மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-33 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-33 (வரலாறு-பாகம்-2)

கும்புக்கந்துறை -33.
ஆற்றங்கரை நெடுகிலும் நிறைந்து காணப்பட்ட மருத மரங்களை அடியொட்டியதாக கும்புக்கந்துறை என்ற பெயர் வழங்கப்படலாயிற்று. “குபுக்கஹ”  என்பது சிங்கள மொழியில் மருதமரத்தையும் “பந்துர”  என்பது தோப்பு என்ற கருத்தையும் கொடுக்கின்றன. அக்காலை நீர்வளத்தைப் பாதுகாப்பாதற்காக ஆற்றங்கரை நெடுகிலும் மருதமரங்கள் நடப்படுவது வழக்கமாகும். கும்புககந்துறைக் குடியிருப்பூடாக ஓடிச் சென்று ஹுலுகங்கையில் சங்கமமாகும் “வஹலஎல”  என்ற நீரருவியைக் காரணமாகக்  கொண்டும்  கும்புக்கந்துற பிறந்ததாக செவிவழிச் செய்திகள் பேசப்படுவதுண்டு.

முதலில் ஆற்றங்கரையிலிருந்து அறிமுகமாகிய கும்புக்கந்துறை,  நாளடைவில்  இஹலகம்மெந்த,  பஹலகம்மெந்த என்ற பெயர்களில் மேலும் விஸ்தீரமடையலாயிற்று.

குடியிருப்பிலிருந்து மூன்றரைக் கிலோ மீற்றர் தொலைவில் வல்லேதொட்ட என்னுமிடத்தில்  முன்னைய தெல்தெனிய நகர் அமைந்திருந்தது. சில பதிவுகளில் வல்லேதொட்ட என்ற பெயர் வல்லிஹிதொட்ட எனவும்  குறிப்பிடப்பட்டிருப்பதுண்டு.  ஆரம்ப காலத்தில்  வல்லேதொட்ட ஓர் ஆற்றங்கரை இறங்குதுறையாக விளங்கியிருக்க வேண்டும் எனக்கருதலாம்.  தெல்தெனிய நகரம் விக்டோரியாத் திட்டத்தால் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து  குடியிருப்பின்  மேட்டு நிலப்பகுதியான மேற்கு எல்லையில் திகன நகரும்,  வடக்கு எல்லையில்  கரல்லியத்த நகரும் புதிதாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

நீரில் மூழ்கிய தெல்தெனிய நகரிலும்  கணிசமான எண்ணிக்கையினராக முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

கும்புக்கந்துறையின் ஆரம்ப வரலாறு பற்றிய எழுத்தாவணங்கள் கிடைக்கப்பெறாதபோதும்  ஆற்றங்கரையில் அமைந்திருந்த முதலாவது மஸ்ஜிதின் எச்ச-சொச்சங்களைத் தற்போதும் அவதானிக்க முடிவது சிறப்பானதாகும்.  பழைய மஸ்ஜிதோடு இணைந்ததாக அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் பெரியார் அஷ்ஷெய்க் ஹுஸைனுல் பக்தாதி (ரஹ்) அவர்களது ஸியாரமும் கும்புக்கந்துறையின் பூர்வீகத்துக்குக்  கட்டியம் கூருவதாக அமைந்துள்ளது.

குடியிருப்பாளர்கள் பலரின் வம்சாவளிப் பெயர்கள் அவர்கள் தொன்று தொட்டுப் புகழோடு வாழ்ந்தமைக்குச் சான்றாக விளங்குகின்றன. அவற்றுள், குருகொட விதானலாகே, காஸல மரிக்கார், கொங்காவெல கெதர, கோங்கஹ கொட்டுவ கெதர, நம்பு விதானலாகே கெதர, ஆரச்சிலா கெதர, கல்வடே கெதர, ராஜ மரிக்கார்லா கெதர, அஸ்வத்தும கம்மஹேலாகே கெதர, பங்கர கம்மன கெதர, தம்பலகெடியஹேன கெதர, நம்முவாவ விதானலா கெதர குறிப்பிடத்தக்கவை.

பிரதேசத்தின் பெரும்பகுதி நிலங்கள் ஆங்கிலேய ஆட்சியாளர் காலத்தில் அரசுக்குச் சொந்தமாக விளங்கிய பெருந்தோட்டங்களிலிருந்து குடியிருப்பாளர்களால் விலை கொடுத்து வாங்கப்பட்டவையாகும்.  1875ல் அளவீடு செய்யப்பட்ட ஒரு காணியின் வரைபடத்திலிருந்து இதுபற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிவது குறிப்பிடத்தக்கது. அவ்வேளை,  அரசாங்கத்துக்குச் சொந்தமாயிருந்த பெருந்தோட்டம் இரண்டு ஏக்கர்களாகப் பிரித்து விற்பனை செய்யப்பட்ட போது காணிக்கச்சேரிக் காரியாலயமாக பிரதேசத்தின் மூத்த மார்க்கமேதையாகக் கொண்டாடப்படும் கதீப் லெப்பைக் கனி ஆலிம் ஸாஹிப் அவர்களது தோட்டத்தில் ஓர் கற்பாறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தற்போதும் அக்கற்பாறை “கச்சசேரிக்கல்” என அழைக்கப்படுகின்றது.

ஆங்கிலேயர் ஆட்சியின் நிர்வாக முறையில் பிரதான அம்சமாக விளங்கிய கச்சேரி அலுவலக முறையை நினைவு கூர்வதாக கச்சேரிக்கல் என்ற சொல் அமைந்திருக்கின்றது. தற்போது கச்சேரி என்ற சொல் வழக்கிழந்து “செயலகம்”  எனப்பயன்பாட்டில் இருந்து வருகின்றது. பழைமையான கச்சேரி முறை கண்டி மாவட்டத்தில் 1825ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்ப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. அதன் தலைமை அதிகாரி  அரசாங்க அதிபர் என அழைக்கப்பட்டார்.கண்டி மாவட்டத்தின் முதலாவது அரசாங்க அதிபராகப் பணிபுரிந்த பெருமை ஜோர்ஜ் டேனர் (1825-1827) என்ற ஆங்கிலேய அதிகாரியைச் சாரும்.

1921ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணிப்பிலிருந்து  கும்புக்கந்துறையில்  511 முஸ்லிம்கள் வாழ்ந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.   அவ்வெண்ணிக்கை 95 வீதம் முஸ்லிம்களைக் கொண்ட எண்ணிக்கையாகும்.  மெடிகேக் குடியிருப்புக்கள் போன்று  தொன்று தொட்டு முஸ்லிம்கள் செறிந்து  வாழ்ந்த குடியிருப்புக்களுள் ஒன்றாக கும்புக்கந்துறை விளங்கியதை  இப்புள்ளி விபரம் எடுத்துக் காட்டுகின்றது. தும்பறைப் பிரதேசத்தில் பொல்கொல்ல குடியிருப்பைத் தொடர்ந்து  உருவாகிய இஸ்லாமியக் குடியிருப்பாகக் கும்புக்கந்துறையைக் கொள்ளவேண்டும்.

1975ம் ஆண்டில் கும்புக்ந்துறை ஜமாஅத்தில் 600க்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருந்துள்ளனர். பாரிய இஸ்லாமியர் எண்ணிக்கையைக் கொண்ட கும்புக்கந்துறையின் ஒரு பகுதி  1983ம் ஆண்டு விக்டோரியாத் திட்டத்தின் கீழ் நீரில் மூழ்கியதால் அம்பஹலந்த, ஹிஜ்ராபுர பகுதிகளில் தனித்தனியான  ஜமாஅத்துக்கள்  உருவாகியிருக்கின்றன. கும்புக்கந்துறையையும் அம்பகஹலந்தையையும்  இணைக்கும்  ஹுலுகங்கைப்  பாலம்   இரண்டு  ஜமாஅத்தவர்களையும் தொடர்ந்தும்  கல்வி - கலாசார நடவடிக்கைகளில் ஒன்றிணைத்து வைத்திருப்பது சிறப்பானதாகும்.

நூறு வருடங்களுக்கும் முதலில்  பன்வில, மடுல்கல, ஹுலுகங்க, நாரம்பனாவ பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஜும்ஆத் தொழுகைக்காக கும்புக்கந்துறை ஜமாஅத்துடன் ஒன்றாக இணைந்திருந்ததிலிருந்து கும்புக்கந்துறை, பிரதேசத்தின் தாய்க்குடியிருப்பாகக் கொள்ளப்பட்டது.  ஹிஜ்ராபுர, அம்பஹலந்த ஜமாஅத்துக்கள் தனித்தனியாகப் பிரிந்து சென்றிராவிடில்  தும்பறைப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் மடவலையைப் போன்று கும்புக்கந்துறையும் பாரிய முஸ்லிம் ஜமாஅத்தாக விளங்கியிருக்க முடியும்.(தொடரும்)




 





Post a Comment

Previous Post Next Post