Ticker

6/recent/ticker-posts

வக்பு சபை நியமனத்திற்கு வரிசை ! NPP முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு....!


வக்பு சபையின்  காலம் கடத்த பதினோராம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், சபை அங்கத்தவர்களை நியமிக்கும் விடயத்தில் 
தொடர்ந்தும் இழுபறி நிலை தொடர்கிறது.

எவ்வாறாயினும் முன்னர் பதவியிலிருந்த திருடர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்ற முடிவு ஒருவகை மகிழ்ச்சியை அளித்தாலும்,அனைத்து ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் என் தரப்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும், என் தரப்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற பெயர் பட்டியலுடன் வரிசையில் நிற்பதாக தெரிய வருகிறது.

சபையின் நியமனத்திற்காக மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியில், ஒரு சில நேர்மையானவர்களை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக,  வலுக் கட்டாயப்படுத்தி சமூக சொத்துக்களை பாதுகாப்பது சம்பந்தமான கடமைகளை எடுத்துக் கூறி, வலுக்கட்டாயமாக அவர்களை விருப்பப்பட வைத்து, சிறந்த ஒரு வக்பு சபையை உருவாக்கும் முயற்சியில் சில நல்லுள்ளங்கள் ஈடுபட்டிருந்த போதிலும், தங்களுக்குத் தேவையானவர்களை பதவியில் அமர்த்த வேண்டும் என்ற சில பாராளுமன்ற உறுப்பினர்களின் விடாப்பிடியின் காரணமாக, ஒரு சிறந்த  வக்பு சபை அமைப்பதிலான முயற்சிகள் தொடர்ந்தும் தோல்விகளை தழுவிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த வழி முறை கடந்து சென்ற ஆட்சியாளர்களால் தொடர்ந்து வந்த ஊழல் மிகுந்த வழிமுறையாகும்.

உரிய பதவிக்கு உரிய, தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்பது ஜனாதிபதியினதும் இந்த அரசாங்கத்தினதும் அடிப்படை குறிக்கோளாகும்.

வக்பு சபை என்பது பல ஆயிரம் கோடி அமானித சொத்துக்களை உள்ளடக்கிய, இவற்றைப் பாதுகாக்க வேண்டிய, ஒரு மிக மிகப் பொறுப்பு வாய்ந்த அமைவிடமாகும். இதன் ருசி அறிந்தவர்களே கடந்த காலங்களில் ஊதியம் இல்லாத இப்பதவிகளுக்கு போராட்டங்களின் மூலம் பதவிக்கு வந்தார்கள். 

இதன் விழைவாக நாட்டினால் பகுதிகளிலும் பல நூறு கோடிகள் பெறுமதியான வக்பு  சொத்துக்களை பலர் கையாடல் செய்துள்ளார்கள்ர்கள். இவை மீண்டும் திருப்பிப் பறிக்கப்பட்டு வக்பு சபையிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

இந்த அரசால் இதைச் செய்ய முடியவில்லையாயின்  எந்த அரசாலும் இதைச் செய்யவும் முடியாது, செய்யவும் மாட்டார்கள் என்பதே உண்மை.

எனவே இதற்காக போட்டி போடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று சிந்தித்து நற்காரியத்துக்கு தடை இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக,  அந்த ஜமாத்தின் சார்பாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும், இந்த ஜமாத்தின் சார்பாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என சில கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அறிய கிடைக்கின்றது.

இவ்வாறாக ஒவ்வொரு ஜமாத்தினர் சார்பாகவும் ஒவ்வொருவர் நியமிக்கப்பட இது ஒரு கொள்கை பரப்பு சபை அல்ல.

இப்பதவிக்கு படித்தவர்கள், நம்பிக்கையானவர்கள், நீதி நேர்மையாக செயல்பட கூடியவர்கள் , எந்த விதமான அதிகாரங்களுக்கும் தலைகுனியாதவர்கள்,  வரப்பிரசாதங்களுக்கு விலை போகாதவர்கள் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படல் வேண்டும்.அவர்கள் இந்த ஜமாத்தினராக இருந்தாலும் எந்தக் கொள்கையில் இருந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட விடயமாகும்.

ஓய்வு பெற்ற நீதிபதிகள், நேர்மையான அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கக்கூடிய சட்டத்தரணிகள், சன்மார்க்க அறிஞர்கள்.  இஸ்லாமிய விரிவுரையாளர்கள், பொறியாளர்கள், சமூகத்தில் நன்மதிப்புள்ள வக்பு சபையை  முன் நின்று வழிநடத்தக் கூடிய நற்பண்புள்ள வைத்தியர்கள், வக்பு சொத்துக்களை Digital மயப்படுத்தி இதை பாதுகாக்க தேவையான தொழில்நுட்பவியலாளர்கள் போன்றவர்களே இதற்கு நியமிக்கப்பட வேண்டும்.

மேலும் இதன் தலைமைப் பதவிக்கு முக்கிய ஆன்மிக சபை ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவர் தன்னை நியமிக்கும் படி வேண்டுகோள் ஒன்றை விடுத்திருப்பதாகவும், ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புதிய போத்தலில் பழைய சாராயம் சமூகத்துக்கு பயன் தராது என்பதை இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.  இதுவரை காலமும் இவர்கள் தந்த பழைய போதை மக்களுக்கு புலித்து போனதே. 

எனவே நவீன சிந்தனையுடன், அல்லாஹ்வுக்காக பயந்து, நம்பிக்கையுடன் செயல்படக்கூடிய சிறந்த ஒரு குழுவை அமைக்க இப்ப பாராளுமன்ற உறுப்பினர்கள் வழி விட வேண்டும் என்பதே சமூகத்தினதும் எதிர்பார்ப்பாகும். 

பேருவளை ஹில்மி 


 


Post a Comment

0 Comments