Ticker

6/recent/ticker-posts

Ad Code



அன்பின் சுவடுகள்!


தனிமையை 
விரும்பி நேசிப்பவனுக்கு
தற்போது சூழ்ந்திருக்கும்
அடர்மௌனத்தால் 
இலாபமின்றி பேரிழப்பு 
ஏதுமில்லை.

ஆதவன்
உதிக்கும் வேளையிலும் 
அஸ்தமிக்கும் தருணங்களிலும் 
கொண்டையில் 
மலராய்ச் சூடிக் கொள்கிறது 
மலைகள்.

நீ பேசத் தொடங்கியதும்
இதயத்தை விசாலப் படுத்தியபடி
செவிகள் இரண்டையும்
ஒலிவாங்கி ஆக்குகிறேன்.

கருணை நிரம்பி வழியும்
அத்தனை இடங்களிலும்
அன்பின் சுவடுகளே
வியாபித்திருக்கிறது.

என்னை யாரோடு 
அனுமதித்தாலும் அவர்களாக 
ஒருபோதும் நான் ஆனதே இல்லை.

வழக்கம்போல் 
சிரமம் பாராமல் வார்த்தை 
ஒன்றினைத் தந்து விட்டாய். 
அதற்கான ஜீவனைத் தேடுவது  
என் பணியாகிப்போனது.

எல்லோருக்குமான 
வகுப்பறையில் எனக்கான 
வாழ்க்கைப் படங்களை 
நானே வாசித்துக் கடக்கிறேன்.

என்னை புறத்தில் 
எங்கு தாக்கினாலும்
அகத்தின் ரணங்களை
நான் மட்டுமே காண்கிறேன்.

என் மீது மோதிய 
உனக்கு
தீராத காயங்கள் எனக்கு.

என் நிழலை நீ
முழுமையாக ஆக்கிரமித்த போது
என்னில் வெளிச்சம்.

எனக்கு 
விடுதலைக் கொடுத்துவிட்டு
என் கனவுகளுக்குக் காவலை
பலப்படுத்துகிறீர்கள்.




Post a Comment

0 Comments