புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 100

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 100


புரோகோனிஷ் கிராமத்தவர்  “ஓரினகோ” ஆற்றங்கரையில் கூடி நின்று, தமக்கேயுரிய வனத்துப்பாடல்களைப் பாடியவாறு நடனங்களை ஆடிக்கொண்டிருந்தனர்!

துலாவின் ஒருபக்கம்  அலங்கரிக்கப்பட்டு அதன்   பீடத்தில்   ரெங்க்மா அமரந்திருந்தாள்.  

வனத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒன்பது வகைப் பழங்கள் துலாவின் அடுத்த பக்கத்தில்  அடுக்கப்பட்டிருந்தன. 

அலங்கரிக்கப்பட்ட பீடத்தில்  நிலத்தைத் தொட்டவாறிருந்த  ரெங்க்மாவின் கால்கள், மறு பக்கத்தில் பழங்கள் அடுக்கப்பட்டதால்,   தரையிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, வெகுதூரம் உயர்ந்து விட்டன!

அந்த நேரத்தில்தான் இர்வின் வேர்த்து விறுவிறுத்து அங்கு வந்து சேர்ந்தான்!

அவனைக் கண்டதும் செரோக்கியும், ரெங்க்மாவும்  ஆச்சரியப்பட்டதில் வியப்பில்லை!

செரோக்கி குடும்பத்தினர்  ஆற்றங்கரைக்கு  வந்த விடயம் பற்றிய எந்தத்தகவலும் அறியா நிலையில்,  இர்வின்  எப்படி இங்கு  வந்தான்?

நகரத்து வாழ்க்கையில் சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்ட அவனால் காரிருள் சூழ்ந்த இந்தக் கானகத்தினுள், தன்னந்தனியாக, காததூரம் நடந்து  எப்படி வரமுடிந்தது?

களைத்துப்போய் வந்திருக்கும் தனது நண்பனிடம்  கேள்விகள்  கேட்டுத் தொந்தரவு படுத்தவிரும்பாத செரோக்கி, கரையோரத்திலிருந்த மரக்குற்றியில் அவனை உட்கார வைத்து,  தாம் குவளையில் கொண்டுவந்திருந்த மூலிகைக்கஞ்சை சிரட்டை ஒன்றில் அள்ளியெடுத்து  இர்வினிடம் கொடுத்து,  அவனை அருந்தச்செய்தான்!

நடந்து வந்த களைப்பும், சிந்திய வியர்வையால் ஏற்பட்ட  தாகமும்  அதனை மொட மொடவென்று அருந்தச் செய்தது.

குள்ளர்கள் செரோக்கியிடம்  நாணயக்கட்டினை ஏன் கொடுத்தார்கள், எதற்குக் கொடுத்தார்கள்? என்ற கேள்விகள்  தன்னை நச்சரித்துக் கொண்டிருந்த விடயத்தை தவிர,  தான் செரோக்கியைத்தேடி வந்தது முதல்,  கிராமத்தில் எவரையும் காணாததால் தான் அதிர்ச்சியடைந்த நிலையில்  ‘பெரியாக்கல்’ வரை சென்றபோது, கல்லடிவாரத்திலிருந்த பெரியவர் தந்த அறிவுறுத்தல் வரை சகலதையும் அவன் செரோக்கியிடம் ஒப்புவித்து விட்டு,  தான் தன்னந்தனியே வனத்தினுள் நடந்து வந்தபோது எதிர்கொண்ட   சங்கடங்களை செரோக்கியிடம் ஒவ்வொன்றாக... ஒன்று விடாமல் கூறி முடித்தான்!

தனது பாலிய நண்பன் இர்வின், தன்னிடமும் தனது குடும்பத்தாரிடமும் கொண்டிருந்த அன்பையும் பாசத்தையும் நினைத்து செரோக்கி வியந்ததில் வியப்பில்லை!

வனவாசிகளின் உச்சந்தொட்ட வனத்துப்பாடல்கள், அவர்களது நடனத்தை வெறித்தனமாக்கிக்கொண்டிருந்தது!  
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post