காலமெல்லாம் உன்னோடு
கைகோர்த்துத் திரியவே
கவலைகள் இன்றிக்
கதையளக்கவே ஒரு
கனவு கண்டேன் தோழி
கடித்த மாங்காயைப்பறித்துக்
களவில் உண்ணவே
கண்களால் சாடை காட்டிக்
கபடி ஆடவே ஒரு
கனவு கண்டேன் தோழி
கல்லுக்கொத்தி,ஆற்றங்
கரையோரம் கால் நனைத்துக்
கைப்பிடித்து வரப்பில் நடந்து
கரப்பெடுத்து மீன்பிடிக்க ஒரு
கனவு கண்டேன் தோழி
கூட்டாஞ்சோறு சமைத்து
கூடியிருந்துண்டு
குறும்புக் கதைகள் பேசி
குதூகலித்திருக்கவே ஒரு
கனவு கண்டேன் தோழி
கடற்கரை மணலில்
கால் புதைத்து நடந்து
கதகளி ஆடும்
கடலலை பார்த்துக்
களித்திருக்கவே ஒரு
கனவு கண்டேன் தோழி
கல்விக் கூடத்தில்
கருவான நம் நட்பு
காலங்கள் பல சென்றாலும்
கனவிலும் தொடர்கிறதே
அன்புத்தோழி...


0 Comments