மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.மர்ஹும் U.H. முகம்மது,பௌசியா தம்பதியின் மூன்றாவது பிள்ளை.சிறு பராயம் முதலே வாசிப்பிலே ஆர்வம் கொண்டவர். புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம் பாலர் வகுப்பில் இருந்தே ஆரம்பமானது. அந்த வகையில் பாலர் புத்தகங்கள், சாந்தமாமா,ராணி காமிக்ஸ், விக்கிரமாதித்தன் கதைகள், சிந்துபாத் கதைகள், ராஜ கதைகள் எல்லாம் இவருக்கு அத்துப்படி. .கல்வியில் முன்னணியில் இருந்தாலும் புத்தகங்கள் வாசிப்பதை மட்டும் அவர் விட்டுவிடவில்லை. கவிதையிலும் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.கவிதை புத்தகங்கள் என்றால் அவர் நாடி நரம்பெல்லாம் இன்பக்கேணி கரைபுரண்டு ஓடுமாம் .
அவர் தந்தை ஹயாத்து முஹம்மது அவர்கள் கணித ஆசிரியராக இருந்தபோதிலும் தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்திருக்கிறார். தனக்கு தமிழ்மொழியின் ஆஸ்தான குரு தந்தை என்று தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறார் ஜலீலா.
தான் எதை எழுதினாலும் தந்தையிடம் முதலில் அதைச் சமர்ப்பித்து பாராட்டுக்கள் வாங்குவது அவர் வழக்கமாய் இருந்திருக்கிறது. .ஆரம்பக்கல்வியை ஏறாவூர் மட் அறபா வித்தியாலயத்தில் கற்று தரம் 5 இலிருந்து சாதாரணதரப் பரீட்சை வரை ஏறாவூர் அல் முனீரா மகா வித்தியாலயத்தில் கற்றார்.தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும், க/பொ/த சாதாரண தரத்திலும் சிறப்பு சித்திகள் பெற்றமை குறிப்பிடத்தக்கது. உயர்தரக் கல்வியாக உயிரியல் விஞ்ஞானத்தைத் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கற்று சிறப்புச் சித்தி அடைந்தார்.
அங்கிருந்து மருத்துவ படிப்புக்குத் தெரிவாகி மருத்துவக் கல்வியை கொழும்பு களனிப் பல்கலைக்கழகத்தின் றாகமை மருத்துவ பீடத்தில் கற்று முடித்தார். தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமை புரிகிறார். கல்வியிலே கண்ணாக இருந்து அவர் தனது திறமையைக்காட்டினாலும் எழுத்துலகம் அவரது இன்னொரு கண் என்றே சொல்லலாம். எழுத்தும் வாசிப்பும் அவர் நேசிக்கும் துறைகள். கற்றலின் ஊடே அவர் கவிதை எழுதுவதை விட்டு விடவே இல்லை. பள்ளிப்பருவத்திலே கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி ,பாடல் போட்டி, பட்டிமன்றம், குறுக்கெழுத்து போட்டி, வில்லுப்பாட்டு போன்றவற்றை தயார்செய்வது மட்டும் அல்லாமல் அந்தப் போட்டிகளிலும் பங்கு பற்றி வெற்றியீட்டியுள்ளார். அது மட்டுமல்ல வெற்றி வாகையும் சூடினார்.நிறைய சான்றிதழ்களும் பரிசில்களும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல பாடசாலை நிகழ்ச்சிகளில்
அறிவிப்பாளராகவும் பங்கேற்றுள்ளார். பாடசாலைகளில் வெளியிடப்பட்ட நூல்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். பல்கலைக்கழகத்தில் வெளியான சஞ்சிகைகளிலும் கவிதைகள் எழுதியிருக்கிறார்..நிறைய நூல்கள் சேமித்தும் வைத்திருக்கிறார்.
கல்வித்துறையில் கூடிய கவனம் எடுத்ததால் எழுத்துத்துறையில் பயணிக்க முடியாமல் போனதை இட்டு வருத்தமடைகிறார்.ஆயினும் பணி தவிர்ந்த காலங்களில் எழுத்துலகில் பயணிக்கத் தன்னை தயாராக்கிக் கொண்டார்.
தனது அவசரமான வாழ்க்கைப் பயணத்தில் எழுதுவதற்கு என்று நேரத்தை முகாமைத்துவப்படுத்தி செலவழிக்கிறார். அதற்கு உறுதுணையாக இருக்கும் அன்புக் கணவருக்கு நன்றி சொல்லும் இவர் முக நூலிலும், வாட்ஸ்அப் குழுமங்களிலும் இவரது கவிதைகள் தினகரன் , தினகரன் வாரமஞ்சரி,தமிழன், வேட்டை, அக்கினிச்சிறகுகள் போன்ற உள்நாட்டு சஞ்சிகை ,பத்திரிகைகளிலும் துணிந்தெழு,தமிழ் நெஞ்சம்,வளரி வெளிநாட்டு சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. முகநூல் முகநூல் குழுமங்களில் இடம்பெற்ற கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்று சான்றிதழ்கள் அதிகம் கிடைக்கப்பெற்றிருக்கிறார்.
பிறை எஃப் எம் வானொலியிலும் இவருடைய கவிதைகள் சந்தனக்காற்று பகுதியில் ஒலிபரப்பு செய்யப்பட்டிருக்கின்றன.ஊக்கப் பதிவுகள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். இவருடைய ஊக்கப் பதிவுகளும் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. சிறீலங்கா பென் கிளப் எனும் பெண் எழுத்தாளர்கள் அமைப்பில் அங்கத்துவம் வகிப்பதோடு அதிலே கணக்காய்வாளராகவும் கடமையாற்றுகிறார்.மேலும் அதிலே இடம்பெறும் நிகழ்ச்சிகளில் விருப்புடன் பங்கேற்கிறார்.. ஸ்ரீலங்கா பென் கிளப் முகநூல் பக்கத்தில் மருத்துவப்பகுதிக்கும் பொறுப்பாளராக இருக்கிறார்.ஸ்ரீலங்கா பென் கிளப் விரைவில் வெளியிட இருக்கும் "சுட்டு விரல்" கவிதைத்தொகுப்பு வெளியீட்டிலும் இவரது கவிதை இடம்பெற இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறார்.
மணிக்கூ கவி நஸீரா எஸ் ஆப்தீன் அவர்கள் எழுதிய "மண்ணில் தவழும் விண்மீன்கள்" மற்றும் "புத்தொளிக்கவிதைகள்" போன்ற நூல்களில் இவருடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. விரைவில் கவிதை நூல் ஒன்றை வெளியிடும் ஆர்வத்தில் இருக்கிறார்.எழுத்துலகில் வளர வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் இருக்கிறார்.எழுத்துலகில் தன்னை வளர்த்துக் கொள்ள ஏதுவாக தன்னை பென்கிளப் குழுமத்தில் இணைத்துக் கொள்ள உதவி செய்த திருமதி கமர்ஜான் பீவி அவர்களுக்கும் திருமதி மசூறா சுஹுறுத்தீன் அவர்களுக்கும் மற்றும் எழுத்துலகில் பிரவேசிக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி நவிலக் கடமைப்பட்டுள்ளேன் என்கிறார்.
தகவல் -
சம்மாந்துறை மஷூறா.


4 Comments
மாஷா அல்லாஹ்..வாழ்த்துக்கள் தோழி.. மென்மேலும் பல வெற்றிகளை அடைய நல்வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் மா.
ReplyDeleteவாழ்த்துக்கள் மா
ReplyDeleteசிறப்பு! சிகரம் தொட இனிய நல்வாழ்த்துகள்!
ReplyDelete