நேரம் சுணங்கி விட்டவளின் கதை...!

நேரம் சுணங்கி விட்டவளின் கதை...!


என் உள்முகம் அன்புக்கூர்ந்து பார்க்கிறது அவளை. 
என் பட்டியில் வகை வகையில் ஆடுகள்.பிடித்த ஆடுகள் நிறைய உள்ளன. 

மெட்டுகள் கூடவே கேட்டபடியுமாய் வாழ்வுவெளி. எதையும் கொண்டாடி முடிக்கிறேன் மனசுள். சுணங்கி வருகின்றன ஆடுகள் தோட்டத்துக்கு.

அவளுக்கு இப்போது பதினைந்து வயது. வயதுக்கு உரித்தான பருமன்,உடற்கட்டு எதுவுமில்லை. மெல்லிய ஒல்லிக்குச்சி உடல்.
அழகான கூர் கண்கள் அவளுக்கு. வீச்சின் வாசம் இருக்கிறது அங்கே.

பள்ளியில் 'சுணங்கி வருவோர்' குறித்து 
கவனிக்கும் மாணவத்தலைவர்கள் ஊடாக, அடிக்கொரு தரம், என்னிடம் கூட்டிவரப்படும் அந்தச் சிறுமியை ஏறக்குறைய மூன்றாவது வருடமாகவும் தவிர்க்கவே முடியாமல் 'சுணங்கி வருபவளாக'க் காணுகிறேன்.

இவ்வளவு அறிவுறுத்தியும் இன்னும் எப்படி இவள் சுணங்குகிறாள்? வேறு பெரிய முறைப்பாடுகள் இல்லை அவள் பற்றி. படிப்பும் நன்று எனும் நிலை. சிலபோது வித்தியாசமாய் தோளுக்கு மேல் கையை உயர்த்தி, குட்டியாய் நாம் வழங்கும் பிரம்பு அடியை சிரித்துக்கொண்டே வாங்கிப் போவாள். மடை மாறி வெறுமை வெயில் அடிக்கும்... என்ன செய்ய..?

ஆயினும், வெறுக்க ஏனோ முடியாதிருந்தது அவளை எனக்கு. மன ஆழத்தில் ஒரு அதிபராக மட்டுமே இருப்பதில்லை நான்.

கேவல்கள் இருக்கலாம். பெற்றோர் சந்திப்பு வேண்டியிருந்தது.

ஒருநாள், அவள் வாப்பா வந்தார். அடிமனசுக்குள் கசியும் அழுகை ராகம் ஒலிக்கிறது எனக்கு.

காலை நொண்டிக்கொண்டே வந்த அவர் முகம் வாழ்வின் எல்லை ஓரத்துக்கே ஒதுக்கப்பட்ட ஒருவர் முகமாய் நிமிண்டிக் கொண்டிருக்கிறது என்னை. 

முதிர்ந்த தோற்றம். தவிர்க்க எவ்வளவு முயன்றாலும் சுணங்கி விடுகிறாள் என்பது பற்றி அவர் கவலையையும் தெரிவிக்கிறார். 

உம்மா வெளிநாட்டில் பணிப்பெண் வேலை. உணவுக் கடை ஒன்றில் சர்வர் வேலை செய்து கிடைக்கும் சின்ன சம்பளம் அவர் வருமானம். பள்ளி விட்டதும் மெல்ல வந்து மகளை கூட்டிப்போவார். 

ஒருநாள், அவள் அக்கா உறவினர் ஒருவரோடு என் இல்லம் வருகிறாள். இருபது வயது இருக்கலாம். எங்கள் பள்ளி பழைய மாணவி அவள். விஞ்ஞானப் பிரிவில் கற்று மூன்று பாடங்களிலும் சாதாரண அளவில் தேறிய அவள் எல்லா பெறுபேற்று அட்டவணைகளையும் எடுத்து வந்திருந்தாள். "கொஞ்ச நாள் வீட்டில் இருந்து விட்டேன். தொடர்ந்து கற்று ஒரு வேலைக்கு போக வேண்டும் போலிருக்கிறது.." என்றாள். 

சின்ன சின்ன வழிகாட்டல்களை செய்தேன். 

இந்த கொரோனா lock down காலத்தில் அந்த வாப்பா நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாக ஒரு துயர் செய்தி வருகிறது. 

தவித்தது மனது. 

இரவோடிரவாக மையித்தை அடக்கி விட்டார்கள்.கரிசல் காட்டுவழி வண்டி ஓடிற்று.

ஓரிரண்டு நாள் கழித்து அவள் வீட்டுக்கு கணவர் சகிதம் போகிறேன். பிள்ளைகள் இருவரும் ஓடி வருகிறார்கள் என்னைக் கண்டவுடன். இத்தனை தூரத்தை நடந்தே இவ்வளவு நாளும் கடந்திருக்கிறார்கள் சிறுமியும், கால் வலியுடன் அவள் வாப்பாவும்...

வீதி வழியில் கண்கள் பேயாய் ஒட்டிக் கிடந்தது. 

ஒரு மாதகாலம் தந்தை நோயில் இருக்க உம்மா வெளிநாட்டில் இருந்து வந்து விட்டதாக சொன்னார்கள் இருவரும்.

வெயில் சுண்டி அடிக்கிறது எனக்கு. 

மிகவும் இளவயது தாய். "ஐயோ டீச்சர்... அவர் இல்லாத வீட்டில் இருக்கவே முடியவில்லை.."

"அவர் மூதூர் பிரதேசத்தில் இருந்து, இங்கு வந்தவர். விடுதலைப் புலிகள் சந்தேகத்தின் பேரில் ஒரு முறை கூட்டிப்போய் அடித்ததில்  முழங்கால் வெகுவாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது. அப்புறம், அவர்கள் புலம் பெயர்ந்து எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கையில் அவரை நிறைய காதலித்தேன். முன்னர்,அவர் ஒரு இந்து. இல்லம் எதிர்த்தது. என்னிலும் பன்னிரண்டு வயது மூத்தவர். திருமணம் முடித்தோம். " நினைவுகளில் குலுங்கினாள் தாய்...

"முழங்கால் உபாதை காரணமாக நொண்டுவார். பெரிதாக தொழில் ஒன்றும் செய்ய முடியாது. எனினும்,பிள்ளைகளைக் கவனிப்பதில் அவர்போல யாருமில்லை. சீனி வருத்தம் வேறு வந்து, முதுகில் புண் வர ஆசுபத்திரியில் அனுமதித்து, எனக்கு அறிவித்தார்கள்.

நாம் கூப்பிட்டுக்கொண்டே இருக்க, சொல்லாமல் பறந்து விடும் பறவை போல, நான் பாதியில் வந்து விட்டேனா...? 

சொல்ல இன்னும் நிறைய இருந்திருக்க வேண்டும் அந்த தாய்க்கு. எல்லாக் கதைகளையும் கேட்டு முடிக்க ஆயுள் போதுமா..?

என்னோடு வந்திருந்த என் அலுவலக உதவியாளர் தங்கை கேட்டாள், "அவரை ஏன் எல்லோரும் 'மாஸ்டர்' என்று கூப்பிடுகிறார்கள்..?"

"அவர் ஊரில், அவர் ஒரு பள்ளி தொண்டர் ஆசிரியர். புலிகள் தாக்கியிராவிட்டால் அவருக்கு அங்கே நியமனம் கிடைத்திருக்கும். இங்கு வந்திருக்க மாட்டார்..." முகம் புதைத்து அழுது வைத்த தாயை கடந்து வந்து விட வேண்டியிருந்தது.

தொழில் கனவோடு என்னிடம் வந்த அக்காவுக்கு இன்னும் சில நாளில் கல்யாணம் நடக்கும்.அவள் பொறுப்பில் சிறுமியை விட்டு விட்டு இன்னும் நான்கு மாதங்கள் பத்தே நாட்களில் உம்மா மறுபடியும் போய் விட வேண்டும்...கடன்கள் நிறைய இருக்கிறது அவர்களுக்கு..கறுத்த ஆடுகளை யாரோ தோட்டத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள்..

கடல் குமுறிப் பாய்ந்த வெள்ளத்தில் உள்மனது அதிர்வது நல்லவேளை, எவருக்கும் தெரியாமல் உள்ளேயே நடந்து விடுகிறது...!!!

Post a Comment

Previous Post Next Post