புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 89

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 89


ஒரினோகோ - அமேசன் பெருநதியின் கிளை ஆறுகளுள் ஒன்றாகும். ஆற்றிலிருந்து நகரத்து நாகரீக  மனிதர்களால்  காப்பாற்றப்பட்டு  குமாரி ரெங்க்மா உயிர் பிழைத்து வந்தமை புரோகோனிஷ் கிராமத்தவருக்கு வியப்பைத் தந்திருக்க வேண்டும்! அதனால்தானோ என்னமோ கிராமத்துப்பழங்குடியினர்  சாரிசாரியாக செரோக்கியின் வீடு நோக்கி வந்து, ரெங்க்மாவைப் பார்த்து நலம் விசாரித்துச் செல்லலாயினர்.

வீட்டுக்கு வருவோரை வரவேற்பதிலும், அனுசரிப்பதிலும் செரோக்கியின் தாய் வெகு மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தாள்.

ஆற்றில் மூழ்கிய ரெங்க்மா  தன் வாய் வழியே உட்சென்று  வயிற்றில் தேங்கி நின்றிருந்த நீரை  வெளியேற்ற நகரத்து நாகரிக மனிதர்கள் மேற்கொண்ட முதலுதவிப் பணியின்போது அவளது மேனி சிதைவடைந்திருந்தது. அதனால் எழுந்து நடமாடுவதில் முடியாநிலையில் அவளிருந்தாள். உடல்  வலி போக்க குடும்பத்தவர்கள்   கொடுத்த  மூலிகை மருந்துகள் எதுவுமே இதுவரை பயனளிக்கவில்லை!  

சில நாட்களுக்கு முன்னர் செரோக்கியின் தந்தை நோய் வாய்ப்பட்டிருந்தபோது செரோக்கி அழைத்து வந்த வைத்தியரும் ரெங்க்மாவைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். அவரும் சில மூலிகைகளை சிபாரிசு செய்தார்.

சற்று சுகம் கண்டிருந்த செரோக்கியின் தந்தையும் வைத்தியரும் கொஞ்ச நேரம் அளவலாவிக்கொண்டிருந்த வேளை, ‘ரெங்க்மா ஆற்றிலிருந்து உயிர் பிழைத்து வந்தது பெரும் அதிசயம் மட்டுமல்ல அதிர்ஷ்டமும் கூட’ என்று குறிப்பிட்ட வைத்தியர், இது விடயத்தில் கிராமத்து எல்லையில் ‘பெரியகல்’ அடிவாரத்தில் தவம் புரிந்துவரும் யோகியாரைச் சந்திப்பது நல்லதெனக்  குறிப்பிட்தடுச் சென்றார்.

பல தசாப்தங்களாக ‘பெரியகல்’ அடிவாரத்தில் வாழ்ந்து வரும் ‘யோகியார்’ பற்றி  செரோக்கியின் தந்தைக்கு நன்றாகத் தெரியும்.

கல்லிலிருந்து கால் சறுக்கி விழுந்து விட்ட எவரும் இதுவரை உயிர் பிழைத்தது கிடையாது.  தனது சிறு பிராயத்தில் கால் சறுக்கி விழுந்த யோகியார் மட்டுமே கல்லிலிருந்து  விழுந்தவர்களுள்  உயிர் பிழைத்தவராவார்.

நூறு வருடங்களுக்கு மேலாகியும் எவ்வித மனித தொடர்புமின்றி, கல் அடிவாரத்தில் வாழ்ந்து வரும் அவர், சுற்றாடலில்  கிடைக்கும் பழங்கள், கிழங்கு வகைகளை உண்பதிலும், தம்பமரத்தடியில் தவம் புரிவதிலுமே தன் வாழ்நாளைக் கழித்து வருகின்றார்!
(தொடரும்)



 

Post a Comment

Previous Post Next Post