20 ஓவர் உலக கோப்பைக்கு மேலும் இரண்டு அணிகள் தகுதி பெற்றன

20 ஓவர் உலக கோப்பைக்கு மேலும் இரண்டு அணிகள் தகுதி பெற்றன

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

20 ஓவர் உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் விளையாடும்.

முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் -12 சுற்றுக்கு தகுதிபெறும். இந்த சுற்றில் விளையாடும் 12 அணிகளும், 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 23-ந் தேதி மோதுகின்றன.

முன்னாள் சாம்பியன்களான இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நமீபியா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட 8 அணிகள் முதல் சுற்றில் விளையாடும். 4 நாடுகள் தகுதி சுற்று மூலம் தகுதி பெறும்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஓமன் நாட்டில் உள்ள அல்அமரத் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த தகுதி சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதன் மூலம் இந்த இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி அரை இறுதியில் நேபாளத்தை 68 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய நேபாளம் 18.4 ஓவர்களில் 107 ரன்னில் சுருண்டது.

அயர்லாந்து அணி அரை இறுதியில் 56 ரன் வித்தியாசத்தில் ஓமனை தோற்கடித்தது. முதலில் ஆடிய அயர்லாந்து 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய ஓமன் அணி 18.3 ஓவர்களில் 109 ரன்னில் சுருண்டது.

இன்னும் 2 நாடுகள் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதிபெற வேண்டியுள்ளது.


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post