட்டிச்செல்ல
தடுத்து நிறுத்தத்தான்
தகுதி எமக்கில்லை

கவிக்கோர் கவிக் கோவே - நீ
காலமான சேதி கேட்டு
தவிக்காத இதயமில்லை
இது
புவிக்கே பொறுக்காத சேதிதான்
எம்
செவிக்கே ஜீரணிக்கா பேதிதான்

ஆலாபனை கவிதையில்
நீ
அழகென்று மரணத்தை சொன்னாலும்
தமிழ்
உலகுந்தன் மரணத்தை 
மனம் கொள்ள மறுக்கிறது

கவிதைகளை விதைத்து விட்டு
காலமாகிப் போனவனே
பூவின் மரணத்தை விதை என்றாய்
கோ உன் மரணத்தை
எது என்பாய்

வாஞ்சைமிகு றமழான் உன்னை
வழியனுப்பி வைத்தது
புண்ணியவான்களோடு
போய் நீயும் சேர்ந்து கொள்ளு

கோவே
உனை எழுதிவைக்க
கோவைகள் போதாதே

நீயே ஒரு வரலாறு
உனக்கெழுதத் தேவையில்லை
வரலாறு

தலைவா நீ
தமிழ்கவிதை காட்டாறு
தமிழையும் உனையும் பிரித்து
போடவே முடியாது கூறு

உருதுவையும் மொழி பெயர்த்த
கிருதிகளும் உனக்குண்டு

கன்னித் தமிழை
கலையாத கலையாய்
காய்ச்சிப் பகிர்ந்தவனே
கவிதைக்கு புது ரெத்தம்
பாய்ச்சி வளர்த்தவனே
நீ
தமிழோடு உறவாடி
தரித்த கவிச் சிசுக்கள் எத்தனை
உன்னோடு தமிழ்  விளையாட
உதித்த காவியங்கள் எத்தனை

நீ
தமிழுக்கு செய்த தொண்டு
எண்ணிலடங்காதது
தமிழுக்கும் கூட அவை
சொல்லி விளங்காதது

வரிகளால்
முகவரி வரைந்தவனே
நீ மறைந்தாலும்
உன் வரிகள் மறையாது
ஆம்
அவை வரிகள் மட்டுமல்ல
உன் வாரிசுகளும்தான்

உன் பேனையில் பூத்த 
கவிதைப் பூக்கள்
புதுப் புது வாசத்தோடு
பூமியில் வலம் வருவதால்
அப்துல் றகுமான் நீ
அத்தர் றகுமானாய்
அனைவருக்கும் மணக்கின்றாய்

நீ
எழுது கோலை ஒரு போதும்
பொழுது போகப் பாவித்த
பாவி கிடையாது

பாவலன் என்றாலும்
நீ
பத்திய புத்திரன்
கவிக் 
காவலன் ஆனாலும்
சத்திய வித்தகன்

உன் எழுதுகோலில் முளைத்த 
இலக்கியப் பயிர்கள்
பழுது போன கதையே இல்லை
விருதுகள் பதிநான்கும்
விளக்கம் அதற்கு சொல்லும்

எம் தேசத்திலும் நீ
உன் வாசத்தை வீசிச் சென்றதால் - அதன்
வாடை இப்போதும்
மேடைகளில் வீசுகிறது

அப்துல் றகுமானே
தமிழ் உலகம் உனக்கு
தலை வணங்குகிறது
ஆம்
தமிழுக்கு நீ
தாராளமாய் செய்திருக்கிறாய்

அத்தர் றகுமானே 
நீ
செதுக்கிய சீடர்கள் போதும்
உன் சேவையின் சிறப்பு சொல்ல
உன் வாடை பட்ட சீடர்கள்
சோடை போனதே கிடையாது

சுதந்திரம் பற்றி
உன் சீடன் எழுதிய கவிதை
உன் இலக்கிய சுயத்தை
என்றென்றும் பறை சாற்றும்

உன்
இலக்கிய ஆளுமையை அளக்க
எங்கேயும்  கிடையாது
அளவு கோல்கள்
அவற்றுள் ஒரு துளிதான்
உனது நூல்கள்

கவி வேந்தே
உன் பேனையின்
பிரசவங்கள்
சவங்களைக் கூட
ஸ்வரங்களாக்கியிருக்கிறது
சாபங்களை எல்லாம்
வரங்களாக்கியிருக்கிறது

கவிக் கோவே
"நீ வாழ்ந்த காலத்தில்
நான் வாழ்ந்தேன்"
இது மட்டும் போதும்
எனக்கும் மகிழ்ச்சி தர
எண்ணினால் கவிதை வர

கவிஞனே
உன் எழுத்துக்கு 
பழுத்துக் குலுங்க
பருவ காலம் கிடையாது
ஆண்டு முழுக்க
அறுவடை காலம் தான்

உன் எழுத்து
உலகத்தை அழைக்கிறது
உன் பிரிவு
எம் இதயத்தை பிளக்கிறது

உன்
தாடியும் முடியும் நரைத்தாலும்
உனக்கு
சூடிய கிரீடம் நரைக்காது

பால் வீதியில்
பயணத்தை தொடங்கியவனே
கலை உலகை
நடு வீதியில் நிறுத்திவிட்டு 
போகிறாயே
 
புனித றமழானில்தான்
புறப்பட்டுப் போனாய்
இனிதாய் மண்ணறையை
இறைவன் ஆக்கி வைப்பானாக!

Post a Comment

0 Comments