“சொற்ப பணத்திற்காக கொத்தடிமையாக்கப்பட்ட மூன்று குடும்பங்கள்” - 11 பேரை அதிரடியாக மீட்ட அரசு அதிகாரிகள் !

“சொற்ப பணத்திற்காக கொத்தடிமையாக்கப்பட்ட மூன்று குடும்பங்கள்” - 11 பேரை அதிரடியாக மீட்ட அரசு அதிகாரிகள் !

திருப்பெரும்புதூர் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்த 7 ஆண்கள் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையை வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை மூலம் மீட்டுள்ளனர்.

பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உள்ள ஒருகுறிப்பிட்ட சமூக மக்கள் இன்றளவும் பின் தங்கிய நிலையில் தான் உள்ளார்கள். குறிப்பாக இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி உலகத்தையே சுருக்கியுள்ளது. உலகில் எந்த பகுதியில் உள்ளவரையும் எளிதில் தொடர்புக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டோம். ஆனால், வாங்கிய சொற்ப பணத்திற்காக மனிதர்கள் கொத்தடிமையாக்கப்பட்டுவதை தடுக்க முடியவில்லை; கொத்தடிமையாக்கப்பட்டு துயரத்தில் உழல்கிற மனிதர்கள் பற்றி அவ்வப்போது செய்தித்தாள்களில் படித்துக் கடந்துவிடுகிறோம்.

ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் தொடர்ந்து கொத்தடிமை முறையில் சிக்கிக்கொள்ள என்ன காரணம்; அதனைத் தடுக்க என்ன வழி என்ற விரிவான விவாதம் நமது சூழலில் இதுவரை உருவாகவில்லை. ஆனாலும் கொத்தடிமைகளை மீட்க திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், திருப்பெரும்புதூர் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்த 7 ஆண்கள் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையை வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை மூலம் மீட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த மண்ணூரைச் சேர்ந்த வேணு என்பவரின் கட்டுப்பாட்டில் மண்ணூர் ஏரிக்கரை பகுதியில் சவுக்கு மரம் வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபட்டுவந்த மதுராந்தகம் அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், அவருடைய மனைவி சாந்தி, சஞ்சீவி, அவருடைய மனைவி சித்ரா, சங்கர், அவருடைய மனைவி சாந்தி, அவர்களுடைய 11 வயது ஆண் குழந்தை, மற்றும் சுப்பிரமணி, ராஜி, வந்தவாசி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், ஏழுமலை ஆகிய 11 கொத்தடிமைகளை மக்களுக்கான மறுவாழ்வு நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் புகாரின்பேரில் திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்தர் வட்டாட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர் தலைமையில் மீட்டனர்.

அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்டவர்களை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விடுதலை சான்று, அரிசி, பருப்பு மற்றும் ரொக்கம் தலா ஆயிரம் ரூபாய் வழங்கி இருளர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
kalaignarseithigal

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post