காத்தான்குடி -5 சீனி ஆலிம் லேனை பிறப்பிடமாகவும் காத்தான்குடி-6 தாருஸ்ஸலாம் வீதியினை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் காத்தான்குடி மத்திய கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் மர்ஹும் அப்துல் மனாப் - சல்சுல் ஆரிபா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.
தனது ஆரம்பக் கல்வியினை காத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலயத்திலும், உயர்கல்வியினை காத்தான்குடி மத்திய கல்லூரி மற்றும் மீராபாலிகா தேசிய பாடசாலையிலும் தொடர்ந்தார்.
கடந்த 20 வருடங்களாக சொந்தமாக முன்பள்ளி ஒன்றினை நடாத்தி வருகின்ற இவர், குறித்த முன்பள்ளியின் அதிபராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இவர் பாடசாலைக் காலம் முதல் இலக்கியத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது 13வது வயதில் காத்தான்குடி பள்ளிவாயில்களில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இவரை பெரிதும் பாதித்தது.இப்படுகொலையினை பின்னணியாகக் கொண்டு இவர் வடித்த "காத்திரு மகனே" எனும் தலைப்பிலான கவிதை இவரது கவிதை உலகுக்கான நுழைவாயிலாக அமைந்தது.குறித்த கவிதை மேற்படி சுஹதாக்கள் நினைவாக வெளியிடப்பட்ட முஸ்லிம்தேசம், சல்லடை தேசம், நேசன் போன்ற சஞ்சிகைகளில் பலமுறை மீள் பதிப்பு செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டது.
இதனைத்தொடர்த்து இவரது கவிதைகள், கட்டுரைகள்,சிறுகதைகள் என்பன முஸ்லிம்குரல்,மீள்பார்வை,புதியநாளை,விடிவெள்ளி,எங்கள் தேசம்,தினமுரசு,வாரஉரைகள் முதலிய பத்திரிகைகளிலும் நேசன், நிஜம்,இமயம்,ஸம்ஸம்,
பெண் முதலிய சஞ்சிகைகளிலும் வெளிவந்தன.
கடந்த நான்கு ஆண்டுகளாக வாரந்தோரும் விடிவெள்ளி பத்திரிகையில் "சரியாச்சொன்னீங்க மாமி" எனும் தலைப்பில் பத்தி எழுத்துருவாக்கம் ஒன்றினையும் எழுதி வந்துள்ளார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக காத்தான்குடி கலாச்சார மத்திய நிலையத்தின் கலை இலக்கியப்பாட போதனாசிரியையாகவும் கடமையாற்றி வருகின்றார்.இப்பாடநெறியினூடாக பல மாணவர்களையும் கலை இலக்கியத்துறையில் பயிற்றுவித்து அதிகமான நாடகங்களையும் கிராமியப்பாடல்களையும் மேடையேற்றியுள்ளார்.தேசிய அளவிலான வெற்றிகளையும் பெற்றுள்ளார்.
உள்ளூர் வானொலியான ரிசாலா வானொலியில் பெண் அறிவிப்பாளராகவும் மங்கையர் மாருதம் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.ஊவா வானொலியின் கடந்த ஹஜ்ஜுப்பெருநாள் கவியரங்கிலும் பங்குபற்றியிருந்தார்.
பிரதேச, மாவட்ட, தேசிய அளவிலான பாடலாக்கம், சிறுகதை,பேச்சு,கவிதைகள், தொடர்பான போட்டிகளில் விருதுகளையும் சான்றிதழ்களையும்,நினைவுச்சின்னங்களையும் பெற்றுள்ளார்.
#. இதற்கு மேலதிகமாக வார உரைகல் பத்திரிகையினால் பொற்பதக்கம் வழங்கி கௌவிக்கப்பட்டமை.
#.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறந்த பெண் ஆளுமையாளர் விருதினைப் பெற்றுக்கொண்டமை.
#.பிரதேச கலாச்சார விழாவில் கவிதை இலக்கியத்துறைக்காக " *பாயிரத்தாரகை* " விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை.
#.இலங்கை முஸ்லிம் கலாச்சார பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் பாரம்பரிய கலைஞருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை.
#. சக்தி தொலைக்காட்சியின் சிறப்பு மகளிர்தின எதிரொலி நிகழ்வில் பங்குபற்றி கௌரவிக்கப்பட்டமை.
#. 2010ம் ஆண்டு இவரது சமாதான செயற்பாடுகளை கௌரவிக்கும் முகமாக ஜேர்மன் நாட்டின் கல்வி மற்றும் சமாதானத்திற்கான நிலையத்தினால் ஒருமாத காலம் ஜேர்மனியில் தங்கியிருந்து, அந்நாட்டின் கலை, கலாச்சார, பண்பாட்டு விடயங்களை கற்றுக்கொள்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
அம்மாநாட்டில் கலந்து கொண்டமைக்கான சான்றிதழும் நினைவுப் பரிசும் குறித்த ஜேர்மனிய அமைப்பினால் வழங்கப்பட்டது.
#.2017ம் ஆண்டு அமெரிக்காவின் கல்வி மற்றும் கலாச்சார திணைக்களத்தின் அனுசரணையுடன் மற்றுமொரு புலமைப்பரிசில் இவருக்கு கிடைக்கப்பெற்றது.பெண்களின் கல்வி மற்றும் அபிவிருத்தி,இலக்கியங்கள்,ஊடகம் தொடர்பான விடயங்களை 3வார காலங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து கற்றுக்கொள்கின்ற வாய்ப்பும் வழங்கப்பட்டது.அமெரிக்காவின் பிரதான 5 மானிலங்களில் அமைந்துள்ள பெண்கள் தொடர்பான பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், இலக்கியம்சார் படைப்புகளை நேரில் சென்று பார்வையிடும் வாய்ப்பினையும் அமெரிக்க அரசு வழங்கியிருந்தது. இவ்விஜயத்தின் முடிவில் அமெரிக்க அரசின் கல்வி கலாச்சார திணைக்களத்தின் கௌரவ சான்றிதழினையும் பெற்றுக்கொண்டார்.
தற்பொழுது முகநூல்வாயிலாக பல்வேறு ஆக்கங்களினையும் எழுதி வருகின்றார்.
தகவல்: கவிதாயினி சம்மாந்துறை மசூறா


0 Comments