Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-18


குறள் 645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

மாப்ள.. நீ எதையாவது சொல்லப் போறேன்னு வச்சுக்க. ஏனோ தானோன்னு வாய்க்கு வந்தபடி எதையும் ஒளறிடப்பிடாது. நீ சொல்லுதது ஆயிரத்துல ஒரு சொல்லா இருக்கணும். அதை விட ஒசத்தியா வேற சொல் எதுவும் கெடையாது ங்கிறது சரிபாத்துக்கிடணும். அதுக்கு பொறவுதான் நீ சொல்ல வந்த சொல்லைச் சொல்லணும். 

குறள் 647
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

நம்ம முக்கு வீட்டு முத்து பயா இருக்கான.. அவன் ஒரு வல்லாள கண்டன் மாப்ள. மத்தவொ கிட்ட சொல்ல வேண்டியதை, நல்ல வெளக்கிச் சொல்லுவான். அவொளுக்கு புடிக்குதோ புடிக்கலயோ,  கறாலா சொல்லுததுக்கு சோம்பப் படமாட்டான். என்னவும் நெனச்சிக்குடுவாவொளோ ன்னுல்லாம் பயப்புட மாட்டான். இப்பிடிப்பட்ட முத்துப் பயல எந்த கொம்பனாலும், எந்த வளியிலயும் செயிக்க முடியாது மாப்ளை. 

குறள் 651
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.

ஒரு சோலியைச் செய்ய நமக்கு நல்ல தொணை கெடைச்சுட்டா, அந்த சோலியை சுளுவா நல்ல படியா செஞ்சு முடிக்க முடியும். மாப்ள. 

நாம செய்யப் போற சோலி ஒசந்ததா இருக்குன்னு வச்சுக்கொயேன், அதச் செஞ்சு முடிச்சாக்கா, நமக்கு வேணுங்கிற எல்லாமே கெடைய்க்கும் மாப்ள. 

குறள் 659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

மாப்ள... மத்தவொனுவள பாடா படுத்தி அழ வச்சு புடுங்குன பொருள் எல்லாமே நம்ம அழ வச்சு நம்மகிட்ட இருந்து பொயிரும். 

நல்ல நேர்மையா சேத்த பொருள் நம்மவிட்டு பொயிட்டாலும், திரும்பவும் வந்து நல்ல பலன் தரும் மாப்ள.. 

குறள் 664
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

ஆனையப் பூனையாக்கிருவேன், பூனையை ஆனையாக்கிருவேன்னு,  சொல்றது ஒனக்கு லேசு மாப்ள. ஆனா சொன்னபடி செஞ்சு காட்றது இருக்க.. . அதுதாம் மாப்ள ரொம்ப ஒசத்தி. 

குறள் 666
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

மருமவன... என்ன ஆனாலுஞ் சரி .. ஒரு கை பாத்துரலாங்கிற வைராக்கியத்தோட ஒரு சோலில எறங்குதன்னு வச்சுக்க. அந்த சோலி நீ நெனய்க்க மாதிரி நல்ல முடிஞ்சிரும் மருமவன. 

குறள் 667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

நம்மூர்ல ஆனித் தேரோட்டம் எப்பிடில்லாம் நடக்கும்னு நெனச்சுப் பாரு மாப்ள. அம்புட்டு பெரிய தேரை சிறுசா இருக்க அச்சாணிதான ஓடவைக்கிது. 

அச்சாணி மாதிரி இருந்து மத்தொவளொ ஒசத்திவிடுதவொ இந்த ஒலகத்துல ரொம்ப பேரு இருக்காவொ. அதுனால உருவத்த வச்சு யாரயும் கொறச்சு எடை போட்றக் கூடாது மாப்ள. (தொடரும்)

Post a Comment

0 Comments