Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-82


வெளியுலக மனிதர்களை செரோக்கி ஏன் தம்மோடு அழைத்து வரவேண்டும்?
 
இந்தக் கேள்விக்கான  விடையை அறிந்து தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவாவில், நோய்வைப்பட்டிருக்கும் தன் கணவருக்கான பணிவிடைகளை அவசரஅவசரமாக முடித்துக்கொண்ட செரோக்கியின் தாய் தன்  மகன் வீட்டை நோக்கி விரைந்தாள்!

அழைத்துவந்த விருந்தினர்களை  ஜமுக்காளம் ஒன்றை விரித்து அதில் அமரச்செய்த செரோக்கி, மற்றொரு புறத்தில் ரெங்க்மாவை படுக்கவைத்து, போர்வை ஒன்றினால்  போர்த்திவிட்டுக் கொண்டிருந்தபோது தாய் அவனது வீட்டுக்குள் நுழைந்தாள்!

எச்சங்களையும் மூலிகைகளையும் திரட்டி வருவதற்காக வனத்துக்குச் சென்ற மகன் எதுவுமே எடுத்து வராமல், வெறுங்கையோடு வந்தது மட்டுமல்லாமல், தன்னோடு  வெளியுலக மனிதர்கள் சிலரை  அழைத்து வந்திருப்பது பற்றி  அவள் அவனிடம்  வினவினாள்.  

அவனும் ரெங்க்மாவும் வனப்பகுதிக்குச் செல்லும் வழியில் “ஓரினகோ” ஆற்றிலிறங்கியது முதல் ஆற்றினுள் ரெங்கமா அடித்துசெல்லப்பட்டு, பின்னர் அவளை வெளியுலக மனிதர்கள் காப்பாற்றியது வரையிலான  அனைத்தயும்  ஒன்றொன்றாக - ஒன்று விடாமல் தாயிடத்தில் ஒப்புவித்தான் செரோக்கி!

வெளியுலகத்து குள்ள மனிதர்களைத் தம்மோடு அழைத்து வந்ததன் நோக்கத்தைப்  புரிந்துகொண்ட அவனது தாய்  விருந்தினர்  பக்கம் திரும்பி சிரம்சாய்த்தவளாக  அவர்களுக்கு நன்றி தெரிவித்தாள்!

அவர்களிருவரும் தாயும் மகனும் என்பதைப் புரிந்து கொண்ட அந்தக் குள்ள மனிதர்கள்  புரியாத மொழியில் அவர்களிருவரும் கதைப்பதை  பிரமிப்புடன்  உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்! சற்று நேரத்தில் சற்று அவர்களையறியாமலேயே  கண்ணயர்ந்து போயினர்!  “ஓரினகோ” ஆற்றங்கரையிலிருந்து கால்கடுக்க நடந்து வந்த களைப்பு அவர்களை அவ்வாறு  கண்ணயர வைத்துவிட்டது!

ரெங்க்மாவின் பக்கத்தில்  மெல்லச் சென்ற செரோக்கியின் தாய், அவளது முகத்தை ஆதரவோடு தடவி, களைந்து கிடந்த அவளது கூந்தலை ஒன்று சேர்த்து இறுகக் கட்டிவிட்டு, நெற்றிப் பகுதியை முகர்ந்துவிட்டவள்... திடீரென  ரெங்க்மாவின் உச்சந்தலையை உற்று நோக்கினாள்! அங்கு ஒரு சுழி மட்டுமே இருப்பதைக்கண்டவள் களிப்படைந்தாள்!  ஒன்றுக்கு மேற்பட்ட சுழிகள் இருக்குமானால், தன் மருமகளை அவள் இப்போது பார்த்திருக்க  முடியாதிருந்திக்கும்... நீருக்குள் அடித்துச் செல்லப்பட்டிருப்பாள்!

வனவாசிகளிடத்தில் காணப்படும்  நம்பிக்கைகளுள் உச்சந்தலையில் ஒன்றுக்கு மேற்பட்ட சுழிகள் இருப்பவர்களுக்கு நீரில் கண்டம் என்பதும் ஒன்றாகும்!

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மருமகளைக் காப்பாற்றித் தந்துவிட்டு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த  அந்த நல்ல மனிதர்களை மேலும் ஒருமுறை நன்றிப்பெருக்கோடு நோக்கிவிட்டு, வயிறார உண்ணக்கொடுத்து அவர்களை உபசரிக்க அசத்திவிட வேண்டுமென்ற நினைப்போடு தன் ஜாகையை நோக்கி நகர்ந்தாள்!

தும்மேசையில் காய்ந்திருந்த மான் மாமிசத்தை எடுத்த அவள், அதனை சிறிது சிறிதாகப் பிய்த்தெடுத்து பன்தட்டொன்றில் பரப்பிவிட்டு, புழக்கடைப்பக்கம் சென்று தேசிமரத்தில் பழுத்திருந்த சில பழங்களைப் பறித்தெடுத்து வந்து, அவற்றை இரண்டாகப்  பிளந்து சாற்றை பன்தட்டில் பரப்பி வைத்திருந்த மான்மாமிசத்தில் பிழிந்து விட்டு, தும்மேசைக்கடியில் காய்ந்திருந்த  புளித்துளசியைத் தன் கைகளாலேயே நறுக்கி அதன் மேல் தூவிவிட்டவள், மறுபடியும்  புழக்கடைப் பக்கமாகச் சென்றாள்!

அங்கு கிளைகள் விட்டு வளர்ந்திருந்த  மரவள்ளிச் செடிகள் சிலதை   அடிப்பக்கமாகப்பிடித்திழுத்தபோது மண்ணிலிருந்து பிடுங்கிக் கொண்டுவந்த கிழங்குகளைத்  தம் கைகளில் அடுக்கி எடுத்தவளாக  ஜாகைக்குள் நுழைந்தவள், அவற்றைப் பரணில் அடுக்கிவைத்து  தீ மூட்டினாள்!

தீ சுவாலை விட்டு எரியத்தொடங்கியது!

கொஞ்சநேரம் கழித்து  வெந்து விட்ட கிழங்குகளை எடுத்து தோலுரித்து இன்னொரு பன்தட்டில் அடுக்கி வைத்து, பதப்படுத்தி வைத்திருந்த மாமிசத்தட்டை ஒரு கையிலும், கிழங்குத் தட்டை  மற்றொரு கையிலும் தாங்கியவளாக  மறுபடியும்  செரோக்கியின் வீட்டுக்குள் நுழைந்தாள்!
(தொடரும்)

Post a Comment

0 Comments