சின்னஞ்சிறு கனவுகள்
தண்ணீருக்குள் கலைந்தன.
பொத்திப் பொத்தி பாதுகாத்த
மொட்டுக்கள்
கொத்துக் கொத்தாய்
புதைந்தன.
சீருடை அணிந்து
வகுப்பறைக்கு சென்ற சிறார்கள்
கபன் துணியணிந்து
மண்ணறைக்குச் சென்றனர்.
கண்ணீரில் மிதக்கிறது
கிண்ணியா.
கதறியழும் உறவுகளுக்கு
ஆறுதல் சொல்ல
என் அகராதியில்
வார்த்தைகள் இல்லை.
பாலம் உடைந்ததாம்.
படகு கவிழ்ந்ததாம்.
இது
பொறுப்பற்றவர்கள்
பெற்றுத் தந்த
இன்னுமொரு கருப்பு நாள்.
இதயங்கள் இடிந்து போன
இன்னுமொரு துக்க தினம்.
பொறுப்பு அற்றவர்களே
பொறுப்புக்களில் இருக்கிறார்கள்
என்பதற்கான
இன்னுமொரு அத்தாட்சி.
இது அரசியல் அல்ல.
இருந்தாலும்,
மாறிமாறி வரும் ஆட்சிகளில்
மாறாத ஒன்று
மக்கள் கஷ்டங்கள் மட்டுமே.
தேனாகப் பேசுவதை
வீணாக நம்பி ஏமாறுவதும்
மக்கள் மட்டுமே .
இந்த நிலை மாறாத வரை....
கருப்பு நாட்களையும்
கறை படிந்த அத்தியாயங்களையும்
எதிர் காலம்
எழுதிக் கொண்டே இருக்கும் .
நிம்மதி
முகவரியைத் தொலைத்து விடும்.
ஒழுக்கம்
களைப்படைந்து
ஓய்வெடுத்துக் கொள்ளும்.
அடிப்படை உரிமைகள்
அடிக்கடி காணாமல் போகும்.
மனித நேயம்
முன்னோர்களின் பண்பாகப்
பேசப்படும் நிலை வரும்.
இயற்கை அனர்த்தங்களுக்கு
இயன்றவரை
முகம் கொடுத்துவிட்டோம்,
இனவாதம் என்றும்
வன்முறைகள் என்றும்
வலிகளோடு வாழ்ந்து விட்டோம்.
இந்த நிலை
இனியாவது மாறவேண்டும்.
இதுவரை,
எரிக்கப்பட்ட பூக்களும்
உதிர்ந்த பூக்களும்
சுவனத்துப் பூஞ்சோலையின்
மலர்களாகட்டும்.
இழந்த உயிர்கள்
இனி
திரும்பி வரப்போவதில்லை.
எஞ்சி இருப்பவர்கள் இதை
மன்னிக்கப் போவதுமில்லை.
அவ்வப்போது நடக்கும்
அசம்பாவிதங்களில் மட்டும்
கொந்தளித்துக் கொள்கிறோம்
கொதித் தெழுகிறோம்.
கொஞ்சம் சூடு தணிந்ததும்
குறட்டை விட்டு
தூங்கியும் விடுகிறோம்.
ஆத்திரம்
அழுது தீர்க்கச் சொல்கிறது
ஆதங்கம்
எழுதித் தீர்க்கச் சொல்கிறது.
ஆனால்...
எழுத விடாமல் எச்சரிக்கிறது
எழுத்துச் சுதந்திரம்.


0 Comments