Ticker

6/recent/ticker-posts

Ad Code



புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 91


கல்லடிவாரம் மரவிழுதில் தொங்கிவந்த செரோக்கி, அந்தப்புனித பூமிக்குள் நுழைந்ததும்   தம்பமரத்தடியில் தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த யோகியார் கண் திறக்கும் வரையும்  அடக்க ஒடுக்கமாக  நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் தியானத்திலிருந்து மீண்ட யோகியார்,

“குழந்தாய் நீ வந்து விட்டாயா?  நீ வருவாய் என எதிர்பார்த்திருந்தேன்!” என்று காம்பீரம் கலந்த தொனியில் குறிப்பிட்டபோது, செரோக்கி அதிர்ச்சியடைந்தான்.

‘தனது வருகை யோகியாருக்கு எப்படித் தெரிந்தது?’ குழம்பிப்போன அவன் அதனை  வெளிக்காட்டிக்கொள்ளாதவாறு தலை குனிந்து  யோகியாருக்கு வந்தனம் செலுத்தினான்!

தனக்கு முன்னாள் வந்து அமரும் படி யோகியார் கை காட்டியதும் சிதறிக்கிடந்த பொன்னிற இலைகளுக்கு மேல் அவன்  அமர்ந்து கொண்டான்.

“வனத்துக்குள் சிறைப்பட்டிருந்த பாரிய சாபமொன்று உன் துணைவி  காப்பற்றப்பட்டதன் மூலம் வெளியேறிச் சென்றுவிட்டது! அது எப்போதாவது   ஒருநாளில் உலகை நிலைகுலையச் செய்யப் போகின்றது. உன் துணைவி பிழைத்துவர ‘மேதகுசக்தி’ ஒன்று  காரணமாகியுள்ளது. ஒரினோகோ ஆற்றினுள் விழுந்துவிட்ட எவருமே  இதுவரை பிழைத்து வந்ததில்லை. அந்த வகையில் இந்நிலத்தின் வரலாற்றைப்  புரட்டிப்போட்டவளாக உன் துணைவி ஈடேற்றம் பெறுகின்றாள். அதனை இந்தக் கிராமம் கொண்டாட வேண்டும்!”

 “அதற்காக  நாங்கள் என்ன செய்ய வேண்டும் யோகியாரே?” செரோக்கி மிகுந்த பணிவுடன், மெல்லிய தொனியில் கேட்டான்.

“அந்தக் கொண்டாட்டம் “மேதகுசக்தி”க்கு நன்றிக்கடனாக அமைய வேண்டும்!”

“நன்றிக்கடனை நாங்கள் எவ்வாறு  செய்யலாம் பெரியவரே?” செரோக்கி கேட்டான்.

 “உன் குடும்பத்தவர் வனத்துக்குள் சென்று அங்கு விரவிக்கிடக்கும் ஒன்பது விதமான பழவர்க்கங்களைப் பறித்து வர வேண்டும். அவை  உன் துணைவியின்  பாரத்திற்குச் சமனானதாக இருக்கவும் வேண்டும்.  உன் துணைவி அவற்றைத்  தன் கரங்களாலேயே கிராமத்தவர்களுக்குப் பங்கீடு செய்யவும்  வேண்டும். புரிந்ததா?” யோகியார் தனக்கேயுரிய  கர்ணகடூரத் தொனியில் செரோக்கியை விழித்துக் கேட்டார்.

“புரிந்தது  யோகியாரே! தங்கள் நாட்டப்படி அனைத்தும் நிறைவேற்றப்படும்!” என்றவன், யோகியாரிடமிருந்து பணிவுடன் விடை பெற்றுக்கொண்டவனாக  மிதிபடும் பொன்னிறச் சருகுகளின் ஓசையோடு அங்கிருந்து மெல்ல நடந்து வேர்நாரின் துணை கொண்டு ‘பெரியகல்’ உச்சி நோக்கி ஏறலானான்!
(தொடரும்)   



Post a Comment

0 Comments