குறள் 476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
மருமவன.. நம்மளைப் பத்தி பெருசா நெனச்சுக்கிட்டு எதுலியும் எல்லை மீறி போவக்கூடாது. அப்படிப் போனா என்ன நடக்கும் தெரியுமா மருமவன. மரத்துல விறு விறுன்று ஏறி நுனிக்கொம்புக்கு போன பொறவும், இன்னம் ஏறணும்னு ஆசைப் பட்டு, கொப்பு முறிஞ்சு கீழ விழுந்து உயிருக்கு எமனாகுத மாதிரி நடந்திரும் மாப்ள.
குறள் 481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
நம்ம காக்கா இருக்குல்லா. அது ரொம்ப சின்னதுதாம். இந்த ஆந்தை இருக்க .. அதுக்கு காக்காவ விட பலம் கூடத் தான். இருந்தாலும் இந்த காக்கா, ஆந்தையை பகல்லன்னா, சுளுவா அடிச்சு நொறுக்கிரும்.
இது மாதிரிதாம்ல, நம்ம எதிராளிங்கள சரியா சமாளிக்கணும்னா, அதுக்கு ஏத்த நேரத்துக்காக நாம காத்திருக்கணும். வெளங்குதாடே.
குறள் 483
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
மருமவன... ஒரு வேலையை செய்யதுக்கு உண்டான தெறமை இருக்கணும். தேவைப்படும் கருவி வேணும். சரியான நேரம் பாத்து அந்த வேலையைச் செஞ்சோம்னு வச்சுக்க, செய்ய முடியாத வேலைன்னு ஒண்ணுமே இருக்காது மருமவன.
குறள் 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
மருமவன... எந்த ஒரு சோலியை செஞ்சாலும் மொதல்ல ஏத்த நேரம் எதுன்னு பாத்துக்கிடணும். அது மட்டும் போறாது. செய்யதுக்கு ஏத்த எடந்தானான்னும் பாத்துக்கிடணும்.
நல்ல யோசிச்சு இப்பிடி செஞ்சோம்னு வச்சுக்க மருமவன. ஒலகம் அம்புட்டும் நமக்கு வேணும்னு கேட்டாக்கூட, அது ரொம்ப சுளுவா நம்ம கைக்கு கெடச்சுரும் மருமவன.
குறள் 486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
ஆட்டுக்குட்டி இருக்குல்லா. அது சண்டை போடும் போது பாத்திருக்கியா மருமவன.. கொஞ்சம் மெதுவா பின்னால கால எடுத்து வச்சு பதுங்கி நடக்கும். அது எதுக்குன்னா, நேரம் பாத்து டக்குன்னு முன்னால பாஞ்சு எதுராளியை முட்டிச் சாய்க்க தான்.
அதுமாதிரி தான் மருமவன.. நல்ல ஊக்கம் உள்ளவொல்லாம், அமைதியா பம்மி இருக்காவொன்னா, சரியான நேரம் வரட்டும்ங்கிறதை எதிர்பாத்துத்தான்.
குறள் 490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
மனசுல நெனச்சிருக்க சோலியை சரியாச் செஞ்சு முடிக்கணும்னா, கொக்கு செய்யுத மாதிரி கொஞ்சம் பொறுமையாக் காத்திருக்கணும் மருமவன.
சரியான நேரம் வரும்போது கொக்கு மீனை அலக்கா கொத்தித் தூக்கும்லா. அது மாதிரி சோலியை முடிக்கதுக்கான சரியான நேரம் வரும்போது, அதை சட்டு புட்டுண்ணு செஞ்சு முடிக்கணும் மருமவன. (தொடரும்)


0 Comments