ரெங்மாவைக் கைத்தாங்கலாக்கியவனாக நடந்து கொண்டிருந்த செரோக்கி, அவளை நீருக்குள்ளிருந்து காப்பாற்றிய குள்ள மனிதர்களை உபசரிக்க வேண்டுமென்ற வெறியில் அலவத்தையை ஊடறுத்து நடந்து வந்து, களைப்புத்தீர அங்கிருந்த மரவேர்களில் சற்று நேரம் அமர்ந்து, இளைப்பாறிவிட்டு மீண்டும் நடையைக் கட்டினர்!
பல நாட்களாக உடம்பு நலிந்துபோய் நோய்வாய்ப்பட்டிருந்த செரோக்கியின் தந்தை ஜாகைக்கு வெளியே குகைக்கருகில் இருந்த கற்பாறை ஒன்றின்மீது அமர்ந்த நிலையில் சூரிய ஒளியை உள்வங்கிக்கொண்டிருந்தார்.
ரெங்மாவைக் கைத்தாங்கலாக்கியவனாக நடந்து வந்து கொண்டிருந்த செரோக்கியைத் தொடர்ந்து சில குள்ள மனிதர்கள் வந்துகொண்டிருந்தததைக் கண்ட அவர் முகம் கோபத்தால் செக்கச்சிவந்து போய்விட்டது!
வனவாசிகள் காலாகாலமாகக் கடைபிடித்துவரும் மரபிற்கிணங்க எந்த வெளி மனிதர்களையும் வனப்பகுதிக்குள் நுழைய விடக்கூடாது. அப்படியான வெளிமனிதர்களைத் தம்மோடு அழைத்துவருவதைக் கண்ட செரோக்கியின் தந்தை கடுப்பானத்தில் தப்பெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை!
வெளிமனிதர்களால் தமக்கு “தடிமன்” வந்துவிட்டால், அது அவர்களை மரணத்தில் கொண்டு சேர்க்கும் என்று வனப்பகுதி மக்கள் காலாகாலமாக நம்பி வருகின்றார்கள்!
தன் மகனின் இந்த இமாலயத் தவறை நேரடியாகச் சுட்டிக்காட்டிக் கண்டிக்க விரும்பாத அவர் விர்ரென்று ஜாகைக்குள் நுழைந்து செரோக்கியின் தாயிடத்தில் மகன் செய்துவாரும் தவறைக் குறிப்பிட்டுக் கடுமையாகக் கர்ச்சிக்கலானார்!
அவரது கோபத்தைத் தணிக்கச் செய்துவிட்டு, வாசலருகே வந்த அவள் முன்னோக்கியபோது, செரோக்கி ரெங்மாவைக் கைத்தாங்கலாக்கியவனாக நடந்து வந்து கொண்டிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் நகரத்து நாகரிக உடையணிந்த குள்ள மனிதர்கள் சிலர் தம் தோள்களில் பைகளைச் சுமந்தவாறு வந்து கொண்டிருப்பதையும் கவனித்தபோதுதான் தன் கணவரின் கோபத்திற்குக் காரணத்தைப் புரிந்து கொண்டாள்!
மனம் பதறிப்போய்விட்ட அவளுக்கு “தடிமனை”க் காவிவரும் வெளியுலக மனிதர்களாக அவர்கள் அவளது மனக்கண்முன் தோன்றினர்!
வெளியுலக மனிதர்களை செரோக்கி ஏன் தம்மோடு அழைத்துவரவேண்டும் என்ற கேள்விக்குறி அவளிடத்தில் எழுந்தபோதிலும், உடல் நலம் குன்றிப்போயிருந்த தம் கணவரை அந்த மனிதர்கள் அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டுமென்ற நினைப்பு அவளிடத்தில் மிகைத்திருந்ததால், தம் ஜாகைக்குள் அவள் விரைந்து நுழைந்தாள்!
(தொடரும்)


0 Comments