கண்டி - மாத்தளைப் பிரதான பாதையில் 16.5 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் வத்தேகம நகரக்குடியிருப்பு மத்திய பிரதேசத்தில் மூவினத்தவர்களும் கலந்து வாழும் குடியிருபபுக்களுள் ஒன்றாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட உத்தேச சனத்தொகை மதிப்பீட்டின்போது நகரில் 15934 பேர் வாழ்ந்திருக்கின்றனர். அவா;களுள் மொத்த வாக்காளர் தொகை 5935 ஆகும். அவர்களுள் முஸ்லிம் வாக்களாளர்கள் 270 பேர்களாவர்.
சந்தைக் குடியிருப்பாக அறிமுகமாகிய வத்தேகம நகரத்தில் இன்று சுமார் நூற்றுமுப்பது முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பெருந்தோட்டத்துறை சார்ந்த வத்தேகம நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக நாற்பதுக்கும் அதிகமான வியாபார நிலையங்கள் காணப்படுகின்றன. 1850களைத் தொடர்ந்து உருவாகிய வத்தேகம நகரைச் சுற்றி இராமச்சந்திர, ஹுன்னஸ்கிரிய, எலடின் கபாம், மீஸான், பிட்டகந்த போன்ற பல பெருந்தோட்டங்கள் அமைந்திருப்பதோடு, ஹுன்னஸ்கிரியிலிருந்து ஊற்றெடுத்துப்பாய்ந்து, பொல்கொல்லையில் மகாவலி கங்கையுடன் சங்கமமாகும் நீரோடைக்கரையில் வத்தேகம நகரம் அமைந்திருப்பதும் சிறப்பானதாகும்.
இன்றும் நகரின் வியாபார மேலான்மை தமிழ், முஸ்லிம் வியாபாரிகளது கையில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நகரில் அமைந்துள்ள அதிகமான கட்டடங்கள் முன்னர் "ஹாவி" என்ற ஆங்கிலேய துரைக்குச் சொந்தமாக விளங்கியவையாகும். நாடு சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களை அறிந்துகொண்ட திருவாளர் ஹாவி அதிகமான கட்டடங்களை அக்காலை நகரில் பெரும் வர்த்தக ஜாம்பவானாகத் திகழ்ந்த ஏ. ஜீ பேர்னாண்டோ என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.
திருவாளர் பெர்னாண்டோ வத்தேகம நகர சபையில் இருபத்தொரு வருட காலம் தலைவராகவும், 1970-1977 வரையுள்ள காலப்பகுதியில் வத்தேகமைத் தொகுதியின் பாராளுமன்ற அங்கத்தவராகவும் விளங்கிய பெருமைக்குரியவா;.
1977ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட வன்செயல்களின்போது வத்தேகம நகர் பெரும் அழிவைச் சந்தித்தமை கசப்பான அனுபவம் எனக் கூறப்படுவதுண்டு. தென்னிந்திய வியாபாரிகளால் உருவாக்கப்பட்ட வத்தேகம நகரில் அதிகமான இந்திய முஸ்லிம் வம்சாவளியினர் வர்த்தக நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதை அவதானிக்கலாம். அவற்றுள் ஏற்றுமதி வர்த்தகத்தில் தடம்பதித்திருந்த புகாரி பிரதர்ஸ் வர்த்தக நிறுவனம் குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)


0 Comments