Ticker

6/recent/ticker-posts

Ad Code



மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-34 (வரலாறு-பாகம்-2)


கும்புக்கந்துறை மஸ்ஜித் -34
கும்பக்கந்துறை மஸ்ஜிதின் வரலாறு 1800களைத் தொடர்ந்துள்ள முதல் தசாப்தங்களிலிருந்து ஆரம்பமாவதாக குடியிருப்பாளர்கள் உறுதி செய்கின்றனர். தற்போதும் ஹுலுகங்கைக் கரையில் சிதைவடைந்திருக்கும் பழைய மஸ்ஜிதுக்கும் முதலில் ஒரு மஸ்ஜித் அமைக்கப்பட்டிருந்ததாகப் பேசப்படுவதுண்டு. ஆற்றங்கரை மஸ்ஜிதின் சரித்திரத்தோடு பேசப்படும் ஆன்மிகப் பெரியார் அஷ்ஷெய்கு ஹுஸைனுல் பக்தாதி (ரஹ்) அவர்களது வரலாறும் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளையும் கடந்து செல்வதாகும்.  தற்போதும் சிதைவடைந்த நிலையில் காணப்படும் ஸியாரத்தின் நுழைவாயில் பலகையில் “1897” என எழுதப்பட்டிருந்ததை  பலரும் ஞாபகப்படுத்துவதுண்டு.   பிரதேசத்தின் மூத்த மார்க்க  அறிஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்த மௌலவி  ஏ. முஹம்மது ஸலீம் அவர்கள் தினகரன் தேசிய நாளிதழில் பெரியார் பற்றி  எழுதிய கட்டுரையில்  அன்னார் 1864ம் ஆண்டு இறையடி சேர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதேசத்தின் சன்மார்க்க வளர்ச்சியில் பெரும்  பங்கு வகித்ததாகக் கூறப்படும் பெரியாரின் ஸியாரம் அன்னார்  இறையடி எய்திப்  பல வருடங்களுக்குப் பின்னரேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதலாம்.  இந்நடைமுறையே இலங்கை முழுவதிலும் பின்பற்றப்பட்டிருக்கின்றது.

பெரியாரின் குடும்ப உறவினர்கள் தென்னிலங்கை வெலிகமையைச் சேர்ந்தவர்களாவர். அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட வருடாந்த புர்தா கந்தூரி மஜ்லிஸ் இன்றுவரையும் நடைபெற்று வருவது சிறப்பானதாகும்.  150 வருடங்களையும் கடந்து செல்லும் இம்மஜ்லிஸ்  வருடா வருடம் முஹர்ரம் மாதத்தில் சிறப்புற நடைபெற்று வருகின்றது.  கும்புக்கந்துறையில் போன்று இலங்கையின் பல்வேறு மஸ்ஜிதுகளிலும் புர்தா மஜ்லிஸ் நடைபெற்று வருவதைக் குறிப்பிடலாம்.  அவற்றுள்  ஹபுகஸ்தலாவை, தந்துரை, கிருங்கதெனிய  மஸ்ஜிதுகள்  குறிப்பிடத்தக்கவை. 

எகிப்து நாட்டைச் சேர்ந்த பெருங்கவிஞர் இமாம் ஷரபுத்தீன் முஹம்மதுல் பூஸிரி (ரஹ்) (ஹி.608 - ஹி.696) அவர்களால் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை காவியநாயகராகக் கொண்டு பாடப்பட்ட ஓர் அற்புதக் காவியமே கஸீதத்துல் புர்தாவாகும். ஏழரை நூற்றாண்டுகளையும் கடந்து செல்லும் வரலாற்றைக் கொண்ட “கஸீதத்துல் புர்தா” சர்வதேச மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.   பிரபல வரலாற்றாசிரியர் பிலிப் கே. ஹிட்டி கஸீதத்துல் புர்தா பற்றி தனது ~அறபு மக்களின் வரலாறு| என்ற நூலில் எழுதியுள்ள குறிப்புக்கள் அபூர்வமானவையாகும்.

In Poetry perhaps the only name worthy of citation is that of Sharafuddin Muhammad Al-Busiri (1213-1296) of  Berber extraction who composed the famous Ode entitled at Burdah(the Prophets mantle)  in memory of his miraculous cure from aparalytic stroke by a vision of the Prophet casting his mental over him. No other Arabic Ode has attained the popularity of Al-Burdah. Over ninety commentaries on it have been composed in Arabic, Turkish, German, French, English & Italian, etc....

 “கவிதையில், குறிப்பிடத்தக்க ஒரு நூல்  ஷரபுத்தீன் முஹம்மது பூஸிரியின் (1213-1296) அல்-புர்தாவாகும்.  பர்பர் வம்சத்தில் தோன்றிய இக்கவிஞர் நபிகள் பெருமானாரின் சால்வை என்ற பிரசித்திபெற்ற இந்த கஸீதாவை, தாம் நோயுற்றிருந்தகாலை, நபிகள் பெருமானாரின் காட்சியைப் பெற்று, அன்னார்தம் போர்வையால் போர்த்தப்பெற்று, தமக்கு ஏற்பட்டிருந்த பக்கவாதத்திலிருந்து அதன் மூலமாக அற்புத நலன் பெற்றதன் மூலமாக இயற்றினார். நீடுயர் எழுச்சிப் பாடல் இனத்தில் புர்தாவைப்போல்  பொதுமக்களிடம் நடமாடும்  கவிதை வேறெதுவுமில்லை. அறபி, பார்ஸி, துருக்கி, ஜெர்மன், இத்தாலி ஆகிய மொழிகளில் 90க்கும் மேற்பட்ட விரிவுரைகள் இதுபற்றி இயற்றப்பட்டுள்ளன.

(மூலம் : பேராசிரியர் ஹிட்டியின் “அறபு மக்களின் வரலாறு” - பக்கம்-690.
நன்றி பிறை மார்ச் 1976)
கலாசாரப் பெருமைகள் நிறைந்த குடியிருப்பில் மௌலித், ராத்திப், தலைப்பாத்திஹா மஜ்லிஸ்கள் நூற்றாண்டு காலமாக சிறப்புற நடைபெற்று வந்துள்ளதை குறிப்பிடலாம். அவை தவிர, சிலம்படி, கோலாட்டம் போன்ற விளையாட்டுக்களும் பிரதேச மக்களிடையே பிரபல்யம் பெற்று விளங்கிய கலாசார அம்சங்களாகும்.  


கும்புகந்துறை ஆற்றங்கரை மஸ்ஜிதை நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகித்த  அஷ்ஷெய்கு ஹ{ஸைனுல் பக்தாதி (ரஹ்) அவர்களைத் தொடர்ந்து குடியிருப்பாளர்களோடு  மஸ்ஜித் பணியில் காத்தி;ரமான பங்கேற்றவர்களுள் ஒருவராக கிழக்கிலங்கை மருதமுனையைச் சேர்ந்த அப்துல் மஜீத் மௌலானாவும் அவரது புதல்வர் அப்துல் லதீப் மௌலானாவும்  ஜமாஅத்தவர்களால் இன்றும் நன்றிப் பெருக்குடன் நினைவு கூரப்பட்டு வருகின்றனர்.

ஆற்றங்கரை மஸ்ஜிதைத் தொடர்ந்து உருவாகிய  புதிய மஸ்ஜிதின் பணிகள் 1959ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. ஹ{லுகங்கைக் கரையிலிருந்து நூறு மீற்றர் மேற்காக அமைந்திருக்கும் மஸ்ஜிதுல் அக்பர் ஜாமிஆ மஸ்ஜிதும் குடியிருப்புக்குப் பெருமை சேர்க்கும் அல்ஹிக்மா மகாவித்தியாலயமும் அமைந்திருக்கும் காணி அக்குரணையைச் சேர்ந்த கனவான் குருகொட விதானலாகே அப்துல் கபூர் என்ற பெரியாரால்  அன்பளிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  மஸ்ஜிதில்   முதலாவதாக திகர்ரியைச் சேர்ந்த   மௌலவி ஏ. ஏ. எம் மஸ்ஊத் ஆலிம் (பி. 1926 - ம..1988) அவர்களால்  குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. மஸ்ஜித் வளாகத்தில் 2007ம் ஆண்டு முதல் பகுதி நேர ஹிப்ழு மத்ரஸாவும் இயங்கி வருவது சிறப்பானதாகும்.  ஜும்ஆ மஸ்ஜிதுடன் இணைந்ததாக பின்வரும் இடங்களில் தக்கியாக்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கும்புக்கந்துறைப் பிரதேச மஸ்ஜிதின் பணியாளர்களாக ஆரம்ப காலமுதல் லெப்பைகளும் நிர்வாகிகளாக மத்திசங்களும் பணிபுந்துள்ளனர்.  லெப்பைகளுள் அப்துல் மஜீது லெப்பை, முக்தார் லெப்பை, பிரதேசத்தின் முதலாவது மார்க்க அறிஞர் லெப்பைகனி ஆலிம் ஸாஹிப், பத்ருத்தீன் ஆலிம் ஸாஹிப் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். மஸ்ஜித் நிர்வாகப் பணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் மத்திசம்களாகப் பணிபுரிந்து வரலாறு படைத்துள்ளனர். அவர்கள்: ஜனாப். அப்துல் ஹமீது மத்திசம், ஜனாப். யூ. வஹாப்தின் ஹாஜியார், ஜனாப். அப்துல் ஷகூர் -  ஆகியோராவர்.

பிரதேச வர்த்தகத்தில் தடம் பதித்திருந்த கனவான் அப்துல் வஹாப் ஹாஜியாரின் சமய, சமூகப் பணிகள் இன்றும் மக்களால் நன்றியுடன் பேசப்பட்டு வருகின்றன.
(தொடரும்)

 

Post a Comment

0 Comments