Ticker

6/recent/ticker-posts

பொடுகுத் தொல்லை

கடந்த பல வருடங்களாக தலையில் பொடுகு ஏற்படுகிறது. இதற்காக பல ஷம்பூக்களை பாவித்தும் பலன்கிடைக்கவில்லை . இதிலிருந்து மீள ஏதேனும் சிகிச்சை முறைகள் உள்ளனவா? விளக்கம் தரவும்.
ரஸானா, புத்தளம்

பதில்: எம்மில் அனேகமானோர்கள் தலைமுடியைப் பேணுவதில் மிகவும் அவதானத்துடன் செயற்படுகின்றார்கள். தலை முடிக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டால் உளரீதியாகப் பாதிக்கப்படுபவர்களும் உண்டு. அதேபோன்று தலை முடியின் நலனைப் பேணுவதற்காக பல வகையான விட்டமின்களையும், வெளிப்பூச்சு மருந்துகளையும் பாவிப்பதில் இளைஞர்கள் முன்னணியில் உள்ளனர்.

தலைமுடிக்கு ஏற்படக் கூடிய பல நோய்களில் Dandruf அல்லது பொடுகு ஒரு முக்கியமானதும் பொதுவாகக் காணப்படக் கூடிய நோய் நிலையுமாகும். இது ஆண், பெண், வயது வித்தியாசமின்றி பொதுவாக எல்லோரையும் தாக்கக் கூடியது.

பொடுகு என்றால் தலையைச் சூழ்ந்திருக்கும் தோல்களின் வளர்ச்சி சாதாரண நிலையை விடவும் கூடுதலாக நடை பெற்று பழைய தோல் கலங்கள் இறந்து வெளியேறும் நிலையைக் குறிக்கும். பொதுவாக இளம் வாலிபர்களுக்கு இந்நிலை ஏற்பட்டால் அவர்கள் பாரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகி சந்தையில் கிடைக்கக் கூடிய பல வகையான வெளிப்பூச்சு மருந்துகளையும் ஷம்பூ (Shampoo) க்களையும் வைத்தியர்களது ஆலோசனையின்றி ஒன்றன் பின் ஒன்றாகப் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ச்சியாகப் பல மருந்துகளைப் பாவிக்கும் போது நிவாரணம் கிடைப்பதற்குப் பதிலாக ஒரு சில வேளைகளில் பொடுகு மேலும் அதிகரிக்கக் கூடிய நிலையும் ஏற்படலாம். 

பொடுகு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. வரட்சியான தோலை உடையவர்களுக்கு பொடுகு இலகுவில் ஏற்படலாம். அதேபோன்று ஒரு சிலரது முடி எண்ணைய்த் தன்மையுடையதாக இருக்கும். இவர்களுக்கும் இலகுவில் பொடுகு ஏற்படலாம். 

இது தவிர முடியின் அழகைப் பேணுவதற்காக பாவிக்கக்கூடிய வெளிப்பூச்சுப் பொருட்களான கிரீம் வகைகள், ஷம்பூ, டை வகைகள் போன்றவைகளும் பொடுகை ஏற்படுத்தக் கூடியன. மேலும் தலையின் சுகாதாரத் தன்மை பேணாமல் இருத்தல் அடிக்கடி ஷம்பூக்களைப் பாவித்து தலையைக் கழுவுதல் போன்ற நிலைகளிலும் பொடுகு ஏற்படலாம். 

பொடுகு ஏற்படுவதற்குச் சில விட்டமின்களும் காரணமாக அமைகின்றன. விஷேடமாக விட்டமின் பீ வகைகளின் குறைபாடு முக்கியமானவை. அத்துடன் விட்டமின் E, Zine போன்றவைகளும் முக்கியமாகும். 
மேலும் தொடர்ச்சியான மன அழுத்தமுடையவர்களுக்கும் இந்நிலை ஏற்படலாம். இது தவிர தோல் நோய்களான எக்சீமா, சோரியேசிஸ், பாகின்சன்ஸ் நோய் போன்ற நோய் நிலைகளிலும் பொடுகு ஏற்படும்.

அத்துடன் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் சில ஹோர்மோன்களின் குறைபாடு புற்று நோய்க்குக் கொடுக் கக்கூடிய ஒரு சில மருந்துகளிலும் கூட இந்நிலையேற்படலாம். 

இந்நோயின் அறிகுறிகளாக தலை அரிப்பு சில வேளைகளில் துர்நாற்றம், தலையில் சிறிய வெள்ளைத் துணிக் கைகள் தென்படல் போன்றவைகள் இருக்கலாம். 

எனவே பொடுகு ஏற்படாமல் தடுக்க வேண்டுமாயின் மேலே குறிப்பிட்டுள்ள விடயங்களில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். பொடுகு நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் உணவு விடயத்திலும் அன்றாட பழக்க வழக்கங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். 

அதிக மா தன்மையுடைய உணவு வகைகளையும், சீனி உட்கொள்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சமைக்காத மரக்கறிவகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நன்று. மேலும் பொரித்த உணவு வகைகள், சொக்லேட் போன்றவைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் தினமும் குளிப்பதோடு காரத்தன்மையுடைய சவர்க்காரம் அல்லது ஷம்பூக்களைப் பாவிக்காமல் வைத்தியர்கள் சிபார்சு செய்யும் ஷம்பூவையே பாவிக்க வேண்டும்.

குளிக்கும்போது தலையை நன்றாகத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் தேங்கி நிற்கும் பொடுகுகள் வெளியேறுவதற்கு உதவியாக இருக்கும்.

மேலும் இயற்கைப் பொருட்களடங்கிய ஷம்பூக்களைப் பாவிப்பது நன்று. இலையை இட்டுக் காய்ச்சிய நீரினால் தலையைக் கழுவுதல் வேண்டும். கற்றாழையிலிருந்து பெறப்பட்ட ஜெல் பொடுகுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாகவுள்ளது. 

மேலும் வைத்தியர்களது ஆலோசனைப்படி விட்டிமின்களையும் பொடுகு உருவாகுவதற்கான காரணிகளுக்குரிய மருந்துகளையும் பாவிக்க வேண்டும். 

யூனானி வைத்தியத்துறையிலும் இயற்கை மூலிகையினால் தயாரிக்கப்பட்ட மருத்துவக் குணமுள்ள எண்ணைய்வகைகளும், சாம்போக்களும் மற்றும் உட்கொள்ளக் கூடிய மருந்துவகைகளும் உள்ளன. 

இறுதியாக வாசகர்களுக்கு விஷேடமாக இளம் வாலிபர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது வைத்தியர்களது ஆலோசனையின்றி Hair gel, Hair Cream, Hair dye போன்றவைகளைப் பாவிப்பதன் மூலமே பொடுகு, இள வயதில் முடி நரைத்தல் உட்பட பல்வேறு முடி சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதில் பிரதான பங்குக் காரணியானதாக இருப்பதால் இவைகளைப் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.









Post a Comment

0 Comments