விதி வரைந்த ஓவியம்....!

விதி வரைந்த ஓவியம்....!


வருங்காலக் கனவு 
எந்தப் பெண்மைக்குள்தான்
வராத உணர்வு?
இமைகளை மூடிக்கண்டேன்
எனதுலகை...

இளமைக் கனவுகளுடன் 
என் இலட்சிய கனவுக்குமான 
இலட்சணங்கொண்டவன்...
தொட்டாக வேண்டும் 
எனத் துணிந்தால்
வானம்  வரை  
ஏந்திப் பிடிப்பவன்...

"அவன்" கள் மலிந்திருந்தனர்
ஆனால் 
ஒளிமயம்  தேடுபவன் 
நிலவைச் சூழ 
இருள் என்று மறுக்கிறான்

என்னை சுற்றி ஏராளம்தான்
இந்த பூமி விசாலம் 
நானிருக்க 
ஓரடி நிலம் இல்லை
வீடென்ன ஒரு கூடில்லை
சுமை பாராது சுமந்தவர் 
ஓய்வெடுக்கச்சென்றார்
ஓயாது அழுதேன்
அன்பர்கள் அறியாமல்
பாதி வயிறு 
வெறுமையிலும்
மீதி வயிறு 
பொறுமையிலும் கிடந்தேன்

கொஞ்ச நஞ்ச அறிவும்  
கண்டு சகிக்க 
கணிசமான அழகும் 
வார்த்தைகளால் 
வரையறுக்க முடியாக் 
காதலும்தான்
வருபவனுக்கென்று 
வைத்திருந்தேன்

வகையும் நகையுமாய் 
அங்கீகரிக்கப்பட்ட  
வெகுமானங்களுக்கு     
எவன்தான் விதி விளக்கு!
நான் தேடுவது போல் 
ஒருவன் என்னைத்தேட
அவனுக்கென்ன கிறுக்கு!

கனவுகள் வலியெடுத்தது
வயது நகர்கிறது 
வருபவனுக்கு சரி சொல் என்றார்கள்

கடிகார முள் 
என்னையும்தான் 
குத்திக் கிழிக்கிறது.
கனவுகளை கொன்று விடத்தான்
நானும் காலமெடுத்துக் கொண்டிருக்கிறேன்

ஒன்றுமில்லாதவளுக்கு 
ஒரு இதயம் கூடவா 
இருக்க முடியாது?
பெரிதாய் என்ன
நன்மைகளோடு வாழ
ஒரு நல்லவனை 
வரச்சொல்லுங்கள் என்றா
நான் வாய் திறக்கக்கூடாது?

பக்தர்கள் எல்லாம் 
இறைவனிடம் மட்டும் 
எதிர்பார்ப்பவர் அல்லர்
வாழும் வயதில் 
நீ வாழ வேண்டும் என்றார்கள்

சரி என் விருப்பிற்கு 
விளங்கிட்டு 
வரும் நெருப்பிற்கு
விறகாகிறேன் என்றேன்

என்றாலும் என்னவர்கள் 
வஞ்சம் இளைப்பாரா 
எனக்கவர்கள்

அவ்வளவு சுலபமல்லதான்  
தொல்பொருளாய் தேடினார்கள்
அந்த தொல்லைக்  காரனை

கண்டெடுத்ததாய் சொன்னார்கள் 
அண்டத்தில் அரிதாகப் பிறந்தவனை

என்ன ஒரு தலைக்கனம்
ஒரு நாள் தடயம்தான்
பெண்பார்க்கும் படலம்
குணங்குறி அறிந்து 
கூட்டி வாருங்கள் என்றேன்

காத்திருந்த  கணமொன்றில் 
என் பிரார்த்தனைகளும்
உன்  பிராயத்தனங்களும் 
ஒருமித்த காலக்கோட்டில்
நீ என் முன் நின்றாய்.....

தருவதற்கு 
என்னைத் தவிர 
ஒன்றும் இல்லை என்றேன்....

பெறுவதற்கும்தான்
நீ மட்டும் போதும்
வா போகலாம் என்றாய்....
 
நீ எதிர்பார்க்கும் நன்மைகளை
என் தன்மைகளில் தர முடியும்
அவ்வளவேதான் 
உடுத்த உடுப்பும்
நடக்க செருப்பும்
நீ போட்டுக்
கூட்டிப்போனால்தான் என்றேன்.
 
உன் உள்ளமும் 
உணர்வும்,
படைத்தவன் மீதான 
ஒரு பயமும் 
நான்  வாழப்போதுமடி என்றாய்
   
ஏதுமற்றவளுக்கு
யாதுமாக வேண்டும் என 
எண்ணம்  வைத்திருந்தேனடி என்றாய்
 
நாளைக்கென்று 
நான் வைத்துள்ள 
நம்பிக்கைகளைச் சொன்னேன் 
நானிருக்கிறேனடி என்றாய்
 
நன்றி நாயனே 
வென்றெடுத்துவிட்டேன்
இவன்தான் அவன் 
யுகங்களின் கண்ணீரை 
ஒரு மித்து 
தோல் சாய்ந்து
அழுது தீர்க்கப்போல் இருந்தது

மணக்கொடை  தந்தாய்
என்னை அழைத்துப்போக வந்தாய்

கேட்டளவு  கொடுப்பவனா 
இறைவன்
உன் தகுதிக்குரியவள் 
தனியானவள்
நான் கதியின்றி 
விதியானவள் என்றேன்

என்  விலாவிலிருந்து 
விதிக்கப்பட்டவளே
என் பிரார்த்தணைகளின் 
பிரதிபலிப்பு நீயடி என்றாய்

என்னை அழைத்துப்போக 
வந்தாயே ஏ அன்பே...!

Post a Comment

Previous Post Next Post