சுதந்திரத்திற்கும் சிறுவர்களுக்கும் நிறைய தொடர்பிருக்கிறது.
சுதந்திரம் என்றாலே சிறுவர்கள் அனுபவிக்கும் அந்த கட்டுப்பாடுகளற்ற பருவம், அச்சமில்லாத வாழ்வு, வேறுபாடுகளோ, பேதங்களோ, ஏற்றத்தாழ்வோ பார்க்காத குதூகலமான அந்த சமத்துவக் குணம் அப்பப்பா..
இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
அது போலவே இந்த சுதந்திர தினத்திற்கும், சிறுவர்ளுக்கும் நிறைய நிறைய தொடர்பிருக்கிறது.
அது என்ன ?
முதலில் அன்றைய நாள் அவர்களுக்கு ஒரு விடுமுறை நாள். விடுமுறை என்றால் சாதாரணமான விடுமுறை அல்ல.வித்தியாசமான ஒரு கொண்டாட்ட தினம்.
எங்கும் ஒருவித மகிழ்ச்சி; பாடசாலைகளில், ஒலிபெருக்கிகளில் தேசிய கீதம் முழுமையாக இயற்றப்பட்டு கொண்டாடப்படும் நாள்; தொலைக்காட்சியில், வானொலியில் ,பொது இடங்களில் பல குரல்கள் ஒரே தலைப்பில் பேசப்படுவதை செவிமடுக்கும் நாள்;எங்கும் சாகசங்கள்..அவர்களுக்குள் பல உற்சாகங்கள் .
தான் பிறந்து வளர்ந்த நாட்டின் வரலாறு, ஆண்டு வந்த அரசர்கள், ஆட்சியாளர்கள், சுதந்திர தினத்தின் பின்னணி, அரசியல் எதுவுமே பெரியளவு தெரியாதவர்களாக இந்த பிஞ்சுகள் இருந்தாலும், அவர்களுக்கு இந்த நாட்களில் தெரிந்ததெல்லாம் 'ஒன்றே ஒன்றுதான்'.
ஆம்!
தன் வீட்டு வாயில்களிலும், போடப்பட்டிருக்கும் கேற்றுகளிலும், கம்பங்களிலும், கூரை இடுக்குகளிலும், முற்றத்து மரங்களிலும் ,கதவுகளில் ஏன் தான் ஓட்டிப் பழகும் விளையாட்டு சைக்கிளிலும் கூட தேசியக் கொடியை பறக்கவிட்டு ,ஏதோ தங்களுக்கும் அந்த கொடிக்கும் நீண்ட கால தொடர்பு இருப்பதாய் நினைத்து, கம்பீரமாக வலம் வரும் அவர்களின் தோரணையும் ,அதை அனுபவிக்கும் சந்தோஷமும் நம் ஒவ்வொரு வீட்டிலும் இவர்களுக்கு மத்தியில் நிகழாமல் இல்லை.
சுதந்திரதின கொண்டாட்டங்கள் முடிந்தாலும், பெரும்பாலான வீடுகளில் இந்த தேசியக்கொடிகள் பலநாட்கள்வரை அப்புறப் படுத்தப் படாமல் இருப்பதற்கும் இவர்கள்தான் காரணம்.
அவர்கள் மகிழ்ச்சி எமது மகிழ்ச்சியை விட இரட்டிப்பானது என்றிருக்கும் போது ,அந்த மகிழ்ச்சிக்குரிய காரணத்தை வளர்ந்தவர்களாகிய நாம் கண்டிப்பாக அவர்களுக்கு விளக்குவது கடமையாகும்.
தன் தேசத்தை கொண்டாடும் ஒரு தருணத்தில், அந்த தேசத்தோடு கொண்ட நேசத்தை உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில், சிறு வயதிலேயே அது பற்றிய அறிவை வழங்குவதற்கு நாம் முன்வர வேண்டும்.
சுதந்திர தினம் என்றால் என்ன? என்று கேட்டால்,ஒரு வேளை பதில் கூறமுடியாமலும் அல்லது வேறொரு பதிலை கூறும் நிலையிலும், அல்லது நிலையான பதில்களை கூறக்கூடிய சில பிள்ளைகளை காண்கின்றோம் .
எம் சிறார்களுக்கு இலங்கை தாய்நாட்டைப் பற்றிய விளக்கங்களை கொடுப்பது என்பது ஆசிரியர்களது கடமை மட்டுமல்ல. வீட்டிலிருக்கும், இலங்கையரான நம் ஒவ்வொரு வளர்ந்தோர்களினதும் பொறுப்பு.
வீட்டிலுள்ள சிறுவர்களுக்கு, தாய்நாட்டின் வரைபடம் , சின்னங்கள்,காட்சி, தோற்றம், அமைப்பு, சிறப்புகள், அழகான இடங்கள் என்பவற்றை அவர்வப்போது வர்ணித்து காட்டுங்கள்.இதன் மூலம்"எந்நாடு போனாலும் என் நாடு போல் வருமா "என்று இத்தேசத்தின் மகிமை அவர்களுக்குள் நிறைந்துவிடும்.இதன் மூலம் தேசத்தை காதலிக்கும் உணர்வை சிறுவயதிலிருந்தே பெற்றுவிடுவார்கள்.
நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னணியை சின்ன சின்ன சம்பவங்களாக அவ்வப்போது சுவாரசியமாக கூறுவதன் மூலம்,அவர்களின் மனதிற்குள் வரலாற்றை பதித்து விடுங்கள்.
அதில் ஒவ்வொரு சமூகத்தினதும் பங்களிப்பு, தியாகம் என்பவற்றை உணர்த்திக் கூறுங்கள்.
அதன்மூலம் அங்கு சமூகத்திற்கு இடையிலான ஒற்றுமை அவர்களுக்குள் வளர்ந்து விடும்.
எமது பிரதேசங்களில் டவுன்களில் சர்ச்சும், அடுத்த வீதியில் இருக்கும் பன்சாலையும், தெருவோர கோயிலும், சந்தியில் இருக்கும் பள்ளிவாசலும் அவர்கள் கண்களுக்கு அன்றாட வாழ்க்கையில் படாமல் இல்லை.
இந்தத் தளங்கள் எல்லாம் அவரவர்களுக்குரிய புனித ஸ்தலங்கள் . நமது மார்க்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதுபோன்றதொரு மதிப்பையே அவர்களுக்கும் நீ கொடுக்கவேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.
அதனால் அவர்களுக்கு *மதங்கள் என்பன புனிதமானவை. அவை அவமதிக்க படக்கூடாது* என்ற உயர்ந்த பண்பு உருவாகி விடும்.
"மகனே.. மகளே! நீ சேர்ந்து விளையாடும் மாலாவும், சரத்தும், முகம்மதுவும், அன்டனியும் இவர்கள் எல்லாமே உன் நண்பர்கள்..நீங்கள் தான் இந்த நாட்டின் அழகு மலர்கள்..ஒவ்வொரு நாளும்,நாட்டை அழகுபடுத்துபவர்கள்"
என்ற இணக்கப்பண்பை உணர்த்துங்கள்.
இதன்மூலம் அவர்களுக்கு அங்கு , ஒரு அழகான இலட்சியம் பொறுப்பில் வந்து விடும்.
நாட்டின் பிரச்சினைகள், இக்கட்டான சூழ்நிலைகள், நமக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடியவையாக இருப்பினும்,அதனை உங்கள் பேச்சில் வெளிப்படுத்தும் போது நாகரீகமான முறையில் நடந்து கொள்ளுங்கள்.
இதன்மூலம் நம் பிள்ளைகளும் பல இனம் கொண்ட ஒரு சமூகத்தில் நாகரீகமானவர்களாக பிரதிபலிக்க படுவார்கள் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பெரியவர்களின் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த, பிஞ்சுகளையும் அவர்களின் கள்ளங்கபடமில்லா பருவத்தையும் பகடைக்காய்களாக எடுத்து விடாதீர்கள்.
நாட்டை இழிவு படுத்தும் வார்த்தைகள் ,நாட்டு நிலைமைகளை,பிற இனத்தவரை , மதத்தை, ஏதோ ஒரு தவறை விமர்சித்து அதனைக் கேலிக்குள்ளாக்கி வசனங்களையோ சிறுவர்கள் மூலமாக பாடல்களையோ பதிவேற்றி,அவர்களுக்கு என்னவென்றே அர்த்தம் தெரியாத வார்த்தைகளை பேச வைத்து, உங்கள் சந்தோஷத்திற்காக பதிவெடுத்து பகிர்வதால் அந்தப் பிஞ்சுகளின், குழந்தை பருவம் உங்களால் கலங்கடிக்கப்படுகிறது என்பதை மறவாதீர்கள்.
இது கூட ஒரு வகையில் துஷ்பிரயோகம் தான்
காவி உடையும்,கருப்பு பர்தாவும், பூஜை ஒலியும், கரோல் கீதங்களையும், பற்றி தாராளமாக உங்களிடம் வினவ விடுங்கள்.. உங்கள் பதில்கள் நாட்டின் பிற சமூகத்தை நேசிக்க வைப்பதாக அமையட்டும்.
இதுதானே வழிமுறை.இதுதானே இஸ்லாமிய நெறிமுறை.எமது சமூகத்திற்குள் மாத்திரம் ஒற்றுமையைப் பலப்படுத்திக் கொள்ள சொன்ன மார்க்கம் அல்ல இஸ்லாம். பிறரது கடவுள்களை கூட ஏசாதீர்கள் என்று அவர்களது உரிமையை, சுதந்திரத்தை கொடுக்கச் சொன்ன வசனங்களை எப்பொழுதும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள். அதைக் கோடிட்டுக் காட்டுங்கள்.
இப்படி, பல இன மக்களை கொண்டு ஒரு நாடு என்று இந்த இலங்கை என்று சொல்வதற்கு எம் சிறார்களுக்கு இப்படியும் செய்யலாம்..?வெவ்வேறு வகையான மலர் செடிகளை கொண்டு ஒரு சாடியை அலங்கரிக்கவும்.
அதற்கு ஒற்றுமை என்ற பசளையும், நேசம் என்ற நீரும், மட்டுமே இதன் செழிப்புக்கு தேவை என்றும்,"இதோ இது போன்ற அழகை எதிர்பார்த்து சுதந்திரம் பெற்றது தான் இந்த நாடு.இதற்காக உழைத்தவர்கள் தான் நமது தலைவர்கள்.
இனி இது உங்கள் கையில்.."
என்று கூறிப் பாருங்கள். அவர்களுக்கு நிச்சயம் இந்த உதாரணம் பிடித்துப் போகும்.அதில் ஆசை பிறக்கும். தேசப்பற்றும் சிறக்கும்.
எனக்கும் உங்களுக்கும் அவர்களுக்கும் ஏன் எல்லோருக்கும் இது ஒன்றுதானே இன்றைய நாளின் தேவை??
இந்த நாட்டில் சுதந்திரம் பெற்ற ஒரு இலங்கையன் நான் என்ற உணர்வை இப்பொழுதே வழங்குங்கள். இந்நாட்டை விட்டுக் கொடுக்காத மன நிலையை அவர்களுக்குள் உருவாக்குங்கள்.ஏனெனில் நாளைய எதிர்காலமே அவர்கள் தாம்.
சுதந்திர தின வாழ்த்துக்கள்!
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments