ஆத்மார்த்த உறவு தேடி
அந்தகார இருளில் அலையும் கைகள்..
காதுகளை கிழித்துச்செல்கிறது..
அவளைச்சுற்றிலும் பள்ளம் பறிக்கும் ஓசை...
உயிர்கசியும் உறவுக்கு...
நட்பென்று பெயர்வைத்தும்...
துரோகக் கத்திகளால் நிதமும்
துண்டாடப்படுகிறது இதயம்..
தொடுதல்களை தோல்களோடு
மாத்திரம் சுருக்கிக் கொண்ட
இதயங்களுக்குள்அவள் தேடும்
ஆத்மாவைத் தொட
ஆழத்துழாவுகிறது விரல்....
மாமிசம் தின்று தின்றே
மரத்துப்போன நாவுகள்,...
மறுகணமே அலைகிறது
அடுத்த வீட்டு புலால் தேடி....
உச்சிமரத்துக் காக்கைகளின்
முட்டை குடித்து, வம்சம் அழித்த மமதையில்...
குடியேறுகிறது கருநாகம்..
கரையான் புற்றுகளில்...
இப்பொழுதெல்லாம் புன்னகை
மொட்டுகளுக்கு பதிலாக
மௌனப் பூட்டுகளையே அணிகிறது அதரம்...
திண்ணை வீட்டு மரங்களும்
ஒட்டுக்கேட்பதான பயத்தில்...
கண்களைக் குருடாக்கும்
காரிருளில்- ஒரு தீக்குச்சியைத்தானும்
ஏற்ற முடியாத விரக்தியில், குண்டடிபட்ட
குருவியின் சிறகாய் துடித்துக்கொண்டே
இறக்கிறன்றன அவள் கனவுகள்..
ஆனாலும் ஒன்றை சொல்லித்தான்
ஆகவேண்டும்..அவர்கள் உடைத்துப்போட
நினைப்பது வெறும் புறாக்களின்
சிறகுகளை அல்ல...சிலவேளை
அவை பீனிக்சின் இறக்கைகளாகவும் இருக்கக்கூடும்....


0 Comments