Ticker

6/recent/ticker-posts

Ad Code

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-78 (செந்தமிழ் இலக்கியம்)


மனம் தரும்; வரம் கேள்!
செய்க பொருளை...
ஆம். இது ஒரு மந்திரச் சொல். மனித இன வாழ்க்கை மட்டுமே பொருளுடன் தொடர்புடையது. நிறைவு என்பதும் எல்லாமே பொருளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதை ஆண்டாண்டுக் காலமாக நம் முன்னோர்களும் கூறியுள்ளனர். அதைப் படித்துள்ளோம். ஆனால் படித்ததைப்பயன்படுத்தத்தான் இல்லை.

வெற்றி என்பதன் இலக்கணம்...! எவனொருவன் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைகின்றானோ அவனே வாழ்க்கையின் வெற்றியாளன் என்பார் இதழாசிரியர்ப் பிதாமகன் கி. வேணுகோபால் அவர்கள். அது எவ்வளவு பெரிய நிதர்சன உண்மை .

பொருளாதாரத்தை வென்றெடுக்க வேண்டும். மனம் சரிஎன்று சொல்வதைத் துணிச்சலுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். எதற்கம் ஒரு இலக்கு வேண்டும். பொருளாதாரத்தில் தன்னிறைவு வேண்டுமா ! இதோ வள்ளுவர் கூறுவதைப்படியுங்கள்.

செய்க பொருளைச்செறுநர்செருக்கறுக்கும் எஃகதனிற்கூறியதில். (குறள்-759)
என்று கூறுகிறார். 

இதன் மூலம் நல்ல வழியில் முயன்று முதலில் பொருளை ஈட்டுக. அப்பொருளானது. அச்செல்வமானது. நம் பகைவரின் ஆணவத்தை அறுத்தெரியும் கூரிய வாள் ஆகும். இதைவிட வலிமையானது வேறு ஒன்றும் இல்லை என்றுவிளக்குகிறார்.

காந்திநாட்டுக்காக உழைத்தார்;

காந்தி நோட்டுக்காக நாடே உழைக்கிறது ! உண்மைதானே ! இந்தப் பணம் நம்மிடம் வருவதற்கு நமக்கு மனம் தான் வேண்டும்.

இதோ ஒருவரலாற்று உண்மைச் சம்பவம்
ஒருவர் நிஜமாகவே நினைத்தால் பணம் சம்பாதித்துக் காட்டலாம் என்பதை நிரூபித்துக் காட்டியவர்.
பல வருடங்களுக்கு முன்பு எட்வின் சி. பார்ன்ஸ் என்பவர் “புகழ்பெற்ற விஞ்ஞானி தாம்ஸ் ஆல்வா எடிசனுடன் சேர்ந்து பிசினஸ் செய்ய வேண்டும்” என்று ஆசைப்பட்டார், விரும்பினார். ஆச்சரியம் என்னவென்றால் ஒன்று எடிசனை அவருக்குத் தெரியாது. இரண்டு எடிசனை அவர் ஊரில் சென்று சந்திக்க ரயில் டிக்கெட் வாங்கக் கூடகையில் காசு இல்லை.

இந்நிலையில்... அவரது ஆசை, மனத்தில் கனவாக, கனலாக தகிக்கத் தொடங்கியது. வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன் என்ற அசைக்க முடியாத உறுதி அவரிடம் இருந்தது.

கடன்பட்டு, வாய்ப்பை உருவாக்கி எடிசனைச் சந்தித்தார். அவரது உறுதி அவருக்கு எடிசனிடம் ஒரு சிறு வேலை வாங்கிக் கொடுத்தது. மாதங்கள் உருண்டன. பார்ன்ஸ் இன் ஆசை அடைகாக்கப்பட்டு வாய்ப்புக்காகக் காத்திருந்தது. |

அதிர்ஷ்டம்... ஆம் அது பெரும்பாலும் யாருக்கும் வாசல் கதவைத் தட்டுவதில்லை. கொல்லைப்புறம் வழியாக இரகசியமாக மாறுவேடத்தில் நுழைவதுதான் அதன் வேலை. இந்த சூட்சுமம் பலருக்குத் தெரிவதில்லை. இது நமக்குக் கிடைத்த வாய்ப்பு என்பதைக்கூட பலர் அடையாளம் காணத் தவறிவிடுகின்றனர். சிலர் மட்டுமே கண்டுக்கொள்கிறார்கள்.

“டிக்டேட்டிங் மிஷின்” ஒன்றை எடிசன் கண்டுபிடித்திருந்தார். 
இந்தப்புதிய மிஷின் விஷயத்தில் அவரது சேல்ஸ்மேன்கள் யாரும் அக்கறை காட்டவில்லை. பார்ன்ஸ்க்கோ அதுதான் அட்சயப் பாத்திரமாக, அற்புத வாய்ப்பாகத் தெரிந்தது. எடிசனிடம் தன் கருத்தைக்கூற, வாய்ப்புக் கிடைத்தது. நாடு முழுவதும் விற்பனை செய்யும் காண்ட்ராக்ட் கிடைத்து வியாபாரத்தில் செல்வம் குவித்தார்.

பேச்சு, மூச்சு, சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் தன் இலக்கு மட்டுமே. நிறைந்திருந்ததால் அவரது வெற்றி கனிந்து அவர் வசம் ஆனது. ”செய்க பொருளை...”

வள்ளுவன் சொன்னதை மனத்தில் நிறுத்துவோம் ! முயன்று நல்வழியில் பொருள் ஈட்டுவோம்! 

பொருளாதாரத்தை வென்றெடுப்போம்! அதில் தன்னிறைவு அடைவோம்! வெற்றியாளர்களாக வெற்றிப்பாதையில் வலம் வருவோம்!

நலம்பெற்று, வளமுடன் நீடுவாழ்வோம்.
(தொடரும்)








Post a Comment

0 Comments