எல்லாம் நன்மைக்கே
கடமையைச் செய் ! கடவுளைத் தேடு ! கடவுளைத் தேடிய பின் கடமையைச் செய்! இது நம் மகத்தான பிறவியான குருமொழி. மகத்தான சிந்தனையின் அமுத மொழி. இதை நினைக்கும் போது நம் மன வயலில் துளிர்விடும் ஒரு சிந்தனைக்குறள். நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்காய் அல்லற் படுவத எவன்? (குறள்-379) நல்வினை விளையும்போது நல்லவை எனக்கருதி மகிழ்கின்றவர். தீவினை விளையும்போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ ? என்று கேட்பதன் மூலம் மனித இன மனங்களை ஆற்றுப்படுத்துகிறார் குறள் ஆசான். ஏனெனில் விலங்கினங்களுக்குச் சிந்தனை கிடையாது. அவைகளுக்குத் தெரியாது இவை எல்லாம் மனிதர்களுக்குத்தான். இது கர்ம வினைப் பதிவுகளுக்கு ஏற்ப, ஏற்ற-இறக்கம், குறை-நிறை என மனித இனத்தில் ஒருவருக்கொருவர் மாறுபடும். மனம் பக்குவப்படும் போது சாந்தமடையும் போது, அமைதியுறும் போது தானே புலப்படும்.
இதை புத்தி ஏற்க மறுக்கிறது... ஏனோ ? மனம் பதறுகிறது. நமக்கு மட்டும் ஏன்? இத்தனை துன்பங்கள். கஷ்டத்தை இறைவன் கொடுக்கிறான். நம் காரியம் தடைபடுகிறதே!ஏன்? என்றெல்லாம்நினைக்கிறான்.
இதனைச் சொல்லும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஊரில் ஒரு குடியானவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். சிறிதளவு விளைச்சல் நிலம் இருந்தது. குடியானவன் வீட்டில் ஒரு குதிரையை வளர்த்தான். அவன் மகனும் குதிரையின்பால் மிக அன்பு செலுத்தி, நண்பர்கள் போல் வாழ்ந்து வந்தனர்.
குதிரையுடன் குடியானவன் மகன் வயலுக்குச் சென்று வருவான். ஒரு நாள் மேய்ச்சலுக்குச் சென்ற குதிரை எங்கோ ஓடிவிட்டது.
குதிரை காணாமல் போய்விட்டதால் மகனுக்கு வேதனை. ஊர் மக்கள் இதனை அபசகுணம் எனக் கருதினர். அவர்கள் குடியானவனிடம் சென்று. உனக்கு இது கெட்ட நேரம் என நினைக்கின்றோம். உன்னிடம் இருந்த, நீ வளர்த்த குதிரை காணாமல் போய்விட்டதே ! என துக்கம் விசாரித்தனர். அதற்கு குடியானவனோ ! நான் கவலைப்படவில்லை. எல்லாம் நன்மைக்கே ! எது நடக்குமோ அது நடக்கும் என்று கூறினான். ஊர் மக்களும் இதனைக் கேட்டுச்சென்றுவிட்டனர்.
ஒரு சில நாட்களுக்குப் பின் குடியானவனின் காணாமல் போன குதிரை, மேலும் சில குதிரைகளுடன் திரும்பி வந்துவிட்டது. குடியானவனின் மகனுக்கோ பெருமகிழ்ச்சி. ஊர் மக்களுக்கோ பேரதிர்ச்சி ! பெரும் ஆச்சரியம். அவர்கள் இதைக் கண்டு அனைவரும் திரண்டு குடியானவனிடம் வந்தனர். அவனிடம், உனக்கு இப்போது நல்ல நேரம். அதனால் தான் உன் காணாமல் போன குதிரை பல உயர் ஜாதிக் குதிரைகளை அழைத்து வந்துள்ளது. உனக்கு நல்ல இதயம் தானே ? என்றனர். அதைக் கேட்ட குடியானவன். ஊர் மக்களிடம், இப்போதும் எனக்கு ஒன்றும் மகிழ்ச்சியில்லை. எல்லாம் நன்மைக்கே! எது நடக்குமோ அது நடக்கும் ! என்று கூறினான். ஊரார் இதைக் கேட்டு பேசாமல் சென்றனர்.
குடியானவன் தன் வயலில் ஓரிடத்தில் குதிரைப் பண்ணை அமைத்தான். குடியானவன் மகன் உயர்ஜாதிக் குதிரைகளை அடக்கியும், பழக்கியும் மகிழ்வுடன் இருக்கலானான். ஒரு சமயம் ஒரு முரட்டுக் குதிரையை அடக்கும்போது, அதன் மேலிருந்து கீழே விழுந்துவிட்டால், அவனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. நல்ல வேளையாக உயிர் பிழைத்துக் கொண்டான்.
இதைக் கண்ட ஊரார், மீண்டும் குடியானவனிடம் வந்து, உனக்கு மீண்டும் கெட்ட நேரம் தொடங்கிவிட்டது. உன் மகனுக்கு அடிபட்டு கால் ஊனம் ஆகிவிட்டதே ! என வருத்தப்பட்டனர். அதற்கும் குடியானவன், கலங்காமல் “எல்லாம் நன்மைக்கே ! எது நடக்குமோ அது நடக்கும் என்றான். “என்ன மனுஷனோ இவன்” என்று கூறிக் கொண்டே ஊரார் திரும்பினர். இந்த சமயத்தில் அந்நாட்டு மன்னன் போருக்கு ஆயத்தமாக வேண்டி, ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக படையில் இணைய வேண்டும் என உத்தரவிட்டான். காவலர்கள் வந்து இளைஞர்களை எல்லாம் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
கால் ஊனமுற்ற காரணத்தால் குடியானவனிடம் ஒரே மகனை விட்டுச் சென்றனர். ஊர் மக்கள் புலம்ப, குடியானவனோ இப்பொழுதும் அதையே கூறினான். எல்லாம் நன்மைக்கே! ஆம், இது ஒரு மந்திரச் சொல். ஆக நடப்பது நடந்தே தீரும். இது இயற்கை விதி. இதை மாற்ற நாம் யார்? எதைக் கண்டும் கலங்குவதால், என்ன பயன்? நல்லது நடந்தால் மகிழ்ச்சி. இல்லையெனில் அதைவிட மகிழ்ச்சி.. என ஏற்கும் பக்குவம் வந்தால் எல்லாம் இன்பமயம் ஆகிவிடும். “பொறுத்தவர் துன்பம் அடைவது இல்லை ” என்பது சத்தியவாக்கு... புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை இனிக்கும். மனம் பக்குவப்படும். இயற்கையை நேசிக்கும். உண்மையைப் புரிந்து கொள்ளும்.
இப்போது குறளை மீண்டும் படியுங்கள். பல விஷயங்கள் புரியும் ! துன்பம் கண்டு மனம் கலங்காது. வாழ்க்கை இனிக்கும்.
(தொடரும்)
0 Comments